ஹன்சிகா வாய்ப்பை தட்டிப் பறித்தேனா? கார்த்திகா ஓபன் டாக்




‘புருவம் ஒரு வில்லாக... பார்வை ஒரு கணையாக...’ என்ற பாடல் வரியை ஐபாடில் கேட்டபடியே பிரம்மன் வடித்த சிற்பம், கார்த்திகா. இயக்குனர் இமயத்தின் கைங்கர்யத்தில் இந்த அல்ட்ரா மாடர்ன் மயில், அச்சு அசல் ‘அன்னக்கொடி’யாகவே மாறிப்போயிருக்கிறது. பேச்சிலும் வீசுகிறது தேனி வட்டார வாடை!

‘‘எப்படி இருக்கு அன்னக்கொடி அனுபவம்?’’
‘‘ஹய்யோ... என் கேரியர்ல இவ்வளவு சீக்கிரமா இப்படியொரு வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கல. பாரதிராஜா இயக்கத்துல இப்பவே நடிக்கிறதால, ஒரு நடிகையா என் கனவு, ஆசை எல்லாமே நிறைவேறிடுச்சு. படத்துல நான் மாடு மேய்க்கிற பொண்ணா வர்றேன். முதல்ல சின்னப் பொண்ணு, அப்புறம் வயசுக்கு வந்த பருவம், கல்யாணம் ஆன பொண்ணு, அப்புறம் அம்மான்னு நாலுவிதமான பருவங்கள்ல நடிக்கறேன். ஒரு நடிகைக்கு இதை விட நல்ல ஸ்கோப் அமையுமா, சொல்லுங்க! படம் வந்த பிறகு ராதா பொண்ணு சாதா பொண்ணில்லைன்னு எல்லாரும் சொல்லப்போறது நிச்சயம்!’’

‘‘பொட்டல் காடு... புழுதி பறக்குற லொ கேஷன்... ரொம்பவே கஷ்டப்படுத்துதா?

‘‘நான் எதையும் கஷ்டமா நினைக்கல. அம்மாவோட ஷூட்டிங் அனுபவங்களைக் கேட்டு வளர்ந்ததால, பெருசா ஃபீல் பண்ணிக்கல. நடிப்புன்னு வந்துட்டா, அந்த கேரக்டரா வாழ்ந்துடணும்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. இப்போ பாரதிராஜா சார்கிட்டயும் நிறைய கத்துக்கறேன். படத்துல என்னோட அம்மாவா ரோஜா மேடம் வர்றாங்க. அவங்க சாராயம் விக்கிற பொம்பளயா நடிக்கிறாங்க. ஷாட் முடிஞ்சிட்டா செம ஜாலியா பேச ஆரம்பிச்சுடுவாங்க. போரடிக்காம பொழுது போறதால கஷ்டம் தெரியல!’’

‘‘ஆனா ‘கோ’வுக்கு அப்புறம் கொஞ்சம் கேப் விழுந்திருச்சு. பாரதிராஜா படத்துல லாக் ஆகிட்டதா நினைக்கிறீங்களா?’’
‘‘தப்பு... தப்பு... அப்படியெல்லாம் பேசக்கூடாது! (பதறுகிறார்.) பாரதிராஜா சார் என் அம்மாவுக்கே குரு. ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ங்கிற ஒரு படத்துல நடிக்கிறது நூறு படத்துல நடிக்கிறதுக்கு சமம். இந்த வாய்ப்பு கிடைச்சதை நினைச்சா சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு. அப்படி இருக்கும்போது, நிறைய படம் நடிக்க முடியலையேனு ஒருநாள் கூட நானோ அம்மாவோ ஃபீல் பண்ணல. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மா சில நாள்தான் வந்திருப்பாங்க. மத்தபடி தாயா, தந்தையா இருந்து நல்லா பார்த்துக்கறாரு பாரதிராஜா சார்!’’

‘‘அழுகாச்சி சீன் இருக்கா, அடி வாங்கினீங்களா?’’
(சிரிக்கிறார்) ‘‘நடிப்பு வரலைன்னா பாரதிராஜா சார் அடிச்சிடுவார்னு எல்லாரும் சொல்வாங்க. முன்னாடி அவர் அப்படி இருந்தாரான்னு தெரியல. இப்ப இருக்குற பாரதிராஜா ரொம்ப ஸ்வீட் பர்ஸன். இதுவரை நான் அவர்கிட்ட திட்டும் வாங்கல... அடியும் வாங்கல. ஒரு சீன்ல என்ன பண்ணணும்ங்கிறதை மத்த டைரக்டர்ஸ் சொல்லிக் கொடுப்பாங்க. ஆனா இவர் நடிச்சே காட்டுறார். அதனால அழுகை சீன் மட்டுமில்ல... எந்த சீனா இருந்தாலும் ஈசியா பொளந்து கட்டலாம்!’’

‘‘உங்க கேரக்டருக்கு முக்கியத்துவம் தர்றதுக்காகத்தான் அமீர், இனியா கேரக்டர்களை நீக்கிட்டதா பேசிக்கிறாங்களே... தெரியுமா?’’

(‘இது எப்ப இருந்து?’ என்பது போல குறும்பாகப் பார்க்கிறார்.) ‘‘அந்த ரெண்டு கேரக்டர்ஸுமே பவர்ஃபுல் கேரக்டர்னு மட்டும் எனக்குத் தெரியும். அதனால அதை தனி படமா எடுக்கப்போறதாதான் சார் சொல்லியிருக்கார். மத்தபடி வெளியில என்ன பேசிக்கறாங்கன்னு எனக்குத் தெரியாது.’’

‘‘அடுத்து..?’’


‘‘தெலுங்குல நான் நடிச்ச ‘தம்மு’ படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகுது. தமிழ்ல ‘அன்னக்கொடி’ முடிஞ்சதும் விஜய் தயாரிப்புல ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரீமேக்ல விக்ரம்பிரபு ஜோடியா நடிக்கிறேன். அதுக்கு முன்னாடியே சுந்தர்.சி இயக்கத்துல விஷால் ஜோடியா ஒரு படத்துல நடிக்க கமிட் ஆகியிருக்கேன். இந்தப் படத்துல முதல்ல ஹன்சிகா நடிக்க இருந்ததாவும் அந்த வாய்ப்பை நான் தட்டிப் பறிச்சிட்டதாவும் நியூஸ் இருக்குனு கேள்விப்பட்டேன். விஷால் ஜோடியா நடிக்கக் கேட்டாங்க... கதை கேட்டு ஒத்துக்கிட்டோம். அவ்வளவுதானே தவிர, ஹன்சிகாவுக்கும் என் கால்ஷீட்டுக்கும் முடிச்சுப் போட்டு நியூஸ் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல!’’
- அமலன்