இந்து மதத்தை இழிவுபடுத்துகிறதா ஞானசம்பந்தர் புத்தகம் ?



இதற்குமுன் ஒரு புத்தகம் தமிழகத்தில் இப்படியொரு கொதிநிலையை உருவாக்கியிருக்குமா என்று தெரியவில்லை. அத்தனை இந்து அமைப்புகளும் வரிந்து கட்டிக்கொண்டு போராடுகின்றன. புத்தகத்தைத் தடைசெய்யக் கோருகிறது பிஜேபி. இந்து மக்கள் கட்சி தீயிட்டுக் கொளுத்துகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த நூலாசிரியருக்கு எதிராக ஆங்காங்கே வழக்குகள் தொடுக்கிறது. இன்னொரு
பக்கம், ஆதீனங்கள் ஒன்றுகூடி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இவ்வளவு எதிர்வினையை உருவாக்கியுள்ள அந்தப் புத்தகம் ‘தாண்டவபுரம்’. ஏற்கனவே ‘செந்நெல்’, ‘மரக்கால்’, ‘பெருந்திணை’, ‘தப்பாட்டம்’ போன்ற நாவல்கள் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்ட தஞ்சை மண்ணின் படைப்பாளி சோலை சுந்தர பெருமாள் எழுதியது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த 700 பக்க நாவல், சைவ சமயத்தின் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தரின் காலத்தை ஒட்டி நகர்கிறது. வைதீகத்தின் பிடியிலிருந்து மொழியையும், வழிபாட்டையும் மீட்டு தமிழ் சைவத்தை நிலைநாட்டிய ஒரு மாமனிதராக ஆளுடைய பிள்ளை என்ற பாத்திரத்தின் வழியாக ஞானசம்பந்தரை முன்னிறுத்துகிறது. ‘ஞானப்பால் அருந்திய தெய்வக் குழந்தை’ என்ற அவர் மீதான கட்டமைவையும் தகர்க்கிறது. ஆனால் பிரச்னை இதுவல்ல... ஞானசம்பந்தர் இல்லற வாழ்வில் நாட்டமுடையவர் என்றும், மனோன்மணி என்ற தாசியுடன் காதலில் திளைத்தார் என்றும், அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததென்றும் சித்தரிக்கிறது நாவல். இதுதான் அனலைக் கிளப்பியிருக்கிறது.

‘‘ஞானசம்பந்தர் சீர்காழி தோணியப்பர் ஆலயத்தில் பசியால் அழுதபோது பார்வதி தேவியே வந்து ஞானப்பால் புகட்டினாள் என்பது வரலாறு. 16 வயது வரை மட்டுமே வாழ்ந்த அவர், முருகப் பெருமானின் அம்சம். மயிலாப்பூர் சிவநேசன் செட்டியார் என்பவர் தம்மகள் பூம்பாவையை ஞானசம்பந்தருக்கு அர்ப்பணித்தபோது, ‘அவள் என் மகள்’ என்று சொன்னவர். பெருமாநல்லூர் என்ற இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தபோது, ஜோதியில் கலந்து இறைவனோடு ஐக்கியமானவர். அந்த ஞானக்கடவுளை தேவதாசி யோடு குடும்பம் நடத்தினார் என்றும், அத்தை மகளோடு சல்லாபத்தில் ஈடுபட்டார் என்றும் கேவலமாக சித்தரிக்கிறது நூல்...’’ என்று குமுறுகிறார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத். ‘‘இந்து மதத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் இதுபோன்ற கருத்துத் தாக்குதல்களை மன்னிக்கமுடியாது. இதைப்போல் பிற மதங்களைப் பற்றி எழுத இவர்களுக்குத் தைரியமில்லை. அரசு தலையிட்டு இந்த நூலை தடைசெய்ய வேண்டும். நூலாசிரியர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்’’ என்கிறார் அவர்.


‘தாண்டவபுரம்’ நூலுக்கு எதிராக ஆதீனங்களை ஒருங்கிணைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாச்சல அடிகளாரும் வருந்திப் பேசுகிறார். ‘‘திருஞானசம்பந்தர் எங்களுக்கு குரு. இதுபோன்ற மகான்களைப் பற்றி எழுதுகிறபோது கவனம் வேண்டும். கற்பனைக்கும், சித்தரிப்புக்கும் எல்லை இருக்கவேண்டும். பெண்களோடு சல்லாபித்தார் என்று எழுதினால் அந்த மகான் பற்றிய மதிப்பீடே மாறிவிடும். இந்நூலாசிரியர் ‘செந்நெல்’ போன்ற பல நல்ல நூல்களை எழுதியவர். ஆனால் இந்த நூல் எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது’’ என்கிறார். பிஜேபி தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், ‘‘முன்னுரையிலேயே ஜி.ராமகிருஷ்ணனும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனும்தான் எனக்கு ஊக்கம் தந்தார்கள் என்று சொல்கிறார் நூலாசிரியர். எனவே இதன் பின்னணி புரிகிறது. மத உணர்வுகளைப் புண்படுத்தி மன உளைச்சலை உண்டாக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் மன்னிக்க முடியாது. நூலாசிரியர் இதுவரை வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.  இந்நூலைத் தடை செய்யக் கோரி பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்...’’ என்கிறார்.



இதுபற்றி நூலாசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சோலை சுந்தர பெருமாளிடம் பேசினோம். ‘‘தாண்டவபுரம் வரலாற்றுப் புத்தகம் இல்லை. திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்று நூலும் இல்லை. தமிழ் சைவம் எழுச்சி பெற்ற வரலாற்றின் பின்னணியில் புனையப்பட்ட நாவல். ஆளுடைய பிள்ளைதான் இதன் நாயகன். ஆளுடைய பிள்ளை பாத்திரம் ஞானசம்பந்தரை பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவிதத்தில் அதில் உண்மை இருக்கலாம். ஞானசம்பந்தர் தெய்வக்குழந்தை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பெரும் புரட்சி இயக்கத்தை வழிநடத்திய மாமனிதராகவே நான் பார்க்கிறேன்’’ என்கிற சுந்தரப்பெருமாள், ‘‘ஞானசம்பந்தரின் வாழ்க்கையை பெரிய புராணம் விரிவாக சொல்கிறது. புராணம் என்றாலே புனைகதைகளின் தொகுப்புதான். ஞானசம்பந்தரை கடவுளாக சித்தரிக்கிறார் சேக்கிழார். நான் மாமனிதராகப் பார்க்கிறேன். அதற்கு ஞானசம்பந்தர் எழுதிய தேவாரமே ஆதாரம். வணிகர்களையும், சமஸ்கிருதத்தையும் முன்னிறுத்திய வைதீக ஆட்சிக்கு எதிராக வேளாண் மக்களை ஒருங்கிணைத்து, தமிழையும் சைவத்தையும் தூக்கிப் பிடித்து போராடி வெற்றிகண்டவர் அவர். அவர் துறவியல்ல. பிரம்மச்சாரியும் அல்ல. ‘இகவாழ்வே பரவாழ்வு’ என்று தேவாரத்தில் அவரே சொல்கிறார். காமம் என்பது இகவாழ்வின் அங்கம். அக்காலத்தில் தேவதாசிகள் இல்லாத கோயில்களே இல்லை. தேவதாசிகளில் ருத்ரதாசி என்ற பிரிவுண்டு. உடல் தூய்மை, உள்ளத்தூய்மை கொண்டு கற்போடு இறைத்தொண்டு செய்பவர்கள். சுந்தரரே பரவையார் என்ற ருத்ரதாசியை திருமணம் செய்துகொள்கிறார்.

ஆளுடைய பிள்ளை தெய்வசக்தி பொருந்தியவர் இல்லை. அவரும் மனிதர்தான் என்று காட்டவே மனோன்மணி என்ற ருத்ரதாசி பாத்திரத்தை உருவாக்கினேன். இது முற்றிலும் புனைவு. ஆளுடைய பிள்ளையும், மனோன்மணியும் இணைவது நாவலில் ஒரு மௌனக்காட்சியாக மட்டுமே வந்து செல்கிறது. அதன்மூலம் கருக்கொள்கிற மனோன்மணி, பெருமாநல்லூரில் ஆளுடைய பிள்ளை தீக்கிரையாக்கப்படும் நேரத்தில் குழந்தையைப் பிரசவிக்கிறாள். அவருக்குப் பிறகு தமிழ் சைவத்தை தூக்கிப் பிடிக்க வாரிசு இருக்கிறது என்ற கருத்தியலுக்காகத்தான் அக்குழந்தையை உருவாக்கினேன். மற்றபடி இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை. உண்மையில் இது சைவத்தை உயர்த்திப்பேசும் நாவல்.

இவர்களின் எதிர்ப்புக்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன. சைவம் இப்போது வைதீகத்தின் பிடிக்குள் சென்றுவிட்டது. ஆளுடைய பிள்ளை வடிவில் ஞானசம்பந்தரை தமிழ்த்தலைவனாக முன்னிறுத்துவது பலருக்கு உறுத்தலை உருவாக்கியிருக்கிறது...’’ என்கிறார். ‘தாண்டவபுரம்’ சர்ச்சை பற்றி தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம். ‘‘ஒரு படைப்பில் கருத்துவேறுபாடு வருகிறபோது விமர்சித்து எழுதலாம். மிரட்டுவது பிற்போக்குத்தனம். போராடுபவர்கள் யாரும் நாவலை முழுமையாகப் படிக்கவில்லை. இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி எழுதுகிறீர்களா என்று கேட்கிறார்கள். எங்கள் அமைப்பைச் சேர்ந்த கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய ‘கருத்தலெப்பை’ நாவல், நேரடியாக இஸ்லாம் கோட்பாடுகள் மீது கேள்வி எழுப்புகிறது. இப்படி பல நூல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்துத்வ சக்திகளுக்கு இப்போது எந்த விவகாரமும் சிக்கவில்லை. அதனால் இதைப் பிடித்திருக்கிறார்கள். அவர்களைவிட பல மடங்கு போராட எங்களுக்கு சக்தி உண்டு...’’ என்று புன்னகைக்கிறார் தமிழ்ச்செல்வன்.
- வெ.நீலகண்டன்
படங்கள்:
காளிதாஸ்