அடுத்தது ஆல் இன் ஆல் அழகுராஜா...





அலட்டிக் கொள்ளாமல் வெற்றி பெறும் உத்தியை இயக்குநர் ராஜேஷிடம்தான் கற்க வேண்டும். ‘எஸ்.எம்.எஸ்’ஸில் தொடங்கிய அவரது வெற்றி ‘ஓகே ஓகே’யில் ‘ஹேட்ரிக்’ ஆக, எப்போதும் போல் ‘கூல் கேப்டனா’கவே இருக்கிறார் ராஜேஷ். ஊரே ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்க, அடுத்த படத்துக்கான வேலைகளில் மூழ்கியிருக்கிறார் அவர். ‘‘இந்தத் தொடர் வெற்றி உங்களுக்கு உணர்த்துவது என்ன..?’’ என்றதற்கு தன் வழக்கமான புன்சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார். ‘‘மக்கள் தங்களை மகிழ்விக்கிற படங்களை எப்போதும் ரசிக்கிறாங்க. சினிமாவே ஒரு என்டர்டெயின்மென்ட் மீடியம்தான். இதுல, பொழுதுபோக்குங்கிற பேர்ல இரட்டை அர்த்தம் இல்லாத, கண்ணியக் குறைவா இல்லாத படங்களா கொடுக்கிறதுதான் என்னோட வழி. முதல் பார்வைக்கு இளைஞர்களுக்கான படமா தெரிஞ்சாலும், அவங்க வந்து பார்த்துட்டு அடுத்து குடும்பத்தோடும் வந்து பார்க்கிற அளவில்தான் என் படங்கள் அவங்களை மகிழ்விக்குது...’’

‘‘இருந்தாலும் ஒரே கதையிலயே நீங்க ட்ராவல் பண்றதா ஒரு விமர்சனம் இருக்கே..?’’ ‘‘அது அப்படி இல்லை. ‘எஸ்.எம்.எஸ்’ல ரெண்டு ஈகோயிஸ்ட்களோட கதைல காதலைக் கலந்து சொல்லியிருந்தேன். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ல, காலைல ஆறு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை ஒண்ணுமே செய்யாம... ஆனா பிஸியா இருக்கிற இளைஞனை உறவுகள் எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகுதுன்னு சொல்லியிருந்தேன். இப்ப ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ல இன்றைய இளைஞர்களோட நட்பு வட்டத்துல மேற்கொள்ற வெட்டி பந்தாவை விமர்சனம் பண்ணியிருக்கேன். எல்லா டைரக்டர்களுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். என் மூணு படங்களும் ஒரே பேட்டர்னா அமைஞ்சிருக்கிறதால அப்படித் தெரியலாம். இதை என்னோட பிராண்டுன்னு வேணா சொல்லலாம்...’’
‘‘உங்க படங்கள்ல நகைச்சுவையே மேலோங்கி இருக்க, உங்க வாழ்க்கையும் அப்படித்தான் போய்க்கிட்டிருக்கா..?’’



‘‘நான் இயல்பில ரொம்ப கலகலப்பான ஆள். என் ஷூட்டிங்குகள்ல பரபரப்போ, பதற்றமோ இருக்காது. என் அசிஸ்டன்ட் டைரக்டர்களை நல்லா ஓட்டுவேன். ஒருத்தர் காலைல மாட்டினார்னா நைட் வரைக்கும் அவர் தலைதான் உருளும். இதுக்காக என் கண்ணில படாம தப்பிக்கிற அசிஸ்டன்ட்டுகளும் இருக்காங்க. ஸ்கூல் டேஸ்ல படிக்கணும்ங்கிற கட்டாயம் இருந்ததால கலகலப்பா இருந்ததில்லை. ஆனா காலேஜ் வந்ததும் சினிமா ஆர்வம் வந்தது. இந்த ஜேனர்னு இல்லாம, எல்லாப் படங்களையும் பார்ப்பேன். எல்லாத்தையும் ரசிப்பேன். நாலு மணிக்கு காலேஜ் முடிஞ்சா அஞ்சு மணிக்கு என்னைத் தியேட்டர்ல பார்க்கலாம். படங்கள் ரிலீசாகிற வெள்ளிக்கிழமைகள்ல காலேஜ் ‘கட்’தான். எல்லாப் படங்களும் பிடிக்கும்னாலும் பாக்யராஜ் படங்களை விசேஷ கவனத்தோட பார்ப்பேன்.
என் குருநாதர் எஸ்.ஏ.சி சார் ரொம்ப கோபப்படுவார்னு சொல்வாங்க. ஆனா அவர்கிட்ட என் அனுபவம் அப்படி இல்லை. எதையும் திட்டத்தோட, டிசிப்ளினோட செய்யணும்னு எதிர்பார்ப்பார். நான் அவர்கிட்ட போய்ச் சேர்ந்த நேரம், சினிமாவை அழகாக் கற்றுக்கொடுத்தார். சினிமால பிளானிங் ரொம்ப முக்கியம். அதை அவர்கிட்டேர்ந்து சரியா கத்துக்கிட்டதாலதான், இன்னைக்கு எளிதா பிளான் பண்ணி ஷூட்ல ஜாலியா இருக்கேன்னு சொல்லலாம். கதை முடிவானதுமே ஸ்கிரீன்பிளே ஃபார்மேட் ரெடி பண்ணிட்டு, நடிகர்களையும் முடிவு பண்ணிட்டு, என் அசிஸ்டன்ட்டுகள், நண்பர்களோட டிஸ்கஷன் உட்காருவேன். பிறகு அதை இம்ப்ரூவ் பண்ணுவேன். அந்த விஷயத்துல சந்தானத்தை அடிச்சுக்க ஆள் கிடையாது. மொத்தமா கொட்டிட்டு கடைசில எது வேணும், வேணாம்னு ஷார்ட் லிஸ்ட் பண்ணி ஷூட்டிங்குக்குக் கிளம்பிட வேண்டியதுதான்.


என் படங்களோட வெற்றிக்கு டீம் ஒர்க்தான் காரணம். ‘ஓகே ஓகே’ ஆரம்பிச்சப்ப உதயநிதி புதுமுகமா ஆனதால, மத்த விஷயங்களை கவனமெடுத்து ரசனையோட பிளான் பண்ணினோம். உதயநிதிக்கு ஹாரிஸ் நெருக்கமா இருந்தார். ஹாரிஸுக்கு மிகப்பெரிய ஃபேன் பாலோயர்ஸ் இருக்கிறதால அவரை முடிவு பண்ணினோம். பெரிய நடிகர்களையெல்லாம் அழகா காண்பிச்சு படத்துக்கு மெருகு தர்ற பாலசுப்ரமணியெம்மை ஃபிக்ஸ் பண்ணினோம். பாடல்களுக்கு தேடித்தேடி வெளிநாடு போனோம். கேட்டதெல்லாம் கிடைச்சதே படத்துக்கு பிரமாண்டத்தைத் தந்து வெற்றிக்குக் காரணமாச்சு...’’
‘‘அடுத்த உதயநிதி படமும் நீங்கதான்னு ஒரு பேச்சு... ஆர்யா, ஜீவா படத்தை டைரக்ட் பண்ணப்போறதாவும் சொல்றாங்க. எது நிஜம்..?’’ ‘‘இதுக்கெல்லாம் முன்னமே ஸ்டுடியோ கிரீனுக்காக ஒத்துக்கிட்டிருக்க படம் பண்ணப்போறேன். கார்த்தி ஹீரோவாகிற படத்துக்கு ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ன்னு டைட்டில். ஆனா நீங்க சொன்ன விஷயங்களெல்லாம் பேச்சளவில இருக்கிறதால இதுக்குப் பிறகுதான் அதையெல்லாம் முடிவு பண்ணணும்..!’’
ஓகே... ஓகே..!
- வேணுஜி