நிழல்கள் நடந்த பாதை



கிரிக்கெட் எனும் கேளிக்கை

சமீபத்தில் என் வாழ்க்கையில் ஒரு கிரிக்கெட் பந்தயத்தை முதல்முதலாக நேரடியாகப் பார்த்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை, மோர்கல் ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்து வீழ்த்திய பந்தயம். அதுவரை நான் ரேடியோவில் கேட்ட, டி.வி.யில் பார்த்த கிரிக்கெட் அல்ல அது. 1983ல் இந்தியா முதன்முதலாக உலகப் கோப்பையை வென்ற அந்த இரவில், சிறு பையனாகப் பாதி புரிந்தும்  புரியாமலும் அதன் வர்ணனையை வானொலியில் கேட்டு, அந்தப் பந்தயத்தைக் கற்பனையில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு கிரிக்கெட் பைத்தியம். பின்னர் தொலைக்காட்சி கிரிக்கெட்டை ஒரு மசாலா சினிமாவாக மாற்றியது.

 உலகக் கிரிக்கெட்டிற்கு நடந்த சில துயர சம்பவங்கள் கிரிக்கெட்டை படிப்படியாக சோபையிழக்கச் செய்தன. கிரிக்கெட்டில் மேற்கிந்தியர்கள் தங்கள் ஆதிவாசி போர்க்குணத்தையும், பாகிஸ்தானியர்கள் தங்கள் உன்மத்த வேகத்தையும் படிப்படியாக இழந்த பின்பு, ஆஸ்திரேலிய, தென்னாப்ரிக்க வெள்ளையர்கள் தங்கள் சூழ்ச்சி மிகுந்த ஆட்டத்தால் உலகை வெல்லத் தொடங்கினார்கள். கிரிக்கெட்டின் இணையற்ற நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக அரங்கை விட்டு வெளியேறினர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கோடீஸ்வரர்களின் காலம் துவங்கியது. சூதாட்டப் புயல் உள்ளே நுழைந்தது. கிரிக்கெட் நம்பகத்தன்மையற்ற நாடகம் என்ற அவப்பெயரைப் பெற்றது. எல்லா வெற்றி தோல்விகளும் சாதனைகளும் சந்தேகிக்கப்பட்டன. நான் கிரிக்கெட்டுடனான அந்தரங்க உறவை படிப்படியாக இழந்தேன். கிரிக்கெட்டிற்கு மீண்டும் உயிர் கொடுக்க ட்வென்ட்டி 20 பந்தயங்கள் வந்தன. அவை கிரிக்கெட்டின் எல்லா கிளாசிக்கலான ஆதார அழகியலையும் கொன்றுவிட்டு, கிரிக்கெட்டை இன்று வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.

அன்றைய பந்தயத்தில் நான் எல்லைக்கோட்டுக்கு வெகு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தேன். முத்தையா முரளிதரன் எனக்கு மிக அருகாமையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். கடும் காய்ச்சலுடன் கைகள் நடுங்க எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு போலீஸ்காரர், தனது செல்போன் கேமராவால் முரளியைப்  படம் எடுத்துத் தரும்படி என்னைக் கேட்டார். ஒரு சின்ன பேப்பர் கப்பில் தண்ணீர் பத்து ரூபாய்க்கு விற்றார்கள். வெளியே அந்தக் காசிற்கு அதே அளவில் சாராயம் அல்லது பெட்ரோல் வாங்கலாம். சியர் லீடர்ஸ் என்று டி.வி.யில் வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் பெண்கள் வெகு சாதாரண தோற்றத்தில் எந்த சுவாரசியமும் அற்றவர்களாக அருகில் நின்றுகொண்டிருந்தார்கள். சூரிய வெளிச்சம் படிப்படியாக மறைந்து மின்னொளி என்னும் ஆடையை அரங்கம் அணியும் காட்சி ஒரு அற்புதம்.

கிளர்ச்சியூட்டும் இசை, பிரமாண்டமாக ஒலிக்கும் தமிழ் சினிமா குத்துப் பாட்டுகள், போர் முரசு போல ஒலிக்கும் வர்ணனைகள், ரசிகர்களின் பரவச ஆட்டம், வண்ணப் புகை நடுவே குறைவான உடையில் ஆடும் பெண்கள் என எல்லாம் சேர்ந்து கிரிக்கெட்டைத் தாண்டிய மாபெரும் கேளிக்கை ஒன்றை அங்கே உருவாக்குவதைப் பார்த்தேன். தங்கள் எல்லா கூச்சத்தையும் மனத் தடைகளையும் உதறி எழுந்து நின்று கூச்சலிடும், நடனமாடும் ஆண்களையும் பெண்களையும் கண்டபோது, ஒரு புராதனமான சடங்கைப் பார்ப்பது போலிருந்தது.

அது பார்வையாளன் என்ற நிலையைக் கடந்த ஒரு பங்கேற்பு. கிராமத்தில் மஞ்சு விரட்டு விடும்போது கூடியிருக்கும் பார்வையாளர்களின் கண்களில் இருக்கும் அதே உற்சாக வெள்ளம்தான் அது. நவீன ஊடகங்கள் மனிதர்களின் கூட்டுக் கலையை, கூட்டு சந்தோஷங்களைப் பெருமளவு அழித்துவிட்டன. பெருந்திரளில் ஒருவராக இருந்து கூச்சலிடுவதும் துக்கப்படுவதும் ஒரு மாபெரும் அனுபவம். அன்றைய பந்தயத்தில் நான் அதை அனுபவித்தேன். அன்று நான் பார்த்தது கிரிக்கெட் அல்ல; அதைவிடவும் மேலான ஒன்று...


கர்ணனின் மறுபிறப்பு

நவீன தொழில்நுட்ப உதவியுடன் புத்துயிர் பெற்றுள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம், தங்களது புதுமை முயற்சிகளால் பார்வையாளர்களைக் களைப்படைய வைத்த நமது இயக்குனர்கள்தான். ‘மகாபாரதம்’ போன்ற காப்பியங்களை எத்தனையோ வடிவங்களில், கோணங்களில் திரும்பத் திரும்ப புதிய பார்வையுடன் படமாக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அதைச் செய்வதற்கு யாரும் இல்லை. இன்று புத்துயிர் பெற்று தமிழர்களின் நாஸ்டால்ஜியாவை நிரப்பிக்கொண்டிருக்கும் ‘கர்ணன்’ வெளிவந்தபோது, 1964ம் வருடம் பிப்ரவரி மாத ‘மணிக்கொடி’ இதழில் வெளிவந்த ஒரு விமர்சனத்தைப் படித்தேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது: ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை அதிகச் செலவில் தயாரித்திருக்கிறார் பந்துலு! படம் வெளிவரும் முன்னே பத்திரிகைகளில் கொடுக்கப்பட்ட செய்திகள் உள்ளனவே, அவை ரசிகர்களை வெகுதூரம் ஆவலுக்குள்ளாக்கிற்று! ஆனால் படத்தில் வரும் காட்சிகளில் பூசப்பட்டிருந்த வர்ணத்தைத் தவிர எந்தக் கவர்ச்சியுமே படத்தில் தெரியவில்லை.

‘பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும்’ என்பது ஒரு பழமொழி. ஆனால் திரையுலகத்தில் அந்தப் பழமொழியை நாம் புது மொழியாக்க வேண்டியதாகிவிட்டது. ‘பாத்திரமறிந்து வேஷங் கொடுக்க வேண்டும்’ என்பதுதான் அது! கர்ணன் கர்ணனாக இல்லை. பீம பாத்திரத்தையே நினைவு கொள்ள வைக்கிறார் சிவாஜி. இப்படி அகம்பாவம் பிடித்த அளவில் நடிப்பதுதான் நடிப்பா, அல்லது இதுதான் ரசிக்கத் தகுந்தது என ரசிகர்களுக்கு இலக்கணம் கற்பித்துக்கொடுக்கிறாரா... தெரியவில்லை! அர்ச்சுனன் என்றதுமே ஒவ்வொரு உள்ளத்திலும் திறமை மிகுந்த வீரன்தான் தோன்றக்கூடுமேயல்லாது, இப்படி முத்துராமனின் தொங்கிய மீசையையோ, செத்த பாம்பைக் கொல்லுவது போன்று கடைசி யில் அம்பெய்யும் கோழைத் தனத்தையோ எந்த மனிதனுமே எண்ணியிருக்க மாட்டான்! தொலையட்டும்;  பாரதக் கதைக்கே ஏன் இப்படி ஒரு புது கற்பனையைக் கொண்டு வந்தார்களோ... நமக்கு புரியவே இல்லை! பாரதக் கதை பெரும்பாலான மக்களுக்கு நன்றாகத் தெரிந்த தெய்வீகக் கதை! அதில் வருகிற பாத்திரங்களில் கர்ணன் பாத்திரம் சிறப்பான பாத்திரம் என்பதை எவருமே மறுக்கமாட்டார்கள்! ஆனால் அந்தப் பாத்திரத்தை சிவாஜி ஏற்று நடித்தார் என்பதற்காக இப்படிப் பாண்டவர்களை பஞ்சத்திலடிபட்ட பாண்டவர்களாகவும் கதையைக் குளறுபடியாகவும் செய்திருக்க வேண்டாம்!

ராமாயணத்தில் பரதன் ஒரு நல்ல பாத்திரம். அந்த பாத்திரத்தை ஏற்று நடித்தபோது இருந்த உயர்வு, மகாபாரதத்தில் கர்ணனாக வருகிற கணேசனிடம் காணோமே என்பது தான் நமக்கு எரிச்சலூட்டுகிறது! தேவிகாவுக்குக் குதியுயர்ந்த சப்பலும், நீதிதேவதைக்கு நைலான் சேலையும் அணிய விட்டிருக்கும் இந்த ‘நாகரீக’ கர்ணனைப் பார்த்துவிட்டு, மறுபடியும் ஒரு தடவை மகாபாரதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது!’ கூட்டமாக இருந்தால்... சில தினங்கள் முன்பு உணர்ந்த நில நடுக்கம், நான் சென்னைக்கு வந்த இந்த 12 ஆண்டுகளில் உணரும் மூன்றாவது சம்பவம். நம் காலுக்குக் கீழே பூமி நடுங்கும்போது ஏற்படும் பாதுகாப்பின்மையை வேறு எதனோடும் ஒப்பிட இயலாது. அது ஒருகணம் நம்மைச் சுற்றியுள்ள அத்தனை பேரையும் அழிவின் பந்தத்தில் இணைத்து விடும் பெரும் கனவு. தலைசுற்றலுடன் மெல்ல வெளியே வந்து, பிரமாண்டமான நீல ஆகாயத்தைப் பார்த்து தலை வணங்கினேன்.

அன்று சுனாமி வந்தால் பார்ப்பதற்காக, சென்னை மெரினா கடற் கரையில் கூடியிருந்த மக்களை சன் டி.வி.யில் காட்டினார்கள். ஒரு பெண் தன் மகனுக்கு சுனாமியைக் காட்டுவதற்காக அழைத்து வந்திருப்பதாக உற்சாகமுடன் சொன்னார். செய்தியாளர் அவரிடம், ‘‘திடீர்னு சுனாமி வந்தா என்ன பண்ணுவீங்க?’’ என்று கேட்கிறார். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, ‘‘அதான் இவ்வளவு பேர் இருக்கோம்ல... அப்புறம் என்ன?’’ என்கிறார். அந்த பதிலை வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். கூட்டமாக இருந்தால் சுனாமிகூட ஒன்றும் செய்யாதா? கூட்டம் மனிதனுக்குத் தரும் தன்னம்பிக்கைக்கு அளவே இல்லை. அது பேரழிவைக் கூட எதிர்த்து நிற்கும் துணிச்சலைத் தருகிறது. எவ்வளவு வலிமையான மனிதனும் தனியாக இருந்தால் சிறிய துயரத்தில்கூட மனமுடைந்து போகிறான். இன்னொன்று, பேரழிவு என்பது வாழ்வில் எப்போதோ கிடைக்கும் பேரனுபவம் அல்லவா... அதுதான் அந்தப் பெண்ணை அங்கே நிற்க வைத்திருக்கிறது.
(இன்னும் நடக்கலாம்...)