குட்டிச்சுவர் சிந்தனைகள்



தொகுப்பாளர்: வணக்கம் நேயர்களே! ‘விடுவதெல்லாம் கப்ஸா’ நிகழ்ச்சிக்கு உங்களை மீண்டும் வரவேற்கிறேன். இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறவங்க, திரு.காந்திபாபு மற்றும் அவங்க மனைவி சாந்திபாபு.

சொல்லுங்கம்மா, உங்களுக்கு என்ன பிரச்னைன்னு சொல்லுங்க, நாங்க தீர்த்து வைப்போம். அப்படி பிரச்னையில்லாம இருந்தாலும் சொல்லுங்க, நாங்களே ஒரு பிரச்னைய உருவாக்கி, அதையும் தீர்த்து வைப்போம்.மனைவி: எங்களுக்கு நாலு பொண்ணுங்கம்மா!

தொகுப்பாளர்: நாலு பொண்ணுங்களா? நல்லெண்ணெய் நல்லா இருக்கலாம், மண்ணெண்ணெய் மண்ணா இருக்கலாமா? எதுக்கும்மா நாலு பொண்ணுங்க? ஏன் உங்க வீட்டுக்காரருக்கு வேலை இல்லையா?மனைவி: இல்லம்மா, எங்க வீட்டுக்காரர் குடும்பக் கட்டுப்பாட்டுத் துறையில ஜீப் டிரைவருங்க!தொகுப்பாளர்: குடும்பக் கட்டுப்பாட்டுத் துறையா? இதைத்தான் ஆங்கில அறிஞர் அரிஸ்டாட்டில் சொன்னாரு, ‘கோழி மிதிச்சு குஞ்சு சாகாது, குக்கர மூடாம சோறு வேகாது, துவைக்காம சட்டையில அழுக்கு போகாது, குளிர்காலத்துக்கு கூலிங் பீர் ஆகாது’ன்னு. என்னம்மா இப்படி பண்ணியிருக்கீங்களேம்மா? சரி, மேல சொல்லுங்க.

கணவன்: மேடம், எங்க மொதப் பொண்ணு ஓடிப்போச்சுங்க!தொகுப்பாளர்: இதை இப்படி சிரிச்சுக்கிட்டே சொல்லக்கூடாது. உங்க பொண்ணு ஒலிம்பிக் போட்டியிலயா ஓடிப் போச்சு? அந்த கேமராவ பார்த்து அழுதுக்கிட்டே சொல்லுங்க!மனைவி: இல்ல மேடம், எங்க மேட்டர பார்த்து ஊரே சிரிச்சுது. ஊரே சிரிக்கிறப்ப நாங்க சிரிக்கக் கூடாதா? அதுவும் மொத முறையா டி.வில எல்லாம் வர்றோம்.

தொகுப்பாளர்: ஊரோட சேர்ந்து சிரிக்க நீங்க காமெடி புரோகிராமா செஞ்சு இருக்கீங்க, ஏதாவது கேவலமாதான் செஞ்சு இருப்பீங்க. இப்ப நீங்க அழுதாத்தான் மக்கள் எங்க டிவிய பார்ப்பாங்க, இல்லன்னா வேற சேனலுக்கு மாறிடுவாங்க. எங்க... கால்ல சுடுதண்ணி கொட்டுன மாதிரி, கண்ல கண்ணீர் கொட்ட சொல்லுங்க.

மனைவி: அய்யய்யோ மேடம், எங்க மொத பொண்ணு... அய்யய்யோ லாரி டிரைவரோட... அய்யய்யோ ஓடிப்போச்சுங்க!தொகுப்பாளர்: நீங்க அவங்க காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இருப்பீங்க, இல்ல மிரட்டி இருப்பீங்க. மனைவி: சாம்சங் போனுக்கு சார்ஜரு நூறு தருவாங்க, சைனா செட்டுக்கு சிம்கார்டா யார் மேடம் வருவாங்க?

அப்போ நாங்க ஓடிப்போன எங்க ரெண்டாவது பொண்ண தேடிக்கிட்டு இருந்தோம். தொகுப்பாளர்: என்னம்மா இப்படி சொல்றீங்க? ரெண்டாவது பொண்ணும் ஓடிப்போச்சா? அது யார் கூட?மனைவி: ரெண்டாவது பொண்ணு பஸ் டிரைவரோட ஓடிப் போச்சுங்க மேடம்!

தொகுப்பாளர்: ஏம்மா? ஏம்மா இப்படி பண்ணுறீங்க? காதல் எல்லாம் அந்த அந்த வயசுல வர்றது இயல்பான விஷயம்மா. கால் புட்டின்னா குவாட்டரு, காதல் ஒரு காட்டாறு... ரெண்டையும் தடுக்க முடியாது, அதான் நீங்க புரிஞ்சுக்க வேண்டிய மேட்டரு.கணவன்: இல்லங்க மேடம். ஆக்சுவலா, எங்க மூணாவது பொண்ணுதான் இந்த பஸ் டிரைவர லவ் பண்ணுதுனு கண்டிச்சுக்கிட்டு இருந்தோம் மேடம். ஆனா, மூணாவது பொண்ணு வேன் டிரைவரோட ஓடிப் போன பிறகுதான், ரெண்டாவது பொண்ணுக்கு பஸ் டிரைவரோட லிங்க்னு எங்களுக்குத் தெரியும் மேடம்.

தொகுப்பாளர்: என்னங்க சொல்றீங்க? மூணாவது பொண்ணும் ஓடிப்போச்சா? இருங்க, இங்க ஒரு பேக்கிரவுண்ட் மியூசிக் ஒண்ணு போட்டுக்கிறோம். ஏம்பா, அந்த அதிர்ச்சி தர்ற, இடி இடிக்கிற மியூசிக்க கொஞ்சம் போடு! பின்னணி சத்தம்: டம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தொகுப்பாளர்: நாலு பொண்ணு பெத்து இருக்கீங்க. அதுல மூணு பொண்ணு பஸ் டிரைவர், லாரி டிரைவர், வேன் டிரைவர்னு ஓடியிருக்குங்க. இதுவா நீங்க குழந்தை வளர்த்த லட்சணம்? என்னம்மா, இப்படிப் பண்ணுறீங்களேம்மா? குழந்தைங்கள வாடிப் போகவே வைக்கக் கூடாது, இப்படி ஓடிப் போக வைக்கலாமா? கணவன்: இல்ல மேடம், எல்லா பொண்ணுங்களையும் பொன்னு மாதிரி மூடி போட்டுதான் வச்சிருந்தோம். இத்தனை கஷ்டத்துலயும் கௌரவமா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம் மேடம், அப்ப...

தொகுப்பாளர்: யோவ்வ்வ்! பேசாதய்யா... குடும்பக் கட்டுப்பாட்டுத் துறைல இருந்துக்கிட்டு, குடும்பத்த கட்டுப்பாடே இல்லாம வச்சிருக்க நீயி. டூத் பேஸ்ட்ல இல்லாம போகலாம் உப்பு... உன்னையெல்லாம் உட்கார வச்சு பேசிக்கிட்டு இருக்கிறதே தப்பு!மனைவி: அந்தாள பேச வேணாம்னு சொல்லுங்க மேடம். இவன்தான் மேடம், என் புருஷன்தான் மேடம், என் வாழ்க்கைய கெடுத்தவன்.தொகுப்பாளர்: என்னம்மா புதுசா சொல்றீங்க?

பின்னணி சத்தம்: டம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மனைவி: ஆமா மேடம், என் ஒரிஜினல் வீட்டுக்காரர் ஒரு டிராக்டர் டிரைவர் மேடம். இந்தாளு, குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பண்ண வந்த இடத்துல, என்கிட்ட அபச்சாரம் பண்ணிட்டாரு. சமாச்சாரம் வெளிய தெரிஞ்சதனால, நான் இவருக்கு சம்சாரம் ஆயிட்டேன் மேடம்.தொகுப்பாளர்: நான் பார்த்த பல கேசுல, பலான கேஸு இந்த கேஸ்தான்மா, எப்படித்தான் பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லப் போறேனோ? சரி,

இந்தக் குடும்பத்துலயும் பொறந்து, இப்ப உங்க நாலாவது பொண்ணாவது நல்லா
இருக்குதே...கணவன்: அதான் மேடம் பிரச்னை. இப்ப இந்த வாரம் என் நாலாவது பொண்ணும்
வேன் டிரைவரோட ஓடிப் போச்சு!

தொகுப்பாளர்: யோவ்வ்வ், கொன்னுடுவேன். நாலாவது பொண்ணு ஓடினது, மூணாவது பொண்ணு ஓடுன அதே வேன் டிரைவரோடவா?மனைவி: இல்ல மேடம், அது பால் வேன் டிரைவர், இது ஸ்கூல் வேன் டிரைவர்.

தொகுப்பாளர்: இது குடும்ப மாய்யா? இது குடும்பமா? ஸ்க்ரூ டிரைவர தவிர மீதி எல்லா டிரைவர் கூடவும் உங்க குடும்பத்துல இருந்து ஓடியிருக்கீங்க? அதை என்னமோ மெட்ராஸ் மராத்தான் ஓடுன மாதிரி பெருமையா சொல்ல வேற வந்திருக்கீங்க. இதெல்லாம் பஞ்சாயத்தாய்யா? இதெல்லாம் பஞ்சாயத்தா? நிகழ்ச்சிய முடிங்கய்யா. நேயர்களே, ‘விதையளவு இருந்தா அது சுண்டக்கா, விரலளவு இருந்தா அது வெண்டக்கா, ரெண்டையும் வதக்கி தின்னாளாம் சொர்ணாக்கா, இதையெல்லாம் பஞ்சாயத்துன்னு பார்க்குறியே நீயென்ன புண்ணாக்கா?’ன்னு கேட்டுக்கொண்டு, நாளை வேறு ஒரு நல்ல குடும்ப மேட்டர்ல சந்திப்போம்.
 என்னம்மா இப்படி பண்றீங்களே?
          
ஆல்தோட்ட பூபதி