‘ஹாசினி’... சுஹாசினிக்கு நெருக்கமானவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். அவரது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் நானும் ஒருவன். ஹாசினியை எல்லோருக்கும் நடிகையாக, மணிரத்னத்தின் மனைவியாகத் தெரியும். ராக்கெட்டில் வைக்கப்பட்ட செயற்கைக்கோள் போல, ஹாசினிக்குள் ஒளிந்திருக்கிறார் ஒரு திறமையான டெக்னீஷியன்.
ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது. ஆரம்பத்தில் என்.கே.விஸ்வநாத்திடம் உதவியாளராக இருந்தவர், பிறகு அசோக்குமாரிடம் சேர்ந்து உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். ‘அவர் கதாநாயகியானது எப்படி... எப்போது...’ என்றெழும் கேள்விகளுக்கு, அந்த அனுபவத்தை பதிலாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
தீபா நடிக்கும் ஒரு காட்சிக்கு லைட்டிங் சரியாக இருக்கிறதா என்று ஹாசினி மீட்டர் பார்க்கும் இந்தப் படம் ‘ஜானி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது. அப்போது அவர் அசோக்குமாரின் உதவியாளர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே, மகேந்திரன் சார் அடுத்து இயக்கவிருக்கும் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்திற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருந்தார். அசோக்குமார் மூலம் ஹாசினியை நடிக்கக் கேட்டிருக்கிறார் மகேந்திரன் சார். தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என்று ஹாசினி சொல்லிவிடவே, மறுபடியும் ஹீரோயின் தேடல் தொடர்ந்துகொண்டிருந்தது.
ஒரு நாள் ஜெமினி மேம்பாலம் அருகே இருந்த ஒரு துணிக்கடையில் ‘ஜானி’ படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. தீபா, அன்பாலயா பிரபாகரன் சம்பந்தப்பட்ட காட்சி படமாகிக் கொண்டிருந்தது. நான் அப்போது ஸ்பாட்டில் இருந்தேன். ஷூட்டிங் பிரேக்கில், கடையில் இருந்த பெரிய கண்ணாடியில் ஹாசினி தனது முகத்தையும், உடம்பையும் திருப்பித் திருப்பிப் பார்த்து... அவரையே அவர் ரசித்துக்கொண்டிருந்தார். இதை நான் கவனித்துவிட்டேன். உடனே அசோக்குமாரிடம் சென்று, ‘‘நெஞ்சத்தை கிள்ளாதே படத்துக்கு ஹாசினியை கேட்கலாமே சார்’’ என்றேன். அதற்கு அவர், ஏற்கனவே ஹாசினியை கேட்டு அவர் விருப்பமில்லை என்று சொன்னதைச் சொன்னார்.
‘‘இல்லை சார்... ஹாசினிக்குள் அந்த ஆசை இருப்பதுபோல தெரிகிறது. இன்னொருமுறை கன்வின்ஸ் பண்ணிப் பார்த்தால் ஒத்துக்குவார்னு தோணுது’’ என்றேன். அதன்படி மீண்டும் அவரிடம் பேசியபோது ஹாசினி நடிக்க ஒப்புக்கொண்டார். ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் ஹாசினி நாயகியாக அறிமுகமானது இப்படித்தான். கண்ணாடி முன் நின்று ஹாசினி தன்னை ரசித்த அந்த தருணம், பாதரசம் குறையாமல் இப்போதும் எனக்குள் பளிச்சிடுகிறது.
- நெக்ஸ்ட் ஷாட்
தொகுப்பு: அமலன்