மனதை மயக்கும் மலம்புழா!




மேகம் தவழும் மேற்குத் தொடர்ச்சி மலை, கண்ணுக்கெட்டும் தூரம் வரை நீர்த்தேக்கம்... இந்த இயற்கை எழிலோடு செயற்கை சுவாரஸ்யங்களும் சேர்க்கப்பட்ட காக்டெயில்தான் மலம்புழா அணை. 125 அடி உயரத்தில் 15 கி.மீ சுற்றளவில் கடல் போல் காட்சி தரும் இந்த நீர்த்தேக்கத்தை சுமார் 600 மீட்டர் பயணிக்கும் ‘ரோப் கார்’ மூலம் அங்குலம் அங்குலமாக ரசிக்க முடியும்.

என்னென்ன பார்க்கலாம்?


*அணையைச் சுற்றி 8 ஏக்கரில் பூந்தோட்டம், பூங்கா, அல்லி, தாமரைக் குளம் உள்ளது. அணை நீர் பாயும் பிரமாண்ட வாய்க்காலை கடக்க இரண்டு தொங்கு பாலங்கள் உண்டு. இந்த சுற்றுலா அட்ராக்ஷன் காலை 10 முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்.
* ஒரே நேரத்தில் 200 பேர் இங்குள்ள ரோப் கார்களில் பயணிக்க முடியும். ரோப் கார் மூலம் பறவைப் பார்வையாய் ரசித்த தண்ணீரின் குளுமையை தொட்டு அனுபவிக்க இங்கே படகு சவாரியும் உண்டு.

* பூங்காவை ஒட்டி பாம்பு பூங்கா மற்றும் மீன் காட்சியகம் உள்ளது. 13 அடி நீளமுள்ள ஆவேச ராஜ நாகங்கள் இங்கே ஸ்பெஷல் கெஸ்ட். பாம்புகள் தவிர முதலைகளுக்கும் இங்கு இடமுண்டு. மீன் பூங்காவில் 2 செ.மீ முதல் 25 செ.மீ வரையில் பல வண்ண மீன்கள் குழந்தைகளை குஷிப்படுத்துகின்றன.
* பூங்காவின் நடுநாயகமாக 25 அடி உயரத்தில் தலை விரி கோலத்தில் யக்ஷி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கற்களால் உருவாக்கப்பட்ட இந்த சிலை அணையின் ‘கண் திருஷ்டிக்காக!’ ஆனால், இதன் முன் நின்று போட்டோ எடுக்க ஒரு கூட்டமே முண்டியடிக்கும். 
* குழந்தைகளுக்கான தனி பூங்காவில் குட்டி ரயில் ரவுண்டடித்து குட்டீஸ்களை குதூகலமாக்குகிறது. அதன் அருகில் தனியாக நீச்சல் குளமும் உண்டு.
எப்படிப் போவது?

கோவையிலிருந்து 38 கி.மீ தூரத்தில், பாலக்காடு மாவட்டத்தில் ‘தண்ணீர்த் தீவு’ போல் அமைந்துள்ளது இந்தச் சுற்றுலா தலம். கோவையிலிருந்து பஸ் மூலமாக பாலக்காடு சென்று அங்கிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மலம்புழா அணைக்கு பஸ், ஆட்டோ, கார் மூலமாக செல்லலாம். பாலக்காடு செல்லாமல், கஞ்சிக்கோட்டிலிருந்து 7 கி.மீ தூரம் பயணம் செய்தும் மலம்புழா செல்ல முடியும். ஆனால் இங்கே பஸ் வசதி கிடையாது.
எவ்வளவு செலவாகும்?

பாலக்காட்டில் இருந்து பஸ் கட்டணம் 10 ரூபாய், ஆட்டோவிற்கு 150 ரூபாய், காருக்கு 200 ரூபாய். பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் 25 ரூபாய் (சிறுவர்களுக்கு 15 ரூபாய்). நீச்சல் குளத்தில் 1 மணி நேரம் குளிக்க 75 ரூபாய். படகு சவாரி ஒருவருக்கு 40 ரூபாய். ரோப் கார் கட்டணமும் 40 ரூபாயே. மீன், பாம்பு பூங்காவுக்கு தலா 10 ரூபாய் கட்டணம். தங்குவதற்கு 30க்கும் மேற்பட்ட கேரள அரசு சுற்றுலாத் துறை விடுதி மற்றும் தனியார் விடுதிகள் உள்ளன. கட்டணம் 700 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

- என்.பாலா
படங்கள்: கிருஷ்ணகுமார்