டென்ஷன் வெற்றியும் மோசமான தோல்வியுமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கிராஃப் ஏறி சறுக்குகிறது. புனேயில் மண்ணைக் கவ்வியதற்கு சேப்பாக்கத்தில் பதிலடி கொடுத்தாயிற்று. டோனியின் பைக் பஞ்சரானாலும், மேட்ச் பஞ்சராகாதது ஆறுதல். கங்குலி, டோனி - இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று ஐபிஎல் இணையதளத்தில் அன்றைய மேட்ச்சின்போது நடந்த கருத்துக்கணிப்பில் நிமிடத்துக்கு நிமிடம் இருவரும் மாறி மாறி முந்தியது சுவாரசியம். வங்காளப் புலியும் சென்னை சிங்கமும் ரசிகர்களின் மனதை ஒரே அளவில் கொள்ளையடித்திருக்கிறார்கள்.
கடைசி பந்தில் சிக்சர், ஒரே ஓவரில் 6 பவுண்டரி, சீசன் 5ல் முதல் சதம் என்று நாம் ஆசைப்பட்டதெல்லாம் ஒரே வாரத்தில் நடக்க... ஆட்டங்களில் அனல் பறக்கிறது. ரஹானே தயவில் ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜ நடை போடுகிறது. ரன் குவிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதுடன் ‘சீசனின் முதல் சதம் விளாசிய வீரர், ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 6 பவுண்டரி விளாசிய முதல்வர்’ என்று அசத்தும் ரஹானேவின் தலையை ஆரஞ்சு தொப்பி அலங்கரிப்பதில் ஆச்சரியம் இல்லை. டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று இப்போதே பேச்சு அடிபடுகிறது. ‘‘அது பற்றியெல்லாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சிறப்பாக விளையாடி ரன் அடிப்பதில் மட்டுமே கவனம். மற்றதை தேர்வுக் குழுவினர் பார்த்துக் கொள்வார்கள்’’ என்கிறார். டெஸ்ட் போட்டிகளில் டிராவிட் இடத்தை நிரப்பக் கூடியவராகவும் இவரை கணிக்கிறார்கள்.
ராயல் சேலஞ்சர்சின் கிறிஸ் கேல் மிரட்ட ஆரம்பித்துவிட்டார். வாரியர்சின் ராகுல் சர்மா ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர் தூக்கி மிரட்டினார். அந்த ருத்ரதாண்டவத்தில், கேலரியில் இருந்த சிறுமி டியா பாட்டியா மூக்கு உடைந்து ரத்தக் களரியாகிவிட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்ட கேல் ரொம்பவே அப்செட்! ஆஸ்பிட்டலுக்கு ஓடி டியாவுக்கு ஆறுதல் சொன்னவரிடம், ‘‘அங்கிள்... இதெல்லாம் சப்ப (மூக்கு) மேட்டர்! நீங்க தொடர்ந்து சிக்சர் அடிச்சிக்கிட்டே இருங்க’’ என்று அந்த வாண்டு வாழ்த்தியதில் நெகிழ்ந்து போயிருக்கிறார். இவர் ஆடும்போது ஸ்டேடியத்துக்கு வெளியேயும் பீல்டர்களைப் போடுவதுடன், ரசிகர்களுக்கு ஹெல்மட் கட்டாயம் என்று அறிவித்தால் நல்லது.
சிஎஸ்கேவுக்கு அதிரடி அல்பி மார்க்கெல் இல்லாதது மைனஸ். தன் ஆருயிர் நண்பரை கொள்ளையர்கள் கொன்றுவிட்டார்கள் என்ற சேதியால் உடைந்து போன அவர், அடுத்த ஃபிளைட் பிடித்து ஜோகன்னஸ்பர்க் போய்விட்டார். பத்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்ததற்கு நன்றிக் கடனாக தலைமுடியில் சிஎஸ்கே பெயரைப் பொறித்துக் கொண்ட ஜடேஜா, அணியின் தலையெழுத்தை மாற்றுவாரா பார்க்கலாம்.
மொகாலியில் நைட் ரைடர்சுடன் நடந்த போட்டியில், கிங்ஸ் லெவன் வீரருக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுத்ததைப் பார்த்து கொதித்துப் போனார் அணி ஓனர் ப்ரீத்தி ஜிந்தா. கன்னம் சிவக்க, கண்கள் கலங்க வாதிட்டவரை அமைதிப்படுத்தினார் கேப்டன் கில்கிறிஸ்ட். இப்போதைக்கு பின்தங்கியிருந்தாலும் பஞ்சாப் நிலைமை அத்தனை மோசம் இல்லை. டெக்கான் மட்டுமே ஹாட்ரிக் தோல்வியால் சார்ஜ் இறங்கிக் கிடக்கிறது.
வல்தாட்டி, யூசுப் பதான், முரளி விஜய், கோஹ்லி போன்ற லோக்கல் ஹீரோக்கள் தொடர்ந்து பிளாப் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்க தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் ஆட்டத்தால் தனக்கு இங்கிலாந்து அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று கணக்கு போடுகிறார் ராயல்ஸ் வீரர் ஓவைஸ் ஷா. ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் 2வது இடத்தில் இருப்பவரின் ஆசை நியாயமானதே.
கென்ய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாடிய தன்மே மிஷ்ரா, டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இந்திய வீரராக விளையாட அனுமதிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. அணியில் ஏற்கனவே 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தன்மே மிஷ்ராவை இந்தியராகக் கணக்கு காட்டினார்கள். ‘எந்த நாட்டுக் குடியுரிமை பெற்றிருந்தாலும், பிறந்த நாட்டுக்காக எப்போது வேண்டுமானாலும் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்கிறது. அந்த விதியைத்தான் பின்பற்றுகிறோம்’ என்கிறது ஐபிஎல் நிர்வாகம். மற்ற அணிகள் எதிர்க்காமல் இருந்தால் இதில் பெரிய பிரச்னை இல்லை. தன்மே மிஷ்ரா அடித்து நொறுக்காமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்!
- பா.சங்கர்
படங்கள்: வேணு, சதீஷ்