மாணவர்கள்...மாணவிகள்... தனித்தனி தேர்வு அவசியமா?
''எதிர் ஃப்ளாட்ல பாரு... +2 படிக்கிற பையன்... விளையாட்டு அது இதுன்னு சுத்துறான்... கடை கண்ணிக்கும் அவன்தான் அலையிறான்... ஆனாலும் படிப்புன்னு வந்துட்டா நல்ல மார்க் வாங்கிடறான்! நம்ம வீட்டுக் கழுதையும் இருக்கே..! படிக்கிறதைத் தவிர இதுக்கு வேறென்ன வேலை? மார்க் வாங்கத் துப்பில்ல... எப்ப பார்த்தாலும் டி.வி!’’- பத்தாம் வகுப்பு மாணவியான திவ்யா கடைசியாகக் கேட்ட வாக்கியம் இதுதான். கோபமும் விரக்தியுமாக முதல் மாடியில் இருந்து குதித்தவளுக்கு தலையில் மட்டும் இரண்டு அறுவை சிகிச்சைகள்! உயிர் பிழைக்க வைத்துவிட்டாலும் கேட்கும் திறனைக் காப்பாற்ற முடியவில்லை.
எதிர்பாலினர் முன்னிலையிலோ... அல்லது அவர்களோடு ஒப்பிட்டோ, தான் சிறுமைப்படுத்தப்படும்போதுதான் மனிதர்கள் உச்சகட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பை அடைகிறார்கள். இதுதான் காரணம் என்ற உணர்வு இல்லாமலே, இந்த உளவியலை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். எவரை தண்டிப்பதாக இருந்தாலும் எதிர்பாலினம் எனும் ஆயுதத்தால் எழ முடியாதபடி அடிக்கிறோம். ‘சரியான ஆம்பளையா இருந்தா...’, ‘நீயெல்லாம் ஒரு பொம்பளையா?’ என பலவீனம் தெரிந்து தட்டுகிறோம்!
ஆனால், இத்தனை வலுவான ஆயுதம் பிஞ்சு மனங்களுக்கு எதிராகவா? அதுவும் கல்வி விஷயத்திலா?நமக்கு முன்பே இதைப் பற்றிச் சிந்தித்து விட்டது இங்கிலாந்து. நம் ஊரில் சி.பி.எஸ்.இ மாதிரி, அங்கே ஜி.சி.எஸ்.இ என்பது மிகப் பெரிய கல்வித்திட்டம். இனி அந்தக் கல்வித்திட்டத்தில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்தவும், தனித்தனி பாடத்திட்டங்கள் வகுக்கவும் தயாராகி விட்டார்கள் அவர்கள். காரணம் கேட்டால், ‘ஆண், பெண் இருவருக்கும் மூளை இயங்கும் விதமே வேறு வேறு’ என்கிறார்கள்.
அப்படியா? சென்னை ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உடல் இயக்கவியல் இணைப்பேராசிரியர் செம்மலிடம் கேட்டோம்.‘‘நிஜம்தான். ஆணும் பெண்ணும் ஒரே செயலைச் செய்தாலும், அவர்களின் மூளை இயங்கும் விதம் முற்றிலும் வேறு மாதிரி இருப்பதை பெட் - எம்.ஆர்.ஐ கருவிகள் உறுதி செய்திருக்கின்றன. ஒரு வார்த்தையை உச்சரிக்கும்போது ஆணின் மூளையின் ஒரு சின்ன புள்ளியில்தான் ரத்தம் பாய்கிறது. ஆனால், அதே வார்த்தையை பெண் உச்சரித்தால், அவள் மூளையின் மூலை முடுக்கெல்லாம் ரத்தம் பாய்கிறது. பெண்கள் தங்கள் மூளையை முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள். மூளையில் உள்ள நியூரான்களின் நெருக்கத்தால் பெண்கள் துரிதமாகவும் சிந்திக்கிறார்கள்’’ என்றார் அவர்.
கனடாவைச் சேர்ந்த மனநல மருத்துவரான சாண்ட்ரா வில்சன் இந்தத் துறையில் கரை கண்டவர். பாதுகாக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையைக் கூட ஆராய்ச்சிக்கு உட்படுத்தியவர்.
‘‘பையன்கள் பொதுவாக எவ்வளவு படித்தாலும் அதைத் தேர்வில் எழுதக் கஷ்டப்படுவார்கள். பெண்கள் இதில் கலக்குவார்கள். காரணம், ஞாபக சக்தியும் மொழித்திறனும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். ஆனால், தூரத்தில் வருகிற ஒரு பேருந்து என்ன வேகத்தில் வருகிறது? எவ்வளவு மில்லி செகண்டில் அது நம் மேல் மோதும் என்றெல்லாம் ஆண்கள் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு விடுவார்கள். காரணம்... ஆண்களின் மூளை, இயற்பியல் மூளை. இதனால்தான் மெக்கானிக்கல் படிப்புகளிலும் பந்து விளையாட்டுகளிலும் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்’’ என்கின்றன சாண்ட்ரா வில்சனின் ஆய்வுகள்.
ஆக, கணிதம் மற்றும் இயற்பியல் சார்ந்த படிப்புகள் ஆண்களுக்கு. மொழித்திறன் மற்றும் நினைவாற்றல் சார்ந்த படிப்புகள் பெண்களுக்கு. இப்படித்தான் பாடத்திட்டம் வகுக்க திட்டமிட்டிருக்கிறது இங்கிலாந்து. வழக்கம் போல இது கூடாதென்று அங்கே சிலர் கொடி பிடித்தாலும், ஆதரவுக் குரல் அதிகம் இருக்கிறது. ‘‘உடலளவில் ஆண்கள் பலசாலிகள் என்பதால், விளையாட்டுகள் எல்லாம் பெண்களுக்கென்று தனியாகத்தானே நடத்தப்படுகின்றன. அது போல, மூளை அடிப்படையில் பெண்கள் பலசாலிகள் என்பதால் பையன்களுக்கென்று தனித் தேர்வு நடத்தலாம்’’ என்று சில பெண்கள் அமைப்புகளே சொல்கின்றன.
இப்போது நம் ஊருக்கு வருவோம்... திவ்யாவுக்கு அப்படியொரு துரதிர்ஷ்ட சம்பவம் நேர்ந்தது 2005ம் ஆண்டில்! இப்போது அவளுக்கு கிட்டத்தட்ட திருமண வயது. அவள் படிப்பு இப்போது பொருட்டே இல்லை. வேறு கவலைகள் பெற்றோருக்கு. ஆணும் பெண்ணும் சமம்... ஆனால், ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. எந்தக் கட்டத்திலும் அவர்களை ஒப்பிடக் கூடாது என்பதை அவள் அப்பா இப்போது புரிந்து கொண்டுவிட்டார்.
நமக்கு எல்லாமே லேட்டாத்தானே புரியும்!
எட்டும் அறிவினில் ஆணை விட பெண் ஒரு படி மேலே என்பதற்கு எக்கச்சக்க ஆதாரங்களைப் பார்த்துவிட்டோம். அழகில் யார் உசத்தி... ஆணா? பெண்ணா?
பெண் மூளையில் வலிமை பெற்றிருப்பவை...விளைவு...ஃப்ரன்டல் லோப், லிம்பிக் கோர்டக்ஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதிலும் முடிவெடுப்பதிலும் எக்ஸ்பர்ட்.கார்பஸ் கொலாசியம் துரிதமான சிந்தனை ஹிப்போகாம்பஸ் மொழி மற்றும் பேச்சுத்திறன் செரொடோனின் சுரப்பு அவசரத் தவறுகள் இல்லவே இல்லை! அதிக ரத்த ஓட்டம் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது கடந்த இதழில் விவரித்திருந்த சிம்மட்ரிக் முகம் நிறைய பேரை யோசிக்க வைத்திருக்கிறது. ‘‘நம்ம ஊர் நகைகள்லயே பெரும்பாலும் முகத்தோட ஒரு பக்கத்தில் மட்டும் அணியிறதுன்னா அது மூக்குத்திதான். ஒருவேளை ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி சிம்மட்ரிக்கா இல்லாத முகத்தை பேலன்ஸ் பண்றதுக்காகத்தான் மூக்குத்தி வந்திருக்குமோ!’’ - வாசகர் ஒருவர் தொலைபேசியில் எழுப்பிய கேள்வி இது.
இது பற்றி கருத்து சொல்ல ஆராய்ச்சிகள் இல்லை எனக் கை விரித்தார்கள் நிபுணர்கள். ‘ஆராய்ச்சிதானே... நாமே பண்ணுவோம்’ என இறங்கினோம்! கீழே இருக்கும் படங்களில் 4ம் இடத்தில் இருப்பவர் ராசேல். அமெரிக்க நடிகை. சிம்மட்ரிக் முகம் இல்லை... ஆனால், வி.ஐ.பி என்ற லிஸ்ட்டில் இவர் பெயர்தான் நம்பர் ஒன். அவரை நம்மூர் கலருக்குக் கொண்டு வந்து இந்திய மாடல்கள் சிலரோடு வைத்தோம்.
கீழிருக்கும் இந்தப் பட வரிசையை பலரிடமும் காட்டியபோது பாதிக்குப் பாதி பேர் தங்களை ஈர்க்காத முகம் எனத் தேர்ந்தெடுத்தது ராசேலைத்தான். அடுத்த படத்தில் ராசேலுக்கு ஒரு மூக்குத்தி மட்டும் வைத்தோம்.
இப்போதும் கிட்டத்தட்ட அதே 50 சதவீதம் பேர் ராசேலைப் பிடிக்கவில்லை என்றார்கள். ஆனால், அதில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தது. மூக்குத்தி இருக்கும் முகம் பெண்களை விட ஆண்களை அதிகம் ஈர்க்கிறது. அதாவது, மூக்குத்தி போட்ட பின் ராசேல், 23.6 சதவீதம் அதிக ஆண்களை ஈர்த்திருந்தார். ஸோ, மூக்குத்தி என்னவோ செய்கிறது. எந்தப் பெண்ணையும் அழகாகக் காட்டி நம்ம தலையில் கட்டி வைத்து விடும் அளவுக்கு விவரமான விஞ்ஞானிகள்தான் நம் முன்னோர்கள்!
(தேடுவோம்)