யார் பொறுப்பு?



மீண்டும் ஒரு துயர டிசம்பர். முன்பு ஓடும் பஸ்ஸில்; இப்போது காரில். பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த டெல்லி மாணவிக்கு இரண்டாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டங்களை நடத்தும் நேரத்தில், மீண்டும் பெண்கள் அமைப்புகள் வீதியில்! உபர் நிறுவன டாக்சியில் டிரைவரால் ஒரு பெண் நிர்வாகிக்கு அதேபோன்ற கொடுமை நிகழ்ந்திருக்கிறது!

இதுபோன்ற உணர்ச்சிகரமான குற்றங்கள் நிகழும்போது, எளிமையான இலக்குகள் மீது பழி சுமத்தி, பிரச்னையை திசை திருப்புவது நம் அதிகார வர்க்கத்தின் வழக்கம். இப்போதும் அப்படி இலக்காகி இருப்பது உபர் நிறுவனம். மொபைல் போன் மூலம் கால் டாக்ஸி புக் செய்யும் இந்த நிறுவனம்தான் பாலியல் பலாத்காரத்துக்கே காரணம் என்பது போல அந்த நிறுவனத்தை துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறார்கள். இந்தச் சூழலில் தவிர்க்க இயலாமல் சில கேள்விகள் எழுகின்றன...

* கொடூரக் குற்றம் புரிந்த டிரைவர் சிவகுமார் யாதவ் மீது 8 வழக்குகள் உள்ளன. டெல்லியிலேயே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி 7 மாதம் சிறையில் இருந்திருக்கிறான். சொந்த ஊரிலும் ஒரு பாலியல் வழக்கு, ஒரு மானபங்க வழக்கு, குண்டர் சட்டத்தில் இரண்டு வழக்குகள்... இவ்வளவு குற்றப் பின்னணி உள்ள ஒருவனால், போலீஸில் வெறும் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நன்னடத்தை சான்றிதழ் வாங்க முடிந்திருக்கிறது என்றால், தவறு யார் மீது?

* இப்படி நன்னடத்தை சான்றிதழ் வாங்கி வரும் டிரைவர்களுக்குத்தான் உபர் நிறுவனம் சவாரி கொடுக்கிறது. ஆனால் இப்படி காசு கொடுத்து வாங்கும் டுபாக்கூர் சான்றிதழ்கள்கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் இந்தியா முழுக்க வாகனம் ஓட்டுகிறார்கள். அவர்களின் நடத்தையைக் கண்காணிப்பது யார்?

* உபர் நிறுவனம் சட்டவிரோதமாக டாக்சி சேவையை நடத்தி வந்திருக்கிறது எனச் சொல்லி டெல்லியிலும் ஐதராபாத்திலும் தடை செய்திருக்கிறார்கள். மற்ற நகரங்களிலும் விரைவில் செய்வார்கள். ஆனால் இப்படி போனிலும் இணையத்திலும் புக் செய்யும் டாக்சி சேவையை இது போல பல நிறுவனங்கள் பல மாதங்களாக நடத்துகின்றன; பெரிய அளவில் விளம்பரமும் செய்கிறார்கள். இது சட்டவிரோத சேவை என்றால், இத்தனை நாட்களாக இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

* இரவு நேரத்திலும் பெண்கள் வேலை செய்யும் அளவுக்கு தனியார் நிறுவனங்களில் பணிச்சூழல் மாறியிருக்கிறது. இப்படி நேரங் கெட்ட நேரத்தில் பயணிக்க நேரும் பெண்களுக்கு பஸ், ரயில் சேவை உள்ளதா?இதற்கெல்லாம் பொறுப்பேற்று பதில் சொல்வதைவிட ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின்மீது பழி போடுவது எல்லோருக்கும் வசதியாக இருக்கிறது.

- அகஸ்டஸ்