கடைசி பக்கம்



புதிதாக அந்த நகரத்துக்குக் குடி வந்த தம்பதி அவர்கள். இருவரும் வேலைக்குப் போகிறார்கள். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசிப்பதைவிட லோன் போட்டு சொந்தமாக வாங்கிவிட்டால் என்ன என்ற யோசனை எழுந்தது. செய்தித்தாளில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தனர். அவர்கள் விரும்பும் அளவில் அந்த வீடு இருந்தது.

நகரத்துக்கு வெளியே புதிதாக முளைத்திருக்கும் புறநகர்ப் பகுதி ஒன்றில் அந்த வீடு இருந்தது. உரிமையாளரை போனில் கேட்டபோது வழி சொன்னார். ஊருக்குப் புதியவர்கள் என்பதால் இவர்களுக்குப் புரியவில்லை. ‘‘யாரையாவது விசாரித்துக்கொண்டு வந்து விடுகிறோம்’’ என்றனர். ஆனால் அந்த புறநகர்ப் பகுதியை அடைவதற்குள் திணறிவிட்டனர். உரிமையாளருக்கு போன் செய்து வழி கேட்கலாம் என்றால், அவரது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.

விளம்பரத்தைக் காட்டி யாரிடம் வழி கேட்டாலும் தெரியாமல் விழித்தனர். நல்லவேளையாக அங்கு ஒரு இடத்தில், குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ‘‘அங்கு போய்க் கேளுங்கள். அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை’’ என்றனர் சிலர். ஆனால் அங்கும் ஏமாற்றம்தான். ‘‘அந்த நகர்லதான் நாங்க இருக்கோம். அங்க இந்த பெயர்ல ஒரு தெருவே கிடையாதே’’ என்றார் ஒரு நிர்வாகி.

இஸ்திரி கடைக்காரர், வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடுபவர் எனக் கேட்டு அலுத்து, கடைசியாக ஒரு பெட்டிக்கடையில் நின்றபோது, ஒரு இளைஞன் இவர்களை அழைத்துச் சென்று நிமிடங்களில் வீட்டைக் காட்டி விட்டான். ‘‘நீ என்ன செய்யறே தம்பி?’’ என்று கேட்டதற்கு அவன் சொன்னான்... ‘‘பீட்சா டெலிவரி பண்றேன்!’’
எதனை யார் செய்வார்கள் என அறிந்து உதவி கேளுங்கள்!

நிதர்ஸனா