மீனவர்களை இலங்கை மிரட்டக் காரணம் சீனா?



தினசரி செய்தித்தாள்களில் ராசி பலன் இருக்கிறதோ, இல்லையோ... தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் படும் அல்லல் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடியே இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் பேசி, தூக்குக் கயிற்றின் நிழலிலிருந்து ஐந்து மீனவர்களை மீட்ட பிறகும் மீனவர்கள் கைது தொடர்கதைதான்.

 இந்நிலையில் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்து, தமிழக பாரதிய ஜனதா களத்தில் குதித்திருக்கிறது. ஆனால், ‘‘இலங்கையின் தொடர் வம்படிகளுக்குப் பின்னணியில் இருப்பது சீனா. அதை உணராத சமரசங்களில் அர்த்தமில்லை’’ என அதிர வைக்கிறார்கள் ஒரு தரப்பினர்.    

உலகில் வேறெந்த நாட்டு மீனவனும் இவ்வளவு இன்னல்களை எதிர்கொண்டதில்லை. ஒரு குட்டி கடல் பரப்பு. பரஸ்பரப் புரிதல்களோடு தொழில் செய்த பல நூற்றாண்டு சரித்திரத்தை சில பத்தாண்டுகளில் குலைத்துப்போட்டு விட்டது இலங்கை. அடித்து விரட்டினார்கள். படகுகளையும் வலைகளையும் அள்ளிச் சென்று நிர்க்கதியாக்கினார்கள். துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். இப்போது அவர்கள் ஏந்தியிருக்கிற ஆயுதம், தூக்குக்கயிறு. இலங்கையை ஒட்டிய கடற்பரப்பில் தொழில்செய்யும் மீனவர்கள் கடலுக்குள் இறங்கவே அஞ்சும் நிலை.

500க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிரைக் குடித்த பிறகும், ஆயிரக்கணக்கான மீனவர்களை ஊனமாக்கி வாழ்வாதாரத்தை முடக்கிய பிறகும் கூட இலங்கையின் வன்மம் தீரவில்லை. ‘‘மடிவலை பயன்படுத்தி மொத்த நீர்வாழ் உயிரினங்களையும் வாரிச் சென்று எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறார்கள்’’ என்பதே இலங்கை வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால், ‘‘இது முனை மழுங்கிய குற்றச்சாட்டு’’ என்று இலங்கைத் தமிழ் மீனவர்களே வருந்துகிறார்கள்.

‘‘இலங்கையின் பாரம்பரிய மீனவர்கள் சிறு கடல் மீனவர்கள்தான். அதுவும் அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மீனவர்கள், கடற்கரையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்குள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும். ஆனால் சிங்களர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

‘மடிவலை பயன்படுத்துகிறார்கள்’ என்று கூறி தமிழக மீனவர்களைக் கைது செய்யும் அரசு, தமிழர் கடற்பகுதிகளில் சர்வ சாதாரணமாக சிங்கள மீனவர்களைக் கூட்டிவந்து குவித்து, மடிவலை கொடுத்து ராணுவப் பாதுகாப்போடு தொழில் செய்ய வைக்கிறது. நாங்கள் அதைப் பயன்படுத்தினால் கைது செய்கிறார்கள்.

தமிழக மீனவர்களோடு எங்களுக்கு பாரம்பரிய பந்தம் உண்டு. பிரச்னைகளை பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால், அதைக் கடந்த வன்மங்களே இந்தப் பிரச்னையை ஆட்டுவிக்கிறது...’’ என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு யாழ்ப்பாண மீனவர்.

தமிழக மீனவர்களை இலங்கை ஒடுக்குவதன் பின்னணியில் சீனா இருப்பதை சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘‘இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக மாறியிருக்கிற சீனா, வாழ்வாதார முன்னேற்றம் என்ற பெயரில் அங்கு கால்பதித்து பெரும் முதலீடுகளைக் கொட்டியிருக்கிறது. ரயில்வே, மின் உற்பத்தி, ராணுவ தளவாடங்கள் என பலதுறைகளில் பங்களிக்கிற சீனா, இலங்கை பொருளாதாரத்தையே தீர்மானிக்கிற சக்தியாக வளர்ந்திருக்கிறது.

தவிர, இந்தியாவுக்கு எதிரான ராணுவ கேந்திரமாக இலங்கை கடற்பரப்பைப் பயன்படுத்தவும் முனைகிற சீனா, அதற்கு இடைஞ்சலாக இருக்கும் தமிழக மீனவர்களை அகற்றுமாறு இலங்கையை நிர்ப்பந்திக்கிறது’’ என்கிறார்கள் விபர மறிந்த வல்லுனர்கள். இலங்கை விவகாரத்தை தீவிரமாக கவனித்து வரும் மூத்த ஊடக
வியலாளர் அய்யநாதனும் இக்கருத்தை ஆமோதிக்கிறார்.

‘‘முன்பு மீன்பிடித் தொழில் பாரம்பரிய மீனவர்கள் வசமே இருந்தது. இப்போது அது ‘கார்ப்பரேட்’மயமாகிவிட்டது. ‘கார்ப்பரேட் ஃபிஷ்ஷிங்’ எனப்படும் பெரும் மீன்பிடித் தொழிலில் உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு பெரு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. பெரிய பெரிய கப்பல்களில் எந்திரங்களைப் பொருத்தி, ஆறேழு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வலைகளை வீசி ஒட்டுமொத்த கடல்வளத்தையும் கொள்ளையிடுவதுதான் ‘கார்ப்பரேட் ஃபிஷ்ஷிங்’.

 ஒருமுறை கடலுக்குள் இறங்கினால் 5000 டன்னுக்கு மேல் கடலுயிரிகளை அள்ளிச் சென்று விடுவார்கள். மன்னார் வளைகுடா, குமரியின் ‘வாட்ச் பேங்க்’ எனப்படும் கடலுயிர் மண்டலம், அந்தமான்-நிகோபர் தீவுகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் எல்லாம் மிகவும் வளமான பகுதிகள். குறிப்பாக மன்னார் வளைகுடா உலகின் மிகச்சிறந்த நீர்வாழ் உயிரின மண்டலம். இப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ட்யூனா போன்ற ஏற்றுமதித்தரம் வாய்ந்த மீன்கள் நான்கடி, ஐந்தடி வளர்ந்தபிறகு இங்கிருந்து இடம்பெயர்ந்து ஆழ்கடலுக்குள் செல்லும்.

இதுபோன்ற பெரிய மீன்கள்தான் ‘கார்ப்பரேட் ஃபிஷ்ஷிங்’ தொழிலின் இலக்கு. மன்னார் வளைகுடாவை இலக்காக வைத்து தொழில் செய்யும் ராமேஸ்வரம் வட்டார மீனவர்களை இவர்கள் பெரும் தொந்தரவாகப் பார்க்கிறார்கள்.

 அதனால்தான் தமிழக மீனவர்களை இலங்கை அடித்து விரட்டுகிறது. இலங்கையில் அதிக அளவில் ‘கார்ப்பரேட் ஃபிஷ்ஷிங்’ செய்வது சீன நிறுவனங்கள்தான். அண்மையில் இரண்டு பெரிய சீனக் கப்பல்கள் நம் கன்னியாகுமரி ‘வாட்ச் பேங்க்’ பகுதியில் மீன்பிடித்ததைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் போராட்டமே நடத்தியிருக்கிறார்கள்.

சீனா பல்வேறு விதங்களில் இலங்கை கடற்பரப்பை ஆக்கிரமித்திருக்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 100 கோடி டாலர் செலவில் நிர்மாணித்து அதை நிர்வகிக்கும் உரிமையையும் பெற்றிருக்கிறது சீனா. கொழும்புக்கு அருகில் ஒரு மிதவைத் துறைமுகத்தையும் 140 கோடி டாலர் செலவில் உருவாக்குகிறது.

அங்கு அணுவிசையில் இயங்கும் தன் நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்டு வந்து நிறுத்தி பயம் காட்டுகிறது. சீனா தரும் தைரியத்தில் இலங்கை இந்தியாவிடம் மேம்போக்காக நடந்து கொள்ளத் தொடங்கியுள்ளது’’ என்கிறார் அய்யநாதன்.

தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஜேசுராஜாவும் இலங்கையின் பின்னணியில் சீனாவின் கை இருப்பதை ஆமோதிக்கிறார்.
‘‘ராமேஸ்வரம் பகுதியில் 850 விசைப்படகுகளும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன.

ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் நாட்டிக்கல் மைல் இந்தியாவுக்குச் சொந்தம். இதில் 7 கடல் நாட்டிக்கல் மைல் வரை பாறைகள் இருப்பதால் அங்கு தொழில் செய்ய முடியாது. வெறும் 5 கடல்நாட்டிக்கல் மைல் கடல்பரப்பில் மட்டுமே இவ்வளவு படகுகளும் தொழில் செய்ய வேண்டும் என்கிறார்கள். நம் விசைப்படகுகளை வரிசையாக நிறுத்தினாலே இலங்கை எல்லையைத் தாண்டிவிடும். பிறகு எப்படி தொழில் செய்வது?

பல நூறு ஆண்டுகளாக மீனவர்களுக்குள் எல்லைப் பிரச்னை வந்ததில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே இலங்கை வன்மத்தோடு நடந்து கொள்கிறது. இதன் பின்னணியில் சீனா இருப்பதில் சந்தேகமில்லை.

அண்மையில், இலங்கை கடற்பரப்பில் இழுவலை பயன்படுத்தி மீன்பிடிக்க நான்கு சீனக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவில் சாதாரணமாக சீனர்கள் புழங்குகிறார்கள். இலங்கை கடற்படைப் படகுகளில் கூட சீனர்களைப் பார்க்க முடிகிறது...’’ என்கிறார் ஜேசுராஜா.

தமிழக மீனவர்களின் பிரச்னையை வெறும் எல்லைக்கோட்டுப் பிரச்னையாக மட்டுமே பார்த்து வருகிறது மத்திய அரசு. அதன் பின்னால் அண்டை நாடுகளின் வல்லூறு பார்வை இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தென்னிந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த விவகாரமாக இதைக் கையாளாவிட்டால் சூழல் விபரீதமாகும் என்கிறார்கள் களத்தில் இருப்பவர்கள். அண்மையில் இரண்டு பெரிய சீனக் கப்பல்கள் நம்கன்னியாகுமரி பகுதியில் மீன்பிடித்ததைக் கண்டித்துஅப்பகுதி மீனவர்கள் போராட்டமே நடத்தியிருக்கிறார்கள்.

வெ.நீலகண்டன்