ரஜினி என்னைத் தூக்கினார்... நான் அவரைத் தூக்கினேன்!
‘‘பேட்டியா சார்? என்னையா சார்?’’ - கேட்ட மாத்திரத்தில் பரவசமாகிறார் விக்னேஷ். ‘ஊதா கலரு ரிப்பன்...’, ‘வாங்கண்ணா வணக்கங்கணா...’ என சமீபத்திய சூப்பர் ஹிட் பாடல்கள் அனைத்திலுமே இந்த இளைஞனை நீங்கள் பார்த்திருக்கலாம். கொஞ்சம் பிரைட் லுக், வட்ட முகம்... ஹீரோவுக்குப் பின் வரிசையில் ஆடும் குரூப் டான்ஸர் என்றாலும் ‘யார்ரா இந்தப் பையன்?’ என கவனித்து, விக்னேஷை வியக்காதவர்கள் மிகக் குறைவு.
‘‘குரூப்ல ஆடினாலும் ஸ்கிரீன்ல கலர் கலர் காஸ்ட்யூம்ஸ்ல வந்து பழகிட்டேன் சார். எங்க வீட்டுல வச்சி போட்டோ எடுக்கலாமா? நல்லா வருமா?’’ - வீட்டுக்கு நம்மை அழைப்பதற்குள் ஆயிரம் தயக்கம் விக்னேஷுக்கு. சென்னை புலியூர் ஹவுசிங் போர்டு குவார்ட்டர்ஸில் கவலைக்கிடமான கட்டிடங்களுக்கு இடையே இருக்கிறது விக்னேஷின் வீடு. ஒரே அறை, படுக்கைக்கும் சமையலுக்குமாய் பிரிக்கப்பட்டுள்ளது.
‘‘மாடிக்குப் போயிட்டா ஃப்ரீயா பேசலாமே’’ - நமது ஐடியா தர்மசங்கடத்தை மேலும் கூட்டுகிறது. ‘‘குறுகலான படிக்கட்டு சார்... மழையில வழுக்கும்... உஷாரா வாங்க!’’ - கிட்டத்தட்ட கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறார் விக்னேஷ். சவாலான டிரெக்கிங் போல இருக்கிறது அந்த மாடிப்படிப் பயணம். குறுக்கும் நெடுக்குமாக கொடி கட்டி காய வைக்கப்பட்ட துணிகள் மறிக்கின்றன. வாள் சண்டை போல அவற்றுக்கு தலை விலக்கிப் போனால், காரை பெயர்ந்து கிடக்கிறது அந்த மொட்டை மாடி.
‘‘இதான் சார்... நான் தவழ்ந்து ஓடி விளையாடி வளர்ந்த இடம். 22 வருஷமா இங்கதான் இருக்கோம். அப்பா, அம்மா ரெண்டு பேருமே சினிமா தொழிலாளர்கள்தான். அப்பா கேமரா அசிஸ்டென்ட். அம்மா அந்தக் காலத்துல குரூப்ல ஆடியிருக்காங்க. எனக்கு படிப்பு வரலைன்னெல்லாம் சொல்ல முடியாது. ஆனா, ஏழைக் குடும்பங்கள்ல படிச்சா மெரிட்லயே டாக்டராகுற அளவுக்குப் படிக்கணும்... இல்லாட்டி வேற பொழைப்பைப் பார்க்கணும்.
நான் ஆவரேஜா படிக்கறதைப் பார்த்துட்டு, எங்க அம்மாவே டான்ஸ் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. 14 வயசுலயே குரூப்ல ஆட வந்துட்டேன். ‘கோல்’னு ஒரு மலையாளப்படம். 5000 ரூபா கொடுத்தாங்க. அப்பாவுக்கு சரியா வேலை இல்ல. அப்போ எங்க குடும்பத்துக்கு அந்தக் காசு பேட்லி நீட். ஸோ, பத்தாவதோட படிப்பை நிறுத்தியாச்சு. அம்மாவேதான் குரூப் டான்ஸரா மெம்பர்ஷிப் கார்டும் வாங்கிக் குடுத்தாங்க. இப்ப யோசிச்சுப் பாக்குறேன்... ப்ச்... ஒரு அம்மாவுக்கு அது எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்!
‘நல்லா கலரா இருக்கீயே... குரூப்ல துண்டா தெரியிறீயே’னு இப்ப நிறைய பேர் பாசிட்டிவ்வா சொல்றாங்க. ஆனா, இந்த கலரால நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா? காரணமே இல்லாம ரிஜெக்ட் பண்ணுவாங்க. ‘ரொம்ப பிரைட்டா இருக்கான்... குரூப்ல மெர்ஜ் ஆக மாட்டான்’னு சொல்லியே ஒதுக்குவாங்க. இந்த இடத்தைப் பிடிக்கறதுக்கே நான் ரொம்ப உழைக்க வேண்டி இருந்துச்சு. டான்ஸ் கிளாஸ்ல சொல்லிக் கொடுக்குறது சினிமா டான்ஸ்க்கு கொஞ்சம்தான் உதவும்.
டைமிங், பொஸிஷன் எல்லாம் பழகப் பழகத்தான் வரும். அப்படிப் பழகிக்க வாய்ப்பு கிடைக்காம வருஷக்கணக்கில் சும்மா இருந்திருக்கேன். ‘சுறா’ படத்துல தினேஷ் மாஸ்டர்தான், ‘யார்ரா இவன்...’னு என்னை தனியா கூப்பிட்டு ஆடச் சொல்லி பார்த்தார். எனக்கு நிறைய வாய்ப்புக் கொடுத்ததும் பிரேக் கொடுத்ததும் அவர்தான்.
இப்ப தினேஷ் மாஸ்டர் ட்ரூப்ல டான்ஸராவும் பிருந்தா மாஸ்டர்கிட்ட அஸிஸ்டென்ட்டாவும் இருக்கேன். அவங்க ரெண்டு பேருக்குமே நான் ரொம்ப ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். மாசத்துல ஒண்ணு ரெண்டு நாள் வேலை பார்த்தவனுக்கு, இப்ப 20 நாள் வேலை இருக்குன்னா, அதுக்கு அவங்கதானே காரணம்!
‘அஜித் மாதிரி ஆகணும்... விஜய் மாதிரி ஆகணும்...’னு கலர் கலரா கனவு காணலாம். ஆனா, அப்படியெல்லாம் ஆம்பிஷன் வச்சுக்கவே ஒரு தகுதி வேணும் சார். என்னோட டார்கெட் நோபிள் அண்டு ஜானி மாதிரி ஆகறதுதான்.
அவங்க யாருன்னு கேக்குறீங்களா? ராஜுசுந்தரம் மாஸ்டர் குரூப்ல ஆடிட்டிருந்தவங்க. முதன்முதல்ல குரூப் டான்ஸர்ஸா வெளியில தெரிஞ்சவங்க அவங்கதான். எனக்கு மட்டுமில்ல... குரூப் டான்ஸரா இன்னிக்கு உள்ள நுழையிற ஒவ்வொருத்தனுக்கும் லட்சியமே, அவங்களை மாதிரி ஆகறதுதான்.
ஹீரோக்கள்ல விஜய் சார் கூட ஆடுறதைத்தான் ஒவ்வொரு குரூப் டான்ஸருமே விரும்புவான். ஏன்னா, டான்ஸ்ல அவர் டேக் வாங்க மாட்டார். நம்மளால டேக் அதிகம் போகாம இருக்கணுமே... அதனால ரொம்ப திறமையானவங்களைத்தான் அவர் கூட ஆட வைப்பாங்க. ஸோ, அவர்கூட ஆடுறதே ஒரு தகுதிதான். ‘ஜாலியா பின்னாடி ஆடுறாங்க’ன்னுதான் ஒரு குரூப் டான்ஸரை உங்களுக்குத் தெரியும். ஆனா, நிஜத்தில் அது ரொம்ப கஷ்டம். முதல்ல நாங்க மாஸ்டருக்கு 10, 20 தடவை ஆடிக் காட்டணும்.
அதுக்கப்புறம் கேமராமேன் முன்னாடி ஃப்ரேம் பார்க்குறதுக்காக 10, 20 தடவை ஆடணும். அதுக்கு அப்புறமும் டைரக்டர் கேட்டா ஆடிக் காட்டணும். அடுத்ததா ஹீரோ வந்த பிறகு ஆடணும். ஹீரோ எத்தனை தடவை டேக் வாங்குறாரோ அத்தனை தடவை நாங்களும் முகம் சுளிக்காம ஆடணும். நீங்க ஃபைனலா பார்க்குற பாடல் காட்சி இருக்கே... அதுக்கு முன்னாடி நாங்கல்லாம் குறைஞ்ச பட்சம் 80 தடவை அந்த ஸ்டெப்ஸை ஆடியிருப்போம். ஆனாலும், டயர்டு தெரியாம சிரிச்சிக்கிட்டே உற்சாகமா முகத்தை வச்சிக்கணும்... அதுதான் கஷ்டம்.
சின்ன வயசுல இருந்தே எனக்கு ரஜினின்னா உயிரு. 22 வருஷத்துக்கு முன்னாடி ‘பாட்ஷா’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அடம் புடிச்சிப் போனேன். மூணு வயசுப் பையனா இருந்த என்னை ரஜினி சார் தூக்கினார். அப்போ எடுத்த போட்டோ என்கிட்ட பொக்கிஷமா இருக்கு. இப்ப ‘லிங்கா’ல ரஜினி சார் கூட நான் ஆடினேன். குரூப்ல ஒரு டான்ஸர் ரஜினி சாரைத் தூக்குற மாதிரி ஒரு ஸ்டெப்... மாஸ்டர் என்னைத் தூக்க சொன்னார்.
பெருமையா தூக்கினேன். ‘22 வருஷத்துக்கு முன்னாடி நீங்க என்னைத் தூக்கினீங்க சார்’னு சொல்லி, வாட்ஸ் அப்ல வச்சிருந்த அந்த போட்டோவை அவர்கிட்ட காட்டினேன். ரொம்ப ஆச்சரியப்பட்டார். வாழ்க்கையில மறக்க முடியாத நாள் அது!’’ - ஒரு அனுபவஸ்தருக்குரிய பக்குவத்தோடு நெகிழ்ந்து பேசுகிறார் விக்னேஷ்.‘‘அப்புறம் ஒரே ஒரு ரிக்வெஸ்ட்... ‘பையன் நல்லா இருக்கான். நடிக்க வரலாம். ஹீரோவாகலாம்’னெல்லாம் பில்டப் கொடுத்து எழுதிடாதீங்க சார். நடிப்பு எனக்கும் கனவுதான்.
ஆனா, கனவு காணுறதுக்கும் ஒரு தகுதி வேணும். இதோ இப்ப... நான் சம்பாதிக்க வந்த பிறகுதான் எங்க குடும்பம் மிடில் கிளாஸ்ங்கற இடத்துக்கே வந்திருக்கு. அதுக்கு முன்னாடி நாங்க எதிலும் சேர்த்தியில்ல. ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம். இப்பதான் கொஞ்சம் நிமிர முடிஞ்சிருக்கு. அம்மாவையும் அப்பாவையும் நிம்மதியா வச்சிக்கணும். அதுக்கு இந்த இடம் நிலைக்கணும். அதுவே போதும்!’’
‘அப்புறம் பாஸ்... எத்தனை கேர்ள் ஃப்ரெண்டு?’ என நாம் ஸ்டாக் வைத்திருந்த கேள்விகள் எல்லாம் நமக்குள் அழுந்துகின்றன. சத்தியமாய் இந்தப் பையனிடம் இப்படியொரு சந்திப்பை நாம் எதிர்பார்க்கவில்லை!
நீங்க ஃபைனலா பார்க்குற பாடல் காட்சி இருக்கே... அதுக்கு முன்னாடி நாங்க 80 தடவை அந்த ஸ்டெப்ஸை ஆடியிருப்போம். ஆனாலும் சிரிச்சிக்கிட்டே உற்சாகமா முகத்தை வச்சிக்கணும்... அதுதான் கஷ்டம்!
-மை.பாரதிராஜா, நவநீதன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்