கெத்து போலீஸ்... ஆக்க்ஷன் சிவகார்த்தி!



அடி ஆத்தீ... போலீஸ் உடையில் சிவகார்த்திகேயன்! நெற்றி சுருங்குகிற கடுமையில், முகம் முழுக்க புன்னகையில், ஸ்ரீதிவ்யா அன்புப் பிடியில் சிவகார்த்தி... மேனி பளபளக்கிற ஸ்ரீதிவ்யா... உச்சந்தலையில் ஐஸ்கட்டி வைக்கிறது ‘காக்கி சட்டை’யின் புகைப்படங்கள். சந்தோஷமாக சிரிக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். ‘எதிர்நீச்சல்’ போட்டு வெற்றி கண்டவர். பாலுமகேந்திரா வின் வழித்தோன்றல்!

‘‘‘டாணா’ன்னுதான் இந்தப் படத்திற்கு பெயர் வச்சோம். ஏற்கனவே வெளிவந்த படத்தின் தலைப்பை வைக்க தயக்கம். முடிஞ்ச வரைக்கும் அதைத் தவிர்க்கப் பார்த்தோம். ஆனால், ‘டாணா’ என்பது தமிழ்தானான்னு சந்தேகம் வந்திடுச்சு.

‘காக்கி சட்டை’ அப்படி பொருத்தமா இருந்தது. தாத்தா பெயரை பேரனுக்கு வைக்கிறதில்லையா, இதுக்கு முன்னாடி உதாரணம் இல்லையா, யாருமே இதை செய்யாமலா இருக்காங்க என அடுக்கடுக்கான சமாதானங்களால் இப்ப அதே பேரையே வச்சிட்டோம். நீங்க படம் பார்த்தா அவ்வளவு கச்சிதமா இருக்கும். சிவா இதற்கு செய்திருக்கிற நியாயம் அவ்வளவு நல்லா இருக்கு!’’

‘‘போலீஸ் கதைன்னா நிறைய நல்ல உதாரணங்கள் ஏற்கனவே இருக்கு. இந்தக் ‘காக்கி’ எப்படி இருப்பார்?’’

‘‘முதல்ல இந்தக் கதையோட ஆதி அந்தம் பேசுவோம். வெற்றிமாறன் ‘சீக்ரெட்’னு ஒரு புத்தகம் கொடுத்தார். அதனோட சாராம்சம் என்னன்னா, ‘நாம் விரும்புகிற எதையும் ஆத்மார்த்தமா நினைக்கணும். அப்படியே ஆவோம்னு நம்பணும். மொத்தமும் அந்த நினைப்பின் உருவா மாறணும். அப்படி இருந்தா நாம் நினைக்கிறது எல்லாமே சாத்தியம்’னு அந்தப் புத்தகம் மேற்கொண்டு விவரிச்சுக்கிட்டுப் போகும். அந்தப் பொறிதான் இந்தக் கதைக்குத் தூண்டுதல்.

தவிர, ‘எதிர்நீச்சல்’ கொடுத்த வெற்றியில், ஒரு தயாரிப்பாளரா தனுஷ் எங்களுக்கு நிறைய சுதந்திரம் வழங்கியிருந்தார். உங்களுக்கு விருப்பமான கதை, செயல்பாடு, வேண்டிய செலவுன்னு ஒண்ணும் குறையே வைக்கலை. எனக்கு அடுத்த முயற்சிங்கிறது எப்பவும் ஆசிட் டெஸ்ட். எப்பவும் முதல் வெற்றியை சும்மா அதிர்ஷ்டம்னு சொல்லிக்குவாங்க.

அப்படி விட்டுட முடியாமல் உழைக்கணும். சிவகார்த்தி நல்ல ஃபார்மில் இருக்கார். தியேட்டர்களின் கைதட்டல், அடுத்தடுத்த வெற்றி, கவனம்னு ரொம்ப ஜாக்கிரதையா இருக்கார். இது ஒரு சாமான்யன் ஜெயிக்கிற கதைதான்.

போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போய்ப் பார்த்தவங்க எல்லாம் இதை அறிஞ்சிருக்கக் கூடும். ஆனா, ‘இதுல இப்படியும் ஒரு கதை இருக்குமா’ன்னு இந்தப் படம் பார்த்த உடனே புரியும். இன்னிக்கு பெருசா விரும்பப்படுற ஹீரோவான சிவகார்த்திக்கு இந்த ஸ்கிரிப்ட் நம்பிக்கை தந்தது.

ல்லாம் சேர்ந்து வந்து நின்னது தான், ‘காக்கி சட்டை’. ஆச்சரியம் என்னன்னா, இதோ இப்ப பொங்கல் ரிலீஸுக்கு ஒவ்வொரு நிமிஷமும் படம் ரெடியாகிட்டு இருக்கு. இன்னும் தனுஷ் சார் படத்தோட ஒரு ஃப்ரேம் கூட பார்க்கலை. எங்களை வளர்த்தவர் அவர்தான். இப்ப அடுத்த கட்டத்தில் வச்சுப் பார்க்க ஆசைப்பட்டிருக்கார். இனிமே, அவர்தான் பார்த்துட்டு சொல்லணும்!’’

‘‘எப்படி இருக்கார் சிவகார்த்திகேயன்?’’

‘‘இந்தப் படத்தோட எமோஷனலா அட்டாச் ஆனார் அவர். அது எங்களுக்கு பெரிய பலம். இந்த யூனிஃபார்ம் போட்டதில் அவர் காட்டிய அக்கறை, நடை, உடை, பாவனை எல்லாமே புதுசு. எது ஒண்ணையும் கேலி பண்ணி கலாட்டா பண்றது இதில் இல்லை. அவங்க அப்பா சிறையில் ஜெயிலரா வேலை பார்த்து திடீர்னு மறைந்தவர்.

இவர் வளர்ச்சியைப் பார்க்க அவங்க அப்பா கொடுத்து வைக்கலை. ‘என்ன செஞ்சு என்ன!’ன்னு ஒரு ஆழமான வருத்தம் அவர் மனசுக்குள்ள உறங்கிக் கிடந்திருக்கு. அது இந்த யூனிபார்ம் போட்டதும் வெளியே வந்திடுச்சு. ரொம்ப அருமையான நடிப்பு. அவ்வளவு இயல்பு. நிச்சயமா குறை வைக்க மாட்டார்!’’

‘‘தொடர்ந்து சிவகார்த்தியை வைத்து இயக்குவதை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘இத்தனைக்கும் பி.இ., எம்.பி.ஏ.ன்னு பெரிய படிப்பு படிச்ச ஹீரோ அவர்தான். அவர்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இந்தியில் ஷாருக் ஒரு படத்திற்கு எப்படி ப்ரொமோஷன் பண்றார், அங்கே எடுக்கிற படங்களின் டிரெய்லர் பத்தியெல்லாம் கூட விரல் நுனியில் தகவல் வச்சிருக்கார். ஆரம்பத்திலேயே கல்யாணமாகிட்டு வந்ததாலோ என்னவோ, வேற பக்கம் திரும்பிப் பார்க்கிறது இல்லை. சினிமாவில் மட்டும்தான் ஃபோக்கஸ்.

அக்கறை, எப்படியும் ஜெயிக்கணும்ங்கிற வெறி, செலக்ஷன், அதிர்ஷ்டம் கொஞ்சம்னு எல்லாமே சேர்ந்தது தான் அவரின் வெற்றி. எப்பவும் அப்டேட் பண்ணிக்கிட்டே இருப்பார். ஸ்கிரிப்ட் என்பது எழுதி வச்சதோடு முடிஞ்சிடுறதில்லை... ஷூட்டிங், அது முடிஞ்சு எடிட்டிங் டேபிள் வரைக்கும் இன்னும் அதில் வேலையிருக்குன்னு நாங்க நம்புறோம்!’’
‘‘உங்களுக்கு அனிருத் ஸ்பெஷலா இசை அமைக்கிறார்...’’

‘‘அவரைப் பார்க்கவே சந்தோஷமா இருக்கும். படு சுறுசுறுப்பா, இன்றைய இளைஞர்களின் இசையில் ஒன்றிப் போய் கிடப்பது பார்த்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. ஐந்து பாடல்கள். பாடல்கள் வைக்கிற இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் அவ்வளவு கவனமா இருக்கிறது அவரது ஸ்பெஷல்!’’‘‘ஸ்ரீதிவ்யாவை மறுபடியும் சிவாவுக்கு ஜோடியாக்கிட்டீங்க..?’’

‘‘அந்த ஜோடி அவ்வளவு ஹிட் ஆச்சே! அந்த ‘ஊதா கலரு ரிப்பனை’ மறக்க முடியுமா? அந்த ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ‘காக்கி சட்டை’ வரைக்கும் அள்ளுது. சமீபத்தில் இப்படி ஒரு ஆன் ஸ்கிரீன் ஜோடியை நீங்க மறுபடியும் பார்த்திருக்க மாட்டீங்க. ஏற்கனவே அறிஞ்சு தெரிஞ்சதாலோ என்னவோ, இதில் இன்னும் கொஞ்சம் நெருக்கம். அழகும் அள்ளுது... துள்ளுது!’’ஆக, பொங்க லுக்கு ஸ்டார் வேட்பாளர் ‘காக்கி சட்டை’ சிவகார்த்திகேயன்தான்!

- நா.கதிர்வேலன்