மணிவண்ணன் மரணக்கயிற்றால் இறுக்கிக் கொண்டதன் அதிர்வுகூட அகலவில்லை, அதற்குள் தைரியலட்சுமி. சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகம் நிசப்தமாகக் காட்சியளிக்கிறது. ‘கிராமப்புறத்திலிருந்து தமிழ் வழியில் படித்துவிட்டு வந்தவர்கள்’ என்கிற ஒரு விஷயமே மணிவண்ணனையும் தைரியலட்சுமியையும் இணைக்கிறது. ‘26 பாடங்களில் அரியர்’ என்பது மணிவண்ணன் மரணத்துக்கான முக்கிய காரணம் என்கிறார்கள் அவரது நண்பர்கள். தைரியலட்சுமியின் கடிதமோ அவர் 2வது செமஸ்டரை எதிர்கொள்ள பயந்ததாகச் சொல்கிறது. நகர்ப்புறத்து உயர்கல்விச் சூழலானது கிராமத்துப் பள்ளிகளின் தமிழ்வழி மாணவர்களை மிரட்டுகிறதா?
‘‘இன்னிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில 68 சதவீதம் பேர் தமிழ் வழியில படிச்சு வந்தவங்கதான். இதுல ஒண்ணு ரெண்டு பேர் எடுக்கற இந்த மாதிரியான தவறான முடிவுகள்தான் பேசப்படுது. சாதிக்கறவங்களை யாரும் கவனிக்கறதில்லை. தமிழ் மீடியத்துல படிச்சு வர்றவங்களுக்கு ஆரம்ப நாட்கள் சிரமம்ங்கிறது நிஜம்தான். அவங்களுக்கான பொதுவான பிரச்னை கம்யூனிகேஷன். அதுக்குன்னு ஸ்பெஷல் வகுப்புகள் இருக்கு. ஆனா, ‘மத்தவங்க என்ன நினைப்பாங்களோ’ங்கற தயக்கத்துல அந்த வகுப்புகளைப் புறக்கணிக்கிறாங்க பசங்க. வகுப்புகள்ல இருந்தும், மத்த மாணவர்கள்கிட்ட இருந்தும், ஆங்கிலத்தால தனிமைப்படறவங்களுக்கான கவுன்சலிங்குக்கும் ஆரம்பத்துல இருந்த வரவேற்பு இப்ப இல்ல. ஸ்பெஷல் வகுப்புகளை ஒழுங்கா அட்டெண்ட் செய்தாலே கவுன்சலிங் போக வேண்டிய அவசியமிருக்காது. கல்லூரி வரை வளர்ந்துட்ட மாணவர்களை பிரம்பால அடிச்சு கிளாஸ்ல உட்கார வைக்க முடியுமா? இந்த மாதிரி பிரச்னைகள் வேண்டாம்னுதான் எஞ்சினியரிங் படிப்பை தமிழ்லயே கொண்டு வந்துச்சு அரசு. அதுக்கும் முதல் வருஷம் இருந்த வரவேற்பு இப்ப இல்ல’’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.
தமிழ்வழி எஞ்சினியரிங்கில் ஆர்வம் குறைந்ததற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் மாணவர்கள். ‘‘டெக்னிக்கல் வார்த்தைகளைச் சுத்தமா தமிழ்படுத்தறப்ப அர்த்தமே புரிய மாட்டேங்குது. திருத்தறப்பவும் ஆங்கில வழியில எழுதுனா கிடைக்கற மார்க், தமிழ் வழியில அதே மாதிரி எழுதுனாலும் கிடைக்க மாட்டேங்குது. திருத்தறவங்க எல்லாம் ஆங்கில வழியில படிச்சு வந்தவங்களா இருக்கறதும் ஒரு காரணமா இருக்குமோ என்னவோ’’ என்கிறார் அண்ணா பல்கலையில் மாலைநேரக் கல்லூரியில் சிவில் படிக்கும் மீனாட்சிசுந்தரம். ஒரு செமஸ்டரை தமிழில் எழுதிய இவர், ‘சரிப்படவில்லை’ என்று தற்போது ஆங்கில வழியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்க் கவிஞரும் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியருமான மதன் கார்க்கியிடம் பேசினோம். ‘‘பள்ளிக்கூடத்துல முதல் ரேங்க் வாங்கின தமிழ் மீடியம் மாணவனுக்கு, இங்க வந்ததும் ஐந்தாவது இடத்துக்குப் போனாலே தாங்கிக்க முடியறதில்லை. திரும்ப அதை மீட்டுட முடியும்னு நினைக்க மாட்டேங்கிறாங்க. ஆர்வமிருந்தா திறமையைக் கொண்டு வந்துடலாம். இதுல மொழி எப்படி இடையூறா இருக்கும்? என் கருத்து என்னன்னா, மார்க்தான் வாழ்க்கைன்னு பெற்றோர் நினைக்காம இருக்கணும். படிச்சு முடிச்சு வெளியேறுகிற வரைக்கும் பசங்க மேல கண்ணா இருக்கணும்னு ஆசிரியர்கள் நினைக்கணும்’’ என்கிறார் கார்க்கி.
‘‘அப்பல்லாம் தமிழ் வழில படிச்சு நல்ல நிலைக்கு வரலையான்னு அப்துல் கலாம்ல இருந்து எத்தனையோ பேரை உதாரணம் சொல்றாங்க. இதுக்காக அந்தக்காலத்துக்கெல்லாம் போகணும்னு இல்ல. இன்னிக்கும் தமிழ்வழியில படிச்சதாலயே கல்லூரியில தட்டுத் தடுமாறுனாலும், அதையெல்லாம் கடந்து சாதிக்கறவங்களும் ஏராளமா இருக்காங்க’’ என்கிறார், தமிழ்வழி கிராமப் பின்புலத்திலிருந்து வந்து சென்னையில் பொறியியல் முடித்துவிட்டு தற்சமயம் சி.பி.ஐ.யில் பணிபுரியும் ஆனந்தமணி. கல்வியாளர் முத்துக்குமரன் இந்த விவகாரம் குறித்து என்ன சொல்கிறார்? ‘‘கம்ப்யூட்டரையும், லேப்டாப்பையும் வாங்கித் தர்றது முக்கியமான வேலை இல்ல. தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தர்றதா இருக்கணும் கல்வி. இதைத்தான் காலா காலமா சொல்லிட்டிருக்கோம். தமிழ் மீடியம் பசங்க தொடர்ந்து தற்கொலை பண்றாங்கன்னா அவங்களுக்கான பாடத்திட்டத்துல இதெல்லாம் சொல்லித் தரப்படலைன்னு அர்த்தம். கல்வியாளர்கள் யோசனைதான் சொல்ல முடியும். செய்ய வேண்டியது அரசாங்கம்தான்’’ என்கிறார் அவர்.
- அய்யனார் ராஜன்