காக்கா வடைய திருடுனா கூட அதை கனடாவுல எடுப்பவரு, ஹீரோயின் உடைய காய போடுற சீனுக்கு கூட ஹங்கேரி நாட்டுக்கு பறப்பவரு, முருகருக்கு காவடி எடுத்தாலும் அதை இமயமலைல எடுப்பவரு நம்ம ஷங்கர் சார்.
இப்படி அசலூரின் அழகுகளை மட்டும் தெரிஞ்சு வச்சிருக்காமல், உள்ளூருல பாக்கு போட்டு துப்புறவன், பார்க் பெஞ்ச அழுக்காக்குறவன், பிக்னிக் ஸ்பா ட்ல பழைய இலைய மிச்சம் வச்சு போறவன்னு பல அசுத்தவாதிகளுக்கு கும்பி பாகம், தம்பி பாவம், அந்தகூபம், அமாவாசை தீபம்னு பலப் பல வகை தண்டனைகளும் கொடுக்கத் தெரிஞ்சவரு. ஷங்கர் சார மட்டும் சுற்றுலா துறை அமைச் சருக்கு ஆலோசகரா போட்டா, துன்ப சுற்றுலாத்துறையா இருப்பது, இன்ப சுற்றுலாத்துறையா மாறிடும்.
புது பிரதமர் மோடி அய்யாவுக்கு குட்டிச்சுவர் சிந்தனைகள் ஒரு கும்புடு வச்சுக்குது. மோடி எப்படியும் அவருக்குப் பிடிச்ச மாதிரி அமைச்சரவைய அமைக்கப் போறாரு. ஆனா மம்மி அமைச்சரவை போல மாசா மாசம் அது மாறாம இருக்கணும்னா, ஒவ்வொரு அமைச்சருக்கும் நம்ம இயக்குனர்களை ஆலோசகர்களா போட்டா அமைச்சர்கள் போடுற திட்டங்களுக்கும் நல்லது, அவங்களோட ஜாதக கட்டங்களுக்கும் நல்லது.
நாப்பது வருஷத்துக்கு முன்னாலயே நாலு ஆண்களும் ஒரு பெண்ணும் நண்பர்களா இருக்க முடியும்னு ‘புது வசந்தம்’ படத்தால நிரூபிச்சவரு. காதல் என்ற பூ ஒரு தடவதான் பூக்குமான்னு இளைய தளபதி விஜய்யை வச்சே சோதிச்சவரு. ஒத்த ரூபா இல்லாதவங்கள கூட ஒரே பாட்டுல பணக்காரனாக்கி மக்களுக்கு நம்பிக்கை அளிச்சவரு. வெளிய இருந்து வந்த மருமகளோ... இல்லை, வெளிநாட்டு மருமகளோ, யாரா இருந்தாலும் நாட்டையும் வீட்டையும் பிரிக்க முடியாதுன்னு ‘வானத்த போல’ படத்துல காட்டுனவரு, நம்ம விக்ரமன் சார்.
கலாசாரத்துறை ஆலோசகரா அவரை மட்டும் போட்டாக்கா, பெரும்பான்மையான பேரு நல்ல மனப்பான்மையோட வாழ ஆரம்பிச்சிடுவாங்க. விக்ரமன் சாரை பொறுத்தவரை மனுஷங்க ரெண்டு வகைதான். நல்லவங்க, ரொம்ப நல்லவங்க. இவருக்கு மட்டும் பதவி கொடுத்தா, குண்டு வைக்க நினைக்கிற தீவிரவாதிங்க கூட திருந்தி ‘லாலே லாலல லாலா’ பாட ஆரம்பிச்சிடுவாங்க.
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, பொள்ளாச்சி, ஆழியாறு டேம், ரெட்டை வாய்க்கால், குரங்கருவின்னு ஒரு தெரு, ஒரு ஊரு விடாம பட பெயரா வச்சு மொத்த இந்தியாவோட மேப்பையும் உள்ளங்கை ரேகையா வச்சிருக்கும் இயக்குனர் பேரரசுவை தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ஆலோசகரா போட்டா, மிச்சமிருக்கிற சந்து பொந்துல கூட ஷூட்டிங் வைக்குமளவு நாடு நல்லா ஆயிடும்.
ஓசில வந்த திருட்டு டி.வி.டில கூட பார்க்க முடியாதளவு படம் எடுக்கிறவங்க மத்தியில, இருட்டுல படம் எடுத்தாலும் மிரட்டலா எடுக்கிறவரு நம்ம மிஷ்கின் சார். நைட்டுல ஆந்தைக்கு அப்புறம் அதிகமா முழிச்சிருக்கிறது மிஷ்கின் பட ஹீரோதான். ஒரு மெழுகுவர்த்திய வச்சே ஒன்பது நிமிஷம் ஸீனை ஓட்டக்கூடிய, அதை அருமையாக காட்டக்கூடிய இயக்குனர் சக்கரவர்த்தி அவர்தான். ஹீரோவோட ஒட்டுமொத்த வீட்டுல ஒத்த ஜீரோ வாட்ஸ் பல்ப் மட்டுமே இருக்கும்,
வில்லனோட கோட்டையில ரெண்டு நாளு தேடினாலும் ஃபியூஸ் போன டியூப்லைட்தான் கிடைக்கும். வில்லன் மிரட்டுனாலோ, ஹீரோயின அடியாள் விரட்டுனாலோ, எதா இருந்தாலும் அரை இருட்டுல காட்டுறதுதான் மிஷ்கின் ஸ்டைல். இப்படி எல்லா வகையிலும் மின் சக்திய குறைவா பயன்படுத்தும் இவர மட்டும் மின்சாரத்துறை அமைச்சருக்கு ஆலோசகரா போட்டா, நிச்சயம் சோரம் போகாது மின்சாரம்.
இந்தவார குட்டிச்செவுரு போஸ்டர்பாய்...
அர்விந்த் கெஜ்ரிவால்! காரணம் வேறொண்ணுமில்ல... அவரு குட்டிச்சுவரா போனதுதான்.
‘அக்னி நட்சத்திர’த்துல ஆரம்பிச்சு ‘அலைபாயுதே’ வரை புயலக் காட்டுனா கூட அதை ரயிலுக்குள்ள காட்டினவர்தான் நம்ம மணிரத்னம் சார். ‘தளபதி’ படத்துல ஸ்ரீவித்யா - குழந்தை ரஜினியைப் பிரிக்கவும், ‘மௌன ராகம்’ படத்துல மோகன் - ரேவதி சேரவும் ரயிலப் பயன்படுத்தியவர்.
வெயில் இல்லாட்டி ஷூட்டிங் போக விரும்பாத இயக்குனர்களுக்கு மத்தியில ரயில் இல்லாட்டி ஷூட்டிங் நடத்தாதவர். ஸ்குரூ டிரைவர்லயே எத்தனை வகை இருக்குன்னு தெரியாதவங்க நாம... ஆனா இந்தியாவுல ஓடுற அத்தனை ரயில் டிரைவர்களையும் தெரிஞ்சு வச்சிருக்கவரு இவரு. ஷாருக் கானை ரயில் மேல ஆட விடக்கூடியவர், அரவிந்த் சாமிய ரயிலத் துரத்தி ஓட விடக்கூடியவர், மாதவனை ரயிலச் சுத்தி பாட விடக்கூடியவர். இவர மட்டும் ரயில்வே துறை ஆலோசகரா போட்டா, நஷ்டத்துல நெளியிற ரயில் டிபார்ட்மென்ட் லாபத்துல தெளிஞ்சிடும்!
சில பேரு கத்திய வீசி கொல்வாங்க, சில பேரு விஷத்த பூசி கொல்வாங்க. ஆனா, ஆல் உலகத்துல பேசியே எதிராளிய கொலை பண்ணக்கூடிய ஒரே ஆள் நம்ம இயக்குனர் விசுதான். நம்ம ஊரு நாரத கான சபால இருந்து அமெரிக்காவுல இருக்கிற ஐநா சபை வரை எல்லா ஊரு பஞ்சாயத்துக்கும் போயி பக்குவமா பேசக் கூடியவரு. தமிழ் சினிமாவுல பேசிப் பேசியே இவரு நடத்தி வச்ச கல்யாணம் மட்டும் நூத்தி முப்பது. அதே சமயம் பேசிப் பேசியே இவரு பிரிச்சு வச்ச கல்யாணம் ஆயிரத்தி நூத்தி முப்பது. இவரை மட்டும் நம்ம வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆலோசகரா போட்டா, காஷ்மீர் பிரச்னைய கால் மணி நேரத்துல தீர்த்துடுவாரு. கோதாவரிய விட்டு வீட்டுக்கு நடுவுல கோட்ட கிழிக்கச் சொன்ன மாதிரி, ரெண்டு நாட்டுக்கு நடுவுல கோட்ட கிழிச்சு பார்டர் பிரச்னைக்கு பகுத் அச்சா ஆர்டர் போட்டுடுவாரு.
முன்னூறு ரூபா கொடுத்தாக்கூட மூணு மணி நேரம் ஓடுற படத்த எடுத்துக் காட்டும் திறமை கொண்டவர், ஹாலிவுட் டைனோசர்களை ஐம்பதே ரூபாய் கிராபிக்ஸில் தமிழ் சினிமாவுக்குக் கூட்டி வந்து டவுசர் போட்டு ஆட வைப்பவர், ரம்யா கிருஷ்ணனையோ மீனாவையோ அம்மனாக்கி ஐந்நூறு நாள் படத்தை ஓட வைப்பவர், நம்ம இயக்குனர் ராமநாராயணன். அவரை மட்டும் நிதித்துறை அமைச்சக ஆலோசகராக போட்டா, பண வீக்கம் மட்டுமல்ல... கல்லுல அடிபட்டா வர்ற கால் வீக்கம், கை வீக்கம் கூட காணாம போயிடும்.
வீட்டுல இருந்த நேரத்தை விட காட்டுல ஷூட்டிங் இருந்த நேரம் அதிகமா கொண்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமணிய வனத்துறை ஆலோசகராகவும், எப்ப பார்த்தாலும் அஜித்த கூட்டிக்கிட்டு கள்ளக்கடத்தல் பண்ண துபாய் சிங்கப்பூருக்கு ஷூட்டிங்குக்கு பறக்கும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன விமானத்துறை ஆலோசகராகவும்,
ஒரே டயலாக்குல முருங்கக்காய் விலையை ஏத்தி விடக்கூடிய திறமை கொண்ட பாக்யராஜ தொழில் துறை ஆலோசகராகவும், அடுத்தவன் கேர்ள் ஃப்ரெண்ட அம்சமா கரக்ட் பண்றதையே ஆராய்ச்சி பண்ணுற இயக்குனர் செல்வராகவனை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக ஆலோசகராகவும், எப்பவுமே பத்தடிக்கு வளர்ந்திருக்கும் புல்லையும் நெல்லையும் காமிச்சு படம் எடுக்கிற அய்யா பாரதிராஜாவ உரத்துறை ஆலோசகராகவும் போடலாம்.
ஆல்தோட்ட பூபதி