‘‘ஒரு கலை சாகடிக்கப்படுதுன்னா, ஒரு சமூகம் புதைக்கப்படுதுன்னு அர்த்தம். வெறும் லாபம் மட்டுமே குறிக்கோளா போயிட்ட வியாபாரங்கள்தான் அதுக்குக் காரணமா இருக்கும்!’’ - ஆழமாகப் பேசுகிறார்கள் சிம்ரட் மற்றும் நளினி. சென்னையில் சில்பி என்ற பெயரில் ரெடிமேட் ஆடைக் கடை நடத்துகிறவர்கள்.
கடை பெயர் மாடர்னாக இருந்தாலும், ‘‘எங்கள் ஸ்பெஷல் வீரவநல்லூர் கைத்தறி சேலைகள்தான்’’ என்று வியக்க வைக்கிறார்கள். அரசு உதவியோடு அந்த ஊரின் அரிய கைத்தறிக் கலையை அகழ்ந்தெடுத்து, அதை வணிக ரீதியாகவும் ஹிட் அடிக்க வைத்திருப்பவர்கள் இவர்களே!
‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிற சின்ன ஊர்தான் வீரவநல்லூர். சௌராஷ்டிரா சமூகத்து மக்கள் வசிக்கிற பகுதி. ஒரு காலத்தில் பட்டு கோரைச் சேலைகளுக்கு இந்த ஊர் பெரும் புகழ்பெற்றது. இது மாதிரி நெசவு கிராமங்கள் நம்ம மண்ணில் நிறைய இருக்கு. இதுல இந்த வீரவ நல்லூர் ரொம்பப் பழமையான கிராமம். இவங்க கைத்தறி முறையும் பழமையானது. இவங்க நெய்யிற துணி, ரொம்ப ரொம்ப உறுதியானதா, தரமானதா இருக்கும்.
ஆனா, காலப் போக்குல எல்லாம் காணாமப் போச்சு. பட்டு நூல் விலையேறிட்டதாலும், சிந்தடிக் துணிகள் பெருகிட்டதாலயும் இவங்க நெசவுத் தொழில் நொடிஞ்சுது. ஒரு கட்டத்துல கதர் வேட்டி மட்டும் நெய்துக்கிட்டிருந்தவங்க, பவர்லூம்களோட போட்டி போட முடியாம அதையும் விட்டுட்டாங்க. புது தலைமுறை கிட்டத்தட்ட கைத்தறி கலையையே மறந்து வேற வேலை பார்க்க ஆரம்பிச்சாச்சு’’ என்கிற சிம்ரட், மறக்கப்பட்ட அந்தக் கலையை மீட்டெடுத்த கதையையும் விவரிக்கிறார்...
‘‘கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியான்னு அரசு சார்ந்த ஒரு சுதந்திரமான அமைப்பு... இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கலைகளை உயிர்ப்பிக்கிற முயற்சியில இறங்கிச்சு. எங்களுக்கும் இந்த விஷயத்துல ஆர்வம் இருந்ததால அவங்களோட கை கோர்த்து இறங்கினோம். ஒரு சமூகம் பாரம்பரியக் கலைகளை மறக்குதுன்னா, பொருளாதாரப் பிரச்னைகள்தான் காரணம். அந்த உதவியை அவங்களுக்கு அரசு மூலமா செய்து கொடுத்துட்டு, அவங்க தயாரிப்புகளையும் நாம வாங்கிக்கறதா உறுதி கொடுத்துட்டா போதும். ரொம்ப நாள் பிரிஞ்சிருக்கிற குடும்பத்தை திரும்பப் பார்த்ததும் ஓடி அணைச்சுக்கிற மாதிரி அவங்க கலையை சந்தோஷமா அவங்க கையில எடுத்துடுவாங்க.
அதே முறையைத்தான் நாங்க வீரவநல்லூர்லயும் கையாண்டோம். கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா அந்த கிராமத்தைத் தத்து எடுத்தது. நாங்க அவங்களுக்கு வேண்டிய உதவி களைச் செஞ்சோம். நல்லவேளையா அந்த ஊர்ல நெசவுக்கலை தெரிஞ்ச அனுபவசாலிகள் எங்களுக்குக் கிடைச்சாங்க. அவங்க மூலமா எல்லாருக்கும் பயிற்சி கொடுத்து, காட்டன் புடவை நெய்ய வச்சோம். அதை கொள்முதல் செய்து, விக்கிற வேலையை நாங்களே எடுத்துக்கிட்டோம்’’ என்கிறார் சிம்ரட்.
இந்தப் புடவைகளை அப்படியே விற்பதில்லை. பல்வேறு வேலைப்பாடுகளை இணைத்து, கவர்ச்சிகரமான டிசைனர் புடவை ஆக்கி விடுகிறார்கள். ‘‘அந்த டிசைனும் கூட பாரம்பரியக் கலைகளின் பங்களிப்பு தான். ஆந்திர கலம்காரி, ராஜஸ்தான் பந்தினி, மதுரை சுங்கிடி மாதிரி நிறைய கை வேலைப்பாடுகளை அந்தந்த மக்களை வச்சே பண்ணியிருக்கோம். அதெல்லாம் கூட இந்த மாதிரியே அழிஞ்சுட்டு வர்ற கலைகள்தான்.
மெஷின் எம்பிராய்டரி, கம்ப்யூட்டர் டிசைனை விட தரமானது. எந்த கெமிக்கலும் இல்லாம செடிகள்ல இருந்து எடுத்த இயற்கை வண்ணங்களைத்தான் இதுல பயன்படுத்துறாங்க. அரிதாகிப் போன எல்லாமே விலை உயர்ந்த தாவும் மாறிடும். அந்த அடிப்படையில, இப்ப இந்த சேலையும் கொஞ்சம் காஸ்ட்லி தான். ஆனா, மெஷின்ல அரைச்ச மாவை விட, கையில ஆட்டின மாவுல செய்த தோசை மாதிரி, இதுல ‘சம்திங் ஸ்பெஷல்’ நிச்சயம் இருக்கும்!’’ என்கிறார் நளினி.மறைந்தவை மீண்டு வந்தால் மகத்துவம் பெறும்! அரிதாகிப் போன எல்லாமே விலை உயர்ந்ததாவும் மாறிடும். அந்த அடிப்படையில, இப்ப இந்தசேலையும் கொஞ்சம் காஸ்ட்லிதான்.
-டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்