சொதப்புவதே இல்லை!





ஒரு ரஜினி சிகரெட் தூக்கிப் போட, அதை இன்னொரு ரஜினி பிடிக்கும் ‘ஜானி’ காட்சியை டெக்னாலஜி இல்லாத காலத்தில் எப்படி எடுத்தார்கள் என்பதை ஸ்டில்ஸ் ரவி மூலம் அறிந்து வியந்தோம்!
- டி.ஆர்.சந்திரகேசவன், திருவள்ளூர்-1.

பனை மரத்து பதநீர் மட்டுமல்ல... பனையோலை விசிறிகளும் சூட்டைத் தணிக்கும் தகவல் அறிந்து வியந்தோம். திருப்பனந்தாள் விசிறிகளின் மறுபக்கத்தை பவர்கட் சமயத்தில் வெளிப்படுத்திய உங்கள் டைமிங்குக்கு தலைவணங்குகிறேன்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கல்யாணம் ஆகாமல் அக்கா ஒருத்தி இருக்க, தங்கைகள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பது எத்தனை சோகம். அப்படி ஒரு சூழ்நிலையைக் கூட கலகலப்பாகவும் இயல்பாகவும் ‘விஜயா டீச்சர்’ தொடரில் பதிவு செய்கிறார் திருமுருகன். ரியலி கிரேட்!
- கே.கல்பனா கல்யாண், தஞ்சாவூர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓட்டத்தில் சொதப்பினால் என்ன? ஐ.பி.எல் கட்டுரைகளில் சியர் லீடர்ஸின் அம்சமான படங்களை பிரசுரிக்கும் விஷயத்தில் நீங்கள் சொதப்புவதே இல்லையே!
- ஆர்.தனபால், சென்னை-63.

அப்பாவும் நடிகர் என்ற ப்ளஸ் சூர்யாவுக்கு. அப்பாவும் நடிகர், அண்ணனும் நம்பர் ஒன் ஹீரோ என்ற இரண்டு ப்ளஸ் கார்த்திக்கு. இவருக்கு என்ன பெரிதாக ‘திருப்புமுனை’ இருந்துவிடப் போகிறது என்றுதான் நினைத்தேன். ஆனால், சவால்கள் நிறைந்த அவரின் ஃப்ளாஷ்பேக் அட போட வைத்து விட்டது!
- எப்.சொர்ணா, புதுச்சேரி.

ஓமலூர் முத்து என்ற தமிழருக்கு ஜப்பான் நாடு தபால் தலை வெளியிட்டிருக்கிறது என்றால் அது எத்தனை பெரிய பெருமை. அதைக்கூட சட்டை செய்யாமல் தமிழ்ப் பணியைத் தொடரும் முத்து, எங்கள் உள்ளங்களில் உயர்ந்து நின்றுவிட்டார்.
- எஸ்.மேகலா ராஜன், மதுரை.

‘நம் இளைஞர்கள் உயிரோடிருக்கும்போதே பேச விடுவோம்’ என்ற மனுஷ்ய புத்திரனின் கோரிக்கை, மாணவன் மணிவண்ணனுக்காக எழுதப்பட்டது. இப்போது அது மாணவி ‘தைரியலட்சுமி’க்கும் பொருந்தி விட்டது. இன்னும் பலர் இந்தப் பட்டியலில் இணைவதற்கு முன்பாவது பேச விடுவோமா அவர்களை?
- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

கடலைக்கு ஒரு குட்டு, போட்டி எஸ்.எம்.எஸ்களுக்கு ஒரு வெட்டு, ‘ரீல்’ எஸ்டேட்காரர்களுக்கு ஒரு தட்டு... அடடா! எதையும் கலாய்க்கும் நம்ம ஆல்தோட்ட பூபதி, ஒரு ஆல் இன் ஆல் பூபதிதான்!
- ஜெ.மனோகரன், பழைய
வண்ணாரப்பேட்டை.

ஆசிரியர் தகுதித் தேர்வின் வெற்றி சூட்சுமத்தை சொல்லத் துவங்கியிருப்பதால் இன்று முதல் நீங்கள் ‘ஆசிரியர்களின் ஆசிரியர்’ என்று அன்போடு அழைக்கப்படுவீர்களாக!
 - மயிலை.கோபி, சென்னை-83.