அழியாத கோலங்கள்



வக்கீலாக அதிகம் வெற்றி பெறாத நிலையிலும் குறைந்து பீஸுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஏழை கட்சிக்காரர்கள்... அடிக்கடி ‘எதற்கும் பெரிய அய்யாவிடம் ஒரு ரோசனை கேட்டு எதையும் செய்யுங்க’ என்று சொல்லி என்னுடைய திறமையின்மையைக் குத்திக் காட்டிய பெரும்பான்மையினர்... இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் மதுரையில் முதுநிலைப் பட்டம் வாங்கினால் அர்ஜென்டினாவில் வேறு வேலை கிடைக்கும் என்று ஓடியவன் நான்.

அங்கே கற்றுக்கொண்ட பாடம்தான். நாம் ஏன் உலகம் முழுவதும் பெயர்பெற்ற சிவாஜி கணேசனை ஓரங்கட்டி எம்.ஜி.ஆருக்கு நூறடி கட்அவுட் வைத்தோம் என்ற காரணம் தெரிந்துகொள்ள உதவிய கல்வி அதுதான். முதுநிலைக் கல்லூரியில் முதல் நாள், ஆசிரியர் ‘உலக வேதாந்தம்’ என்ற ஒரு பேருரை ஆற்றி எல்லோரையும் கட்டுரை எழுத உத்தரவிட்டார். ஐந்தாண்டுகள் வக்கீல் தொழில் செய்தவனின் உலக அனுபவம், அப்போதுதான் பட்டப்படிப்பு முடித்தவரைவிட சற்றே அதிகமாக இருக்கலாம் என்பது நான் உணர்ந்தது.

மறுநாள் மாணவர் கட்டுரைகளை தரம் பிரித்த ஆசிரியர், சற்றே உண்மையான சிந்தனையை வெளிப்படுத்தி வகுப்பில் கூறினார்... ‘‘சாருஹாசன் இரண்டாம் உலக யுத்தம் பற்றி எனக்கே தெரியாத பல விஷயங்ளை கூறியிருக்கிறீர்கள். ஜெர்மனியோடு ரஷ்யா உறவுகொண்டு போலந்து நாட்டை ஆளுக்குப் பாதியாக பகிர்ந்தார்கள் என்று கூறியிருக்கிறீர்! திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து பெரியார் செயல்பட்டார் என்று எழுதியிருக்கிறீர்கள்.

ராஜாஜி தமிழக முதல்வர் ஆவதற்கு பெரியார் உதவினார் என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள். அது வேதாந்தம் சம்பந்தப்பட்டதல்ல; அது அரசியல். அதில் மனோதத்துவம் இருக்கலாம் ஆனால் வேதாந்தம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ஆகவே, சிறந்த ஆங்கிலத்தில் புதிய செய்திகளை நீங்கள் சொல்லியிருந்தாலும், நான் கூறிய கருத்துக்களை மட்டும் மனதில் கொண்டு எழுதிய பாலசுப்பிரமணியனுக்கு முதல் மதிப்பெண்ணும் உங்களுக்கு இரண்டாமிடமும் தந்திருக்கிறேன்’’ என்றார் ஆசிரியர். அவர் பேச்சில் உண்மை தவறாதவர். வீறுகொண்டு எழுந்து, ‘‘உனக்கென்ன தெரியும்? உனக்கு தேர்வு மதிப்பு கூட கொடுக்க மாட்டோம்’’ என்ற மற்ற ஆசிரியர்களைவிட ஒரு படி உயர்ந்தவர்.

கல்லூரி ஹாஸ்டலில் இரு மாணவர் அறை ஒன்று எனக்கு இருந்தது. தவிர, வைத்தியநாத அய்யர் வீட்டு மாடியில் ஒரு சீனியர் வக்கீல் எனக்கு ஒரு அறை கொடுத்திருந்தார். அங்கும்
வக்கீலின் மைத்துனன் என்னுடன் அறையைப் பகிர்ந்து கொண்டார். ஒருநாள் கோர்ட்டு வேலைக்குப் போனால் போதும்...

25 ரூபாய் கிடைக்கும். அந்தக் காலத்தில் ஒரு மதிய சாப்பாடு விலையே நாலணாதான்; அதாவது, கால் ரூபாய். பாக்கி நான்கு நாட்களும் கல்லூரி அட்டெண்டன்ஸ் கொடுத்தால் போதும். நான் வக்கீல் வேலைபார்த்துக்கொண்டே படிக்க வந்தவன் என்பது கல்லூரியில் சக மாணவர்களுக்குத் தெரியாது.

ஒரு நாள் கல்லூரி வளாகத்தில் ஒரு திருடனைப் பிடித்திருக்கிறார்கள். அதற்கு சாட்சி சொல்ல வந்த மாணவர்கள், நான் வக்கீல் உடையில் வழக்கு நடத்தியதைப் பார்த்துவிட்டார்கள். அந்த செய்தி கல்லூரியில் அரசல்புரசலாகப் பரவியது. என்னை ஓரிரு மாணவர்கள் கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். அதைத்தான் அவர்கள் நம்பினார்களே தவிர, கோர்ட்டில் சாட்சிக்கு வந்த மாணவர்கள் கூற்றை யாரும் பெரிதாக ஒப்புக் கொள்ளவில்லை.    

அப்போது எனக்குத் திருமணம் ஆகியிருந்தது. என் மனைவி என்னை சந்திக்க மதுரை வந்து என் சீனியர் வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ தங்குவதுண்டு. அப்படி ஒரு சமயம் நான் என் கறுப்புக் கோட்டை இஸ்திரி செய்யக் கொடுத்து விட்டு, என் மனைவியுடன் காத்திருந்தேன். என் மனைவி ஏதோ வாங்குவதற்காக பக்கத்துக் கடைக்கு சென்றவர், அடுத்து ஒவ்வொரு கடையாக சென்றிருக்கிறார். அவர் எந்தக் கடையில் இருக்கிறார் என்று நான் எட்டிப் பார்த்துதெரிந்து கொண்டு, திரும்ப இஸ்திரி கடைக்குப் போனேன்.

நான் இரண்டு, மூன்று கடைகளைப் பார்த்து திரும்புவதை தெருவின் எதிர் பக்கம் நின்ற மதுரை காக்கும் இளைஞர் படை தப்பாகப் புரிந்து கொண்டது. ‘‘என்ன சேட்டு பையா? உதை கேக்குதா?’’ என்று அவர்கள் குரல் கொடுத்தனர். கறுப்பு கோட்டு இல்லாமல் அவர்களுடன் பேசிப் பயனில்லை என்று இஸ்திரிக் கடைக்கு சென்று மடித்த கோட்டு டன் வந்து, நான் வக்கீல் என்றும், கடைக்குள் சென்றிருப்பவர் என் மனைவி என்றும் விளக்கம் கொடுத்தேன்.

பிறகு என் மனைவி வந்து என்னை அழைக்கும் வரை காத்திருந்து அவருடன் போனேன். அன்றும் சரி, இன்றும் சரி, மதுரையில் ஒருபுறம் விபசாரம் நடந்தாலும் மறுபுறம் பெண்களுக்கு சென்னையைவிட அதிக பாதுகாப்பு கிடைக்கும்.

அந்த மதுரையில், அர்ஜென்டினாவை மனதில் கொண்டு ஒருநாள் பிளாட்பாரத்தில் காலார நடந்து கொண்டிருந்தபோது ஒரு போலீஸ் ஜீப் என் அருகில் வந்து நின்றது. முன் இருக்கையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் இருந்தார். ‘‘தம்பி... டி.எஸ் மகனே! இங்கே வா’’ என்று என்னை அழைத்தார்.

அவருக்கு என் பெயர் கூட அப்போது சரியாகத் தெரியாது. ‘‘இவனும் வக்கீல்தான்!’’ என்று பின்னால் இருந்த மஃப்டி போலீஸாருக்கு சொல்லிவிட்டு, ‘‘என்னை இமானுவேல் கேஸில் கைது செய்திருக்கிறார்கள். அப்பாவிடம் சொல்லி ஜாமீன் மனு போடச் சொல்லு. நீயும் அப்பாகூட ஆஜராகணும்’’ என்றார். ஜீப் நகர்ந்தது.

நான் அடுத்த பஸ்ஸில் ஓடி ஏறி, சீட் கிடைக்காமல் நின்றபடியே ஊரை அடைந்து தந்தையாரிடம் தகவல் சொன்னேன். நான் சற்றும் எதிர்பார்க்காத பதில் கிடைத்தது. ‘‘ஏம்பா, நான் பரம்பரை காங்கிரஸ்காரன். கட்சிக்கு விரோதமாக ஆஜராக முடியாது’’ என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.அதனால் கோர்ட்டில் நானே ஜாமீன் மனு தாக்கல் செய்தேன். மறுநாள் செய்தித்தாள்களில், ‘பார்வார்ட் பிளாக் கட்சித் தலைவருக்கு வக்கீல் சாருஹாசன் என்பவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்’ என்று கொட்டை எழுத்துக்களில் வந்தது.

கல்லூரி தலைவர் என்னை வகுப்பிலிருந்து அழைத்து வரச் செய்து, ‘‘சாருஹாசன் என்பது உன் தந்தையா?’’ என்று கேட்டார். ‘‘அது நானேதான்’’ என்று சொன்னேன். அதன்பிறகு கல்லூரியில் என் பெயர் அடிபட ஆரம்பித்தது. அதே மாதம் ஒரு கார் விபத்தில் எனக்கு முதுகுத்தண்டில் அடிபட்டது.   சிகிச்சைக்குப்பின் கழுத்திலிருந்து இடுப்பு வரை மாவுக்கட்டு போட்டு அனுப்பி விட்டார்கள். கிரிக்கெட், டென்னிஸ் ஆட்டங்களையும் கல்லூரியையும் விட்டு விட்டு, சேர், மேஜை இரண்டையும் விட்டு நகராமல் வேலை பார்த்ததிலும்... தேவருக்கு ஆஜரான வக்கீல் என்ற பெயராலும் இரண்டு விபத்துக்கள் ஒன்று சேர்ந்து என்னை ஒரு வெற்றிகரமான வக்கீலாக்கிவிட்டன.

ஒரு போலீஸ் ஜீப் என் அருகில் வந்து நின்றது. முன்னிருக்கை யில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் இருந்தார். ‘‘தம்பி... டி.எஸ் மகனே! இங்கே வா’’ என்று என்னை அழைத்தார்.

(நீளும்...)

சாருஹாசன்