ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெறும் மூன்றே மூன்று பேரைத்தான் ட்விட்டரில் பின்தொடர்கிறார். ஒருவர் அவரது மனைவி; இன்னொருவர், ஜப்பானிய வரலாற்றாசிரியர். மூன்றாவது மனிதர், நரேந்திர மோடி.ஃபேஸ்புக்கில் அதிகம் பேரால் பின்பற்றப்படும் உலக அரசியல் தலைவர்கள் வரிசையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மோடி இருக்கிறார்.
‘‘ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் மோடி கலந்து கொள்ள வேண்டும்’’ என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
நேருவுக்கும் இந்திராவுக்கும் பிறகு உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் ஒரு பிரதமரை இந்தியா உருவாக்கவில்லை. அந்த நாற்காலியில் அமர்வதற்கு முன்பே மோடிக்கு அப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்கத் துவங்கிவிட்டது. மோடி மேஜிக்கின் சில துளிகள் இங்கே...
* பொதுவாக வெற்றிகளை ஷாம்பெயின் பீய்ச்சியடித்துக் கொண்டாடுவார்கள். மோடியின் வெற்றியை டெல்லியில் டீயை வீதிகளில் அபிஷேகம் செய்து கொண்டாடினார்கள். ஒரு டீக்கடைக்காரரின் மகன் பிரதமர் ஆவது சாதாரண விஷயமா என்ன?
* மதவாதியாக சித்தரிக்கப்பட்டாலும், மோடி உண்மையில் இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் மத அடையாளத்தை மென்மையாக்கினார். காவி நிறத்தில் இருந்த தாமரை சின்னத்தை வெள்ளை நிறத்துக்கு மாற்றி, அனைவரும் ஏற்கும்விதமாகச் செய்தார்.
* ‘மோடி’ என்பது ஒரு வெற்றிகரமான பிராண்ட் ஆக்கப்பட்டது அவரது சாதனை. அமெரிக்கத் தேர்தலில் ஒபாமா செய்த பிரசாரம் போலவே மோடியின் ஸ்டைல் அமைந்திருந்தது. மார்க்கெட்டிங் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், விளம்பர எக்ஸ்பர்ட்டுகள் இணைந்து செய்த பிரசார யுக்தி இது.
* கடைசி கட்ட தேர்தல் முடிந்ததும் ‘எக்ஸிட் போல்’ போன்ற எதையும் அவர் பார்க்கவில்லை. ‘‘மாற்றம் வரும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தேன். அறுவடை எனக்குத் தெரியும். அதனால் அலட்டிக் கொள்ளவில்லை’’ என்றார் அவர்.
* குரலில் ஏற்ற இறக்கங்களோடு, உணர்ச்சிபூர்வமாகப் பேசும் ஆற்றல் சிறு வயதிலேயே மோடிக்கு இருந்தது. நாடகங்களிலும் நடித்திருக்கிறார். குஜராத்தி நாடோடிக் கதைகளில் பெரிதும் ஆராதிக்கப்படும் ராபின்ஹுட் டைப் ஹீரோவான ஜோகிதாஸ் குமான் என்பவர் வேடத்தில் நடிப்பது என்றால் கொள்ளை ஆசை.
* பட்டம் விடுவது ரொம்பப் பிடிக்கும். வானில் வெகு உயரத்துக்கு அவரது பட்டம் பறக்கும்போது, நூல்கண்டை பிடித்தபடி கூடப் போவது அவரது தம்பி பிரஹலாத். சரியாகப் பிடிக்கவில்லை என்றால் கோபத்தில் அடித்துவிடுவாராம் மோடி.
* சின்ன வயதில் தெரு விளையாட்டுகளில் அவர் அதிகம் விளையாடியது முஸ்லிம் நண்பர்களோடுதான். தெருவில் புழுதிபறக்க ஓடியாடும் கேங்கில் அவர்தான் எப்போதும் லீடர்.
* தன் உள்ளங்கையைப் பார்த்து தனக்குத் தானே ஜோசியம் சொல்லிக் கொள்வார் மோடி. ‘‘நான் வளர்ந்ததும் பெரிய ஆளா வருவேன். எப்போதும் காரில்தான் போவேன் என ரேகை சொல்கிறது’’ என மோடி நம்பிய காலத்தில், ஒரு மாவட்டத்தில் சிலரிடம் மட்டுமே கார்கள் இருந்தன.
* இப்போதும் ஒவ்வொரு முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பாக அம்மா ஹிரா பென்னை சந்தித்து ஆசி வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
* மோடி 13 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோதும், அவரது உடன்பிறந்தவர்கள் சாதாரண நிலையில்தான் இருக்கிறார்கள். யாரையுமே தன் அரசு இல்லத்துக்கு தேவையில்லாமல் வர அனுமதித்ததில்லை. அவரது அம்மா இப்போது ஓட்டுப் போடப் போனதுகூட ஆட்டோவில்தான்.
* எட்டு வயதிலேயே மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டார். அந்த வயதில் பெரிதாக அரசியல் புரிதல் யாருக்கும் இருக்காது. மோடி சேர்ந்தது எதனால் தெரியுமா? ‘ஒரு தலைவர் இருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கிறது ஒரு கூட்டம்’ என்கிற ஒழுக்கம் அவருக்குப் பிடித்ததுதான் காரணம்.
* இந்திய - பாகிஸ்தான் போரின்போது ராணுவ வீரர்களுக்கு சேவை செய்த இளைஞர்கள் படையில் மோடி இருந்தார்.
* சந்நியாசி ஆக வேண்டும் என்பது மோடியின் இலக்கு. பேளூரில் இருக்கும் ராமகிருஷ்ண மடத்தில் இணைய முயற்சித்தார். ஆனால் அங்கு இணைய பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதனால் மோடி ஆசை நிறைவேறவில்லை.
* பஞ்சாப்பில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வளர்க்கும் வேலையில் இணைந்தார் மோடி. ஒரு துணிப்பை, அதில் இரண்டு செட் டிரஸ். இதுதான் அவரது சொத்து. இஸ்திரி போடக்கூட பணம் இருக்காது. மடித்து தலையடியில் வைத்துத் தூங்கினால், டிரஸ் அயர்ன் செய்தது போலாகிவிடும்.
* குஜராத்தில் நிகழ்ந்த எமர்ஜென்சி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்.
* பொடிகல் சயின்ஸில் எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கிறார்.
* செய்தித்தாள்கள் படிப்பதில்லை. பல ஆண்டுகளாக இணையத்தில்தான் செய்திகளைப் படிக்கிறார்.
* கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அவர் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு 8 மாதங்களில் 3 லட்சம் கிலோமீட்டர் பயணித்து, 5800 கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார் அவர். எந்தத் தேர்தலிலும் யாரும் இவ்வளவு தூரம் பயணித்து பிரசாரம் செய்ததில்லை.
* மதரீதியாக தேசத்தைப் பிளவுபடுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு அவரைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. தேர்தல் பிரசாரத்திலும் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் அதன்பிறகு ‘எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்’ என அவர் அழைப்பு விடுத்தது காங்கிரஸ் கட்சிக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும். தேர்தல் வேறு; ஆட்சி வேறு என்பதை மோடி உணர்ந்திருக்கிறார்.
* முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்போது, அவரது டேபிளில் பார்க்காமல் விட்ட ஃபைல் என ஒன்றுகூட இல்லை. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டே வெளியேறினார்.
* ‘‘முன்பு ஆட்சியை நடத்த கூட்டணி தேவைப்பட்டது. இப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கே கூட்டணி தேவைப்படுகிறது’’ என்பது வெற்றிக்குப் பிறகு அவர் சொன்னது. இதைத் தவிர எதிர்க்கட்சியினரை கிண்டல் செய்து அவர் எதுவும் பேசவில்லை.
* தனது டிரஸ் விஷயத்தில் பெரும் நேர்த்தியை எதிர்பார்ப்பார். அகமதாபாத்தில் இருக்கும் ‘ஜேட் ப்ளூ’ ஸ்டோரிலிருந்து ஆடைகள் ரெகுலராக வாங்குகிறார்.
* விதம்விதமான வாட்ச்கள் அவரது சேகரிப்பில் இருக்கின்றன.
* நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கண்டிப்பாக விரதம் இருப்பார். அந்த நாட்களில் பழம் தவிர எதுவும் சாப்பிடுவதில்லை.
* தினமும் நான்கு மணி நேரம்தான் தூங்குவார். அவரது வேலை நேரம், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை.
* அவரைப் பற்றிய எல்லா செய்திகளையும் படித்துவிடுவார். உதவியாளர்கள் சேகரித்து அவர் கவனத்துக்கு வைப்பார்கள்.
* புகைப்படங்கள் எடுப்பதும் கவிதை எழுதுவதும் அவரது ஹாபி. அவர் எடுத்த போட்டோக்களை சேகரித்து ஒரு கண்காட்சி நடத்தியிருக்கிறார்.
* பொதுக்கூட்டங்களுக்கு அவரது உரைகளை அவரே தயாரித்துக் கொள்கிறார்.
* எப்போதும் அசைவம் சாப்பிடுவதில்லை; குஜராத்தி உணவுகள் மிகவும் பிடிக்கும்.
* சுவாமி விவேகானந்தரும் இந்திரா காந்தியும்தான் அவரது ரோல் மாடல்கள்.
* எப்போதும் இந்தி பேசுவது பிடிக்கும். சமீபகாலமாக ஆங்கிலம் பேச வேகமாகக் கற்று வருகிறார்.
* ‘மன்னிப்பு’ - எந்த மொழியிலும் மோடிக்குப் பிடிக்காத வார்த்தை. அரசியல் காரணங்களுக்காக இன, மொழி அடையாளங்களைக் காட்டும் எந்தப் பொருளையும் அணிவது பிடிக்காது.
- அகஸ்டஸ்