கள்ளக்காதல்... அப்படி ஒண்ணு இருக்கா?
‘செக்ஸுக்காக ஆண் கொடுக்கும் விலை கல்யாணம்...
கல்யாணத்துக்காக பெண் கொடுக்கும் விலை செக்ஸ்!’
- ஆங்கிலப் பழமொழி
கள்ளக்காதல்... வெறும் நியூஸாகவும் நியூசென்ஸாகவும் இந்த வார்த்தையை நாம் கடந்துபோகிறோம். எட்டு காலம் செய்தியென்றாலும் வார்த்தை விடாமல் படித்துவிட்டு ‘காலம் கெட்டுப் போச்சு’ என கமென்ட் உதிர்க்கிறோம். ஆனால், ஒரிஜினல் கள்ளக்காதலர்களை நேரடியாக உட்கார வைத்து, ‘ஏம்மா, இப்படிப் பண்றீங்களேம்மா?’ எனக் கேட்டிருக்கிறோமா? ‘எப்படி பாஸ்? இவிங்கல்லாம் சிக்குற வரை ஸ்லீப்பர் செல்ஸ் மாதிரி.
எவன், ‘நான் கள்ளக்காதல் பண்றேன்’னு ஒப்புக்குவான்?’ என்கிற உங்கள் ஆதங்கம் புரிகிறது. நமது நண்பர் ஒருவர் ஒப்புக்கொண்டார். பெயர்களை விடாமல் மனம்விட்டு நம்மிடம் பேசினார். ஒரு அசல் கள்ளக்காதல் கதை... அவர் சொல்லும் நியாய தர்மம் அறிவோம் வாருங்கள்!
‘‘கள்ளக்காதல்... இந்த வார்த்தையிலயே எனக்கு உடன்பாடில்ல. உலகத்தில் காதல் மட்டும்தான் இருக்கு. காதல்தான் உலகமே. ‘கபி அல்விதா நா கெஹ்னா’னு ஒரு ஹிந்திப் படம். அதில் ராணி முகர்ஜிக்கு கல்யாண ஏற்பாடு நடந்துக்கிட்டிருக்கும். அது பிடிக்காம அவங்க வெளிய வந்து உட்கார்ந்திருக்கும்போது, ஷாருக்கை சந்திப்பாங்க.
‘எனக்காகப் பிறந்த ஒருத்தரை நான் இன்னும் பார்க்கல. அதுக்குள்ள இப்படி ஒரு கல்யாண ஏற்பாடு. ஒருவேளை இந்தக் கல்யாணத்துக்கு அப்புறம், அப்படி ஒருத்தரை நான் பார்த்தா என்னாகும்?’னு கேப்பாங்க. அது மாதிரி ஒரு சம்பவம்தான் எங்க வாழ்க்கையில நடந்தது.
என் மனைவி மேல எனக்கு கோவமோ, அதிருப்தியோ இல்ல. அவளை நான் நேசிக்கிறேன். ஆனா, அவளை விட இன்னொருத்தியை அதிகம் நேசிக்கிறேன். அதுதான் என் பிரச்னை. நான் நேசிக்கிற அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா நீங்க ‘சிந்து பைரவி’ கதைன்னு இதை ஏத்துக்குவீங்க. ஒருவேளை என் வீட்டுக்காரி ஒரு சிடுமூஞ்சியாவும் இருந்துட்டா, ‘அட, ‘முதல் மரியாதை’ மாதிரி’ன்னு சப்போர்ட் கூடப் பண்ணுவீங்க.
ஆனா, அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல. அவளுக்கு கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. இதுக்கு மேல பேசப் பேச, என் மேல கோவம் வரும்னு தெரியும். ஆனா, வேற வழியில்ல. நம்ம சொசைட்டியில கல்யாணமான பொண்ணை ஒருத்தன் லவ் பண்றான்னா, ஒண்ணு அது ஜோக்... இல்லாட்டி அருவா வெட்டு. இதான் தெரியும். யாரும் யாரையும் புரிஞ்சிக்க ட்ரை பண்றதில்ல!
சொல்லப் போனா, கல்யாணம் ஆகாத ரெண்டு பேர் பண்ற காதலை விட இது ஒரு படி மேல. ‘மாட்டிக்கிட்டா உயிர் போயிடும்’னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும். ஆம்பளைக்கு இது பெருமை. அவளுக்கு அப்படியில்லை. விஷயம் வெளிய தெரிஞ்சா, கேவலமா ஒரு பேர் சொல்லிக் கூப்பிடுவாங்க. இவ்வளவு ரிஸ்க் இருந்தும் துணிஞ்சு என்னை அவ பார்க்க வர்றாள்னா, அவளுக்காக நான் உயிரையும் கொடுக்கலாம்.
‘என்னடா... உங்க உறவுல உடம்பே இல்லையா’ன்னு கேக்காதீங்க. Yes, we had sex. ஆனா, அதை யாரும் நாள் குறிச்சு நடத்தல. அந்தத் தனிமை, தைரியம், தொடுதல் எல்லாமே எங்க கட்டுப்பாட்டை மீறி, இயல்பா, ஒரு கவிதை மாதிரி நடந்தது. எனக்கு அவ முதல் முறை இல்ல. அவளுக்கும் நான் முதல் முறை இல்ல.
ஆனா, எங்க ரெண்டு பேருக்குமான நிறைய ‘முதல்முறை’ விஷயங்களை அந்த நாள் எங்களுக்குத் தந்துச்சு. என் முதலிரவை விட அந்த நாள் எனக்கு ஸ்பெஷல். நம்ம சடங்கு, சம்பிரதாயம், சட்ட திட்டத்தை வச்சிப் பார்த்தா இது பாவம்தான்... பொண்டாட்டிக்கு செய்யிற துரோகம்தான். ஆனா, மனசு அப்படி நினைக்கல. சொல்லப் போனா, என் மனைவியைத் தொடும்போதுதான் ‘அவளுக்கு’ துரோகம் செய்யிற மாதிரி தோணுது. என்ன செய்யச் சொல்றீங்க?
நான் இப்ப பார்க்குற வேலையைப் பார்க்கலைன்னா, இப்ப வாங்குற சம்பளத்தை வாங்கலைன்னா, என் மனைவி வேற யாருக்கோ மனைவியா இருந்திருப்பாங்க. இவ்வளவுதானே நம்ம சட்டதிட்டம்?
ஆனா, நான் எப்படி இருந்தாலும், யாரா இருந்தாலும் என் தோழி இதே மாதிரி என்னோட இருந்திருப்பா. எந்த ஆதாயமும் எதிர்பார்க்காத உண்மையான அன்பு அவகிட்ட மட்டும்தான் இருக்கறதா நான் நினைக்கிறேன். என்ன சொன்னாலும் இது தப்புதான். ஆனா, மனசு கேக்கலையே?’’
இதுதான்... நம் நண்பரின் confusion இல்லாத confession. நம் ஊரில் திருமணம் தாண்டிய உறவு பற்றி இவ்வளவு பேசவே ஆளில்லை. ‘கள்ளக்காதலா? இந்த பூமியிலா? புல்ஷிட்! சுட்டுப்புடறேன் சுட்டு’ என நம் நண்பரும் நம்மிடம் நடித்திருக்கலாம். ஆனால், அவர் உண்மை பேசினார். நன்றி. அதற்காக, அவர் சொன்னதெல்லாம் சரியென்று அர்த்தமா?தன் படங்களில் பாலியல் பிறழ்வுகள் குறித்து பயமின்றி பேசிய இயக்குநர் சாமியிடம் கேட்டோம்...
‘‘இதே ஆள் தன்னுடைய மனைவி இன்னொருவரை மனமார காதலிக்கிறார் என்றால் ஒப்புக்கொள்வாரா? விவாதத்தை விடுங்கள்... நடைமுறையில் அது சாத்தியமே இல்லை. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஆண் - பெண் சமத்துவம் இல்லையென்றாலும் குடும்பம் என்ற செட்டப் இருக்கிறது. அது நமது வரம்.
அந்தக் குடும்பத்தில் உணர்வு ரீதியாகவோ உடல் ரீதியாகவோ திருப்தி இல்லாமல் சிலர் தடம் மாறலாம். திருப்தி இருந்தாலும் மனம் கூடுதல் எதிர்பார்ப்போடு அலை பாயலாம். ஆனால், அது குடும்பம் என்ற செட்டப்பை கலைத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த உணர்வு சமம்’’ என்றார் அவர்.
உயிரியலின்படி, ‘‘ ‘புனிதமான காதல்’ என்பதே உலகில் இல்லை’’ என்கிறார் உளவியலாளரான பார்பரா ஃப்ரெடரிக்சன். அப்புறம் ‘புனிதமான கள்ளக்காதல்’ மட்டும் எங்கிருந்து வரும்? காதல் என்பதை உடல் சார்ந்தும், உயிரியல் சார்ந்தும், டார்வினின் ‘நேச்சுரல் செலக்ஷன் தியரி’ப்படியும் புரிந்துகொள்ளாமல், ‘அது மனசு... ஆன்மா பேசும் மொழி... டவுன் டு எர்த்’ என டகால்டி வேலை காட்டியதன் விளைவு இது. சமீபத்தில் வந்த ‘காவியத்தலைவன்’ படத்தில், கதாநாயகி ‘உன்னைப் போல ஒரு குழந்தை எனக்கு வேண்டும்’ என்கிறாள்.
ஆரம்பம் முதலே இத்தனை நேரடியாக காதலை நாம் அணுகியிருந்தால் பிரச்னையே இருந்திருக்காது. அணுகவில்லையே! நாம் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் அல்லவா காதல் பண்ணிக்கொண்டிருந்தோம்!இது மாதிரி உறவுக்கு வேறு என்னென்ன அடிப்படை? இப்படிப்பட்ட கதைகளின் மீது நமக்கெல்லாம் ஆர்வமும் வெறுப்பும் கலந்திருப்பது ஏன்? ஆணுக்கு மட்டும் திருமணம் ஆகி, பெண் மணமாகாமல் இருந்தால் அது க.காதலா? சி.வீடா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
சொல்லப் போனா, என் மனைவியைத் தொடும்போதுதான் ‘அவளுக்கு’ துரோகம் செய்யிற மாதிரி தோணுது. என்ன செய்யச் சொல்றீங்க?
உன்னை மாதிரி மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்!
உங்களை மாதிரி கணவர் கிடைக்கவும் கொடுத்து வச்சிருக்கணும்!
சரி விடுங்க...
குடுத்து வச்ச அந்த ரெண்டு பேரைப் பத்தி இப்ப என்ன பேச்சு?
தேடுவோம்...
கோகுலவாச நவநீதன்