வானம் தொட்ட சிகரம்!



இயக்குநர் சரண்

இயக்குநர் கே.பாலசந்தரின் மறைவு, தமிழ் சினிமாவிற்குப் பெரும் நலிவு. தான் வாழும் காலத்திலேயே புரிந்துகொள்ளப்பட்ட நல்ல விஷயம் அவருக்கு நடந்திருக்கிறது. கதைகளிலும், காட்சியமைப்பு களிலும், உரையாடலிலும் அதிகப்படியான கவனம் செலுத்தியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி நின்று ஜெயித்த காலத்தில், பேசப்பட்ட பெரும் வரலாறு அவருக்கே உரித்தானது.அவரோடு நீண்ட காலம் பணிபுரிந்த இயக்குநர் சரண், இங்கே தன் நினைவுகளைப் பகிர்கிறார்...

‘‘பொதுவா நாங்க எப்பவும் சார் கூடவேதான் இருப்போம். எப்பவும்னா, ஒரு நாளைக்கு 18 மணி நேரம். அவர் குடும்பத்தோட இருந்த நேரத்தைவிட எங்களோட இருந்ததுதான் அதிகம். நான் ஏழு வருஷம் அவர் கூட இருந்திருக்கேன். அப்போ வருஷம் 365 நாளும் அவருக்கு வேலை இருந்துக்கிட்டே இருக்கும். அதனால் நாங்களும் பிஸி. ஒரு லொகேஷன்ல எல்லாரும் படம் எடுத்திருப்பாங்க. அதே லொகேஷன் போய் வேறு கோணத்தில் படம் எடுத்து, வித்தியாசம் காட்டிடுவார். அதுக்காக அவர் மத்த படங்களைப் பார்த்திருக்கவும் மாட்டார்.

சினிமாவில் ஸ்பாட் டிசிஷன் மேக்கிங்னு சொல்வார்கள். அது சாருக்கு எக்கச்சக்கம். சார் இல்லாம ஒரு சின்னக் காட்சி கூட யாரும் எடுத்துட முடியாது. அதை விரும்பமாட்டார். அதனால படத்தின் மற்ற இடங்களின் நேர்த்தி குறைஞ்சுடும்னு நம்புவார். நான் அவர்கிட்ட சேர்ந்த ஒரு வருஷம் வரை திட்டு வாங்கவே இல்லை. ஒரு வருஷம் கழிச்சு ஒருநாள் திட்டினார். அன்றிலிருந்து தான் அவர்கிட்ட நான் வேலை செய்ததா மனசிற்குள் பதிவு செய்தேன்.

அவர் ஷூட்டிங் அன்னைக்கு ரெடியாகுறதே அத்தனை அழகு. அவரோட சேர்ந்து புறப்பட அவர் வீட்டுக்கே போயிடுவோம். காலை ஆறு மணிக்கு அவர் அறைக்குள் நுழைந்தால், ரெடியாகி உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார். அவர் எழுதிய வசனத்தை, அவர் படிக்கக் கொடுத்து வாங்குவது பெரிய பொஸிஷன்.

நமக்கும் ஒரு காலம் வரும் எனக் காத்திருப்போம். திருத்தி, எழுதி, மறுபடியும் எழுதி அதைப் புரிஞ்சிக்கறதே உங்களை அவர் பக்கத்தில் கொண்டு போய் வைக்கும். அவருடைய கதைகளில் நிறைய மனிதர்கள்... சிக்கலான குணாம்சங்கள் கொண்டவர்கள் கூட வருவார்கள். மன உளைச்சல்கள், வேதனைகள், உறவுச் சிக்கல்கள் மேல அவர் கவனம் இருக்கும். சிறிய கதாபாத்திரங்கள் கூட அழுத்தம் கொடுத்து பூரணமா தங்களை வெளிப்படுத்தி விடுவார்கள்.

அவருக்காக கார்ட்டூன் வரைஞ்சு கொடுத்திருக்கேன். மிகவும் ரசிப்பார். அவர் உடம்பு சரியில்லாம இருந்தா பார்க்க மாட்டேன். எண்ணி ரெண்டே நாள்ல மீண்டு வருவார். ஒயிட் அண்ட் ஒயிட்டில் சிங்கம் மாதிரி, கனைத்துக்கொண்டு வருவது பேரழகு. 1990ல் அவருக்கு ஆஞ்சியோ ப்ளாஸ்ட் செய்தார்கள். பத்தாவது நாளில் மூணாறில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டார். மருத்துவ நடை முறைகளை மீறிய அம்சம் இது. அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.

யார் என்ன பிரச்னையோட போனாலும் காது கொடுத்துக் கேட்பார். அவர்கிட்ட தயங்காமல் ஷேர் பண்ணலாம். நல்ல வார்த்தைகள் சொல்லி உங்களை ஆழமாகத் தொடுவார். அந்தத் தொடல் எங்க எல்லாருக்கும் நடந்திருக்கு. 1974ல் அவருக்கு பெரிய ஹார்ட் அட்டாக் வந்தது. அதிலிருந்து மீண்டு எழுந்த பிறகுதான் அவர் ரஜினிகாந்த்தை அறிமுகப்படுத்தினார். ‘கல்கி’ படத்தில் ஒரு படத்தயாரிப்பாளர் ரோல் இருந்தது ‘யாரை அந்த கேரக்டருக்கு போடுவது?’ எனக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

‘பார்க்கலாம்... இன்னும் நாள் இருக்கே’ என்றார். அந்தக் காட்சியை படமாக்க வேண்டிய நாளும் வந்துவிட்டது. ‘சார்... நாளைக்கு பர்ஸ்ட் ஷாட் அவர்தான்... யாருங்க அவர்?’னு கேட்டேன். ‘வருவாங்க’னு சொல்லிட்டுப் போயிட்டார். மறுநாள் உடம்பெல்லாம் பட்டை போட்டுக்கொண்டு ‘முருகா... முருகா...’னு தேவர் ஸ்டைலில் அமர்க்களமா இறங்கினார். எங்க சஸ்பென்ஸ், அன்று காலை அவரைப் பார்த்த பிறகுதான் முடிவுக்கு வந்தது.

‘வசூல் ராஜா’வில் அவரை கமலின் அப்பாவாக நடிக்க வைக்க, அவர்கிட்ட தவம் இருந்தேன். கமலும் நானும் விடாப்பிடியா துரத்த, சார் மும்பை போயிட்டார். அப்புறம் கமல், ‘உத்தம வில்லனி’ல் அவரை நடிக்க வச்சது ரொம்ப நல்ல விஷயம்.என்னைப் பொறுத்தவரை சார் எங்கேயும் போயிடலை. பெரிய ஷூட்டிங் ஷெட்யூலுக்குப் போயிருக்கிறார்னு நினைச்சுக்கறேன். இப்படி என்னை ஏமாத்திக்கறதுதான்... எனக்குத் தெரிஞ்ச எளிய வழி!

 நா.கதிர்வேலன்
ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்