TNPSC குரூப் 4 தேர்வு...



அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது.

 4,963 பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வை எழுத 13 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். தலையணை கனமுள்ள புத்தகங்களை வைத்து பயமும் பதற்றமுமாகப் படித்துக் கொண்டிருப்பீர்கள். இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கின்றன.

ஆனால், ‘‘இப்போது முயற்சித்தால் கூட நிச்சயமாகத் தேர்ச்சி பெற்று விடலாம்...’’ என்கிறார், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியில் நெடுங்கால அனுபவமுள்ள ‘ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி’யின் இயக்குனர் ச.வீரபாபு.

அவர் தரும் ஆலோசனைகள்...

* ‘4,963 பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் போட்டியா?’ என்ற மலைப்பு நிச்சயம் உங்கள் மன உறுதியைக் குலைக்கும். முதலில் அந்த நினைப்பை உதறுங்கள். எண்ணிக்கையில் எதுவும் இல்லை. நீங்கள் போட்டியிடப் போவது, இந்த 13 லட்சம் பேரோடு அல்ல. வெறும் 200 பேரோடுதான். ஆமாம்... கேள்விகள்தான் உங்கள் போட்டி. கேள்விகளை மட்டும் ஜெயித்துவிட்டால் நீங்கள் வெற்றியாளர். 

* இது கொள்குறி வகை (விடைகளைத் தேர்ந்தெடுத்தல்) தேர்வு என்பதை மனதில் கொள்ளுங்கள். இது அறிவு சார்ந்தது மட்டுமல்ல; மனதும் சார்ந்தது. ஆண்டுக்கணக்கில் படிக்க வேண்டும் என்பதில்லை. முழுமையாகப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் இதில் தேர்ச்சி பெற ஒரு வாரம் கூட போதும்.

* தேர்வில் மொத்தம் 200 கேள்விகள். 300 மதிப்பெண்கள். பொதுத்தமிழில் 100 கேள்விகள். பொது அறிவில் 100 கேள்விகள். பொது அறிவில் 25 கேள்விகள் திறனறிவு சார்ந்து கேட்கப்படும்.

* பொதுத்தமிழில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதில் முழுமதிப்பெண் பெறுவது எளிது. பெரும்பாலும் எல்லாக் கேள்விகளும் 6 டூ 10 சமச்சீர் பாடப்புத்தகங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படுகின்றன. சற்று தீவிரமாக அவற்றைப் புரட்டிப் பார்த்து மனதில் இருத்திக் கொண் டால் அப்படியே மதிப்பெண்களை அள்ளி விடலாம். +2 பொதுத்தமிழ், சிறப்புத் தமிழ் பாடப் புத்தகங்களில் இருந்தும் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றையும் ஒருமுறை புரட்டிவிட்டால் பொதுத்தமிழை எதிர்கொள்வது எளிது.

* 8 முதல் 10 கேள்விகள் சமகால நடப்புகள் பற்றிக் கேட்கப்படுகின்றன. தினமும் செய்தித்தாள் படித்தால் இந்த மதிப்பெண்களை அப்படியே அள்ளிவிடலாம்.

* 2012க்குப் பிறகு கேள்வி கேட்கும் முறை மாற்றப்பட்டுள்ளது. கேள்விகள் உங்களைக் குழப்பக்கூடும். பதிலுக்குக் காட்டும் முனைப்பை கேள்வியைப் புரிந்துகொள்வதிலும் நீங்கள் காட்ட வேண்டும். எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்பட லாம். ‘ஜெயகாந்தன் எழுதிய நூல் எது?’

என்பதற்கு பதில் ‘ஜெயகாந்தன் எழுதாத நூல் எது?’ என்று கேட்கப்படலாம். ஜெயகாந்தன் என்ற பெயரைப் பார்த்ததும் அவசரக் கோலத்தில் அவர் எழுதிய புத்தகத்தையே தேர்வு செய்தீர்கள் என்றால் தெரிந்தே ஒன்றரை மதிப்பெண்ணை இழக்கிறீர்கள். எனவே, கேள்வியை நன்கு புரிந்துகொண்டு விடை எழுத வேண்டும்.

*2012க்குப் பிறகு, பல மட்டங்களில் 15க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடந்துள்ளன. அந்தத் தேர்வுகளின் வினாத்தாள்கள் www.tnpsc.gov.in/answerkeys.html என்ற தேர்வாணைய இணையதளத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, அதில் உள்ள கேள்விகளைப் பயிற்சி செய்யுங்கள். இந்த வினாத்தாள்களில் பொதுத்தமிழ் சார்ந்து 1500 கேள்விகள் இருக்கும். இதில் இருந்து குறைந்தது 40% கேள்விகள் கேட்கப்பட வாய்ப்புண்டு. எந்தெந்த கேள்விகள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டுள்ளனவோ அவற்றை நன்றாகப் பயிற்சி செய்யுங்கள்.

* அந்தக் கேள்வித்தாள்களில் உள்ள கணக்கு கேள்விகளையும் தொகுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தேர்விலும் இதே மாதிரிக் கணக்குகள்தான் இடம்பெறப் போகின்றன. எண்கள் மட்டும் வித்தியாசப்படும். மாதிரியாக அவற்றை வைத்து பயிற்சி எடுங்கள்.

* தேர்வு முடியும் வரைக்கும் மொபைல், ஃபேஸ்புக் சமாச்சாரங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விடுங்கள். முழுக்கவன மும் தேர்வில் இருக்கட்டும். தொலைக்காட்சியில் செய்திகளைப் பாருங்கள். 
 
* தேர்வு அறையில் 3 மணி நேரத்தை எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதில்தான் பாதி வெற்றி இருக்கிறது. 200 கேள்விகள் என்பதால் வினாத்தாள் 40 பக்கங்களுக்கு மேல் இருக்கலாம். தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையைப் பார்த்தோ, வினாத்தாளின் வடிவத்தைப் பார்த்தோ பயந்து விடாதீர்கள். 

* தேர்வுக்கு முதல் நாள் இரவு எதையும் படிக்காதீர்கள். நல்ல ஓய்வு, நல்ல தூக்கம் நல்லது. காலையில் 2 மணி நேரத்துக்கு முன்பாகவே தேர்வு நடக்கும் இடத்துக்குச் சென்று விடுங்கள். முன்பே சென்று உங்களுக்கான இடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இயல்பான உணவு, இயல்பான உடை போதும்.

* உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப்போகும் தேர்வு இது. அந்த பொறுப்புணர்வு இருக்கட்டும். எந்தக் கவனச்சிதற லும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள். 
 
*தேர்வுக்கான காலம் 3 மணி நேரம். அதாவது 180 நிமிடங்கள். ஆனால் கேள்விகளின் எண்ணிக்கை 200. ஒரு கேள்விக்கு 1 நிமிடம் கூட அவகாசமில்லை. விரைந்து செயல்படுங்கள். அதற்காக பதற்றத்தில் சிக்காதீர்கள்.

* ஓ.எம்.ஆர். விடைத்தாளில், திட்டமில்லாமல் விடைகளை ‘ஷேடு’ பண்ணக்கூடாது. பத்து பத்து கேள்விகளாகப் பிரித்துக் கொண்டு கவனமாக ''ஷேடு'' செய்யுங்கள். எந்தக் கேள்விகளுக்கு விடை தெரியுமோ அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

* இந்தத்தேர்வில் நெகட்டிவ் மார்க் இல்லை. அதனால் எந்தக் கேள்விக்கும் பதில் எழுதாமல் விடாதீர்கள். உங்கள் அரசுப்பணி கனவு ஈடேறி, 4,963 பேரில் நீங்களும் ஒருவராக வாழ்த்துகள்! 

வெ.நீலகண்டன்