ஏழைகளுக்கு நல்ல பள்ளிகள் கதவைத் திறக்குமா?





பல்வேறு தடைகளைக் கடந்து, ஒருவழியாக நடைமுறைக்கு வந்துவிட்டது கல்வி உரிமைச்சட்டம். 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வியை உறுதிப்படுத்துகிறது இச்சட்டம். அதே நேரத்தில், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வகையில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதையும் கட்டாயமாக்குகிறது. கல்வி உரிமைச் சட்டம் கடந்துவந்த பாதை கரடுமுரடானது. கடந்த 2009ல் நாடாளுமன்றத்தில் தாக்கலானபோதே இதற்கு தனியார், சிறுபான்மைப் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசு உதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகள் தவிர்த்து பிற பள்ளிகளுக்கு இச்சட்டம் பொருந்தும்’ என்று கடந்த வாரம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் ஏராளமான சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இயங்கிவரும் நிலையில், இப்படி அவர்களுக்கு விலக்கு அளித்தது சமூகநீதிக்கு எதிரானது என்று குமுறுகிறார்கள் கல்வியாளர்கள்.

இந்த ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று வழக்காடிய தமிழ்நாடு ஆயர்பேரவையின் சட்டப்பிரிவு செயலாளர், வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜை சந்தித்து, ‘‘சேவை நோக்கத்தோடு இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் சிறுபான்மை நிறுவனங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது முரண்பாடாக இருக்கிறதே..?’’ என்றோம். ‘‘சேவையைப் பற்றி எங்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. தமிழகத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் 500 பள்ளிகளே ஆங்கிலவழியில் நடக்கின்றன. மற்ற அனைத்தும் தமிழ்வழிப் பள்ளிகள்தான். பஸ்வசதி கூட இல்லாத குக்கிராமங்களிலும் எங்கள் பள்ளிகள் இயங்குகின்றன. திருநெல்வேலி வட்டாரத்தில் மட்டும் 630 பள்ளிகள். அரசு இப்போதுதான் 25 சதவீதம் ஒதுக்கச் சொல்கிறது. நாங்கள் 300 வருடங்களுக்கு முன்னே நலிந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 100 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம். இந்தியா ஒருங்கிணைந்த தேசமாக உருவாவதற்கு முன்பே நாங்கள் கல்விக்கூடங்களை நடத்தியிருக்கிறோம். பண்டாரப்பள்ளி, வேதப் பள்ளிகள் மட்டுமே இயங்கிய காலத்தில் தாழ்த்தப்பட்ட, நலிவடைந்த சமூகத்து பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் திறந்தது நாங்கள்தான். இப்போதும் அப்படியான பல ஆயிரம் பிள்ளைகளை பராமரித்து படிக்க வைக்கிறோம். நாங்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை நாங்கள் கோட்டாவாக பார்க்கவில்லை. நிர்வாகத்தில் செய்யப்படுகிற ஒருவிதமான அந்நியத் தலையீடு.

சிறுபான்மை மக்களின் பண்பாடு சிதைந்து போகாமல் காப்பாற்றும் நோக்கத்தில்தான் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இப்போது நலிந்தோர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு இவர்கள் ஒதுக்கீடு தரச் சொல்கிறார்கள். கிறிஸ்துவத்தில் எஸ்.சி என்ற பிரிவே இல்லை. ஆதிதிராவிடர்களை பி.சி. பிரிவில் வைத்திருக்கிறார்கள். நாங்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கீடு கொடுப்போம்..? இந்திய அரசியல் சாசனம் எங்களுக்குத் தந்த உரிமையும், நோக்கமும் குலைந்து போய்விடும். உண்மையில், நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாகத்தான் அபிடவிட் தாக்கல் செய்தோம். ஆனால், இந்த ஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புதான் தீர்மானிக்கும் என்று சொன்னார்கள். உடனடியாக தாக்கல் செய்த அபிடவிட்டை வாபஸ் வாங்கி விட்டோம்.


இந்த ஒதுக்கீட்டால் கல்விக்கூடங்களில் அரசியல்வாதிகள் தலையீடு வந்துவிடும். சட்டம் போட்டவுடனே பல பள்ளிகளில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆளுக்கொரு லிஸ்ட்டோடு நிற்கிறார்கள். எங்களுக்குத் தொண்டு செய்யத்தான் தெரியும். அரசியல்வாதிகளோடு சண்டை போடத் தெரியாது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் குருமார்களும், ஒன்றரை லட்சம் கன்னியர்களும் அமைதியாக கல்விச்சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். திடீரென ஒரு சட்டத்தை நுழைத்து, அதன்படிதான் நீங்கள் சேவை செய்ய வேண்டும் என்றால் எப்படி..? தொண்டு என்பது விரும்பிச் செய்வது; திணிக்கப்படுவதல்ல. அதனால்தான் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம்...’’ என்று அனல் பறக்கப் பேசுகிறார் சேவியர் அருள்ராஜ்.

இதுபற்றி ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்டிக்கல் 21, கல்வியை ‘வாழ்வதற்கான உரிமை’ என்கிறது. ‘வாழ்வதற்கான உரிமை என்பது விலங்கைப் போல வாழ்வதல்ல. கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதம்...’ என பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தெளிவுறுத்தியுள்ளது. கல்வியும், சுகாதாரமும் அடிப்படை உரிமையாக இருந்தால்தான் கண்ணியமான வாழ்க்கை சாத்தியமாகும். ஒரு பொருளை உரிமையாக கேட்டுப் பெறுவதற்கும், தர்மமாகப் பெறுவதற்கும் வித்தியாசம் உண்டு. ‘நாங்கள் தர்மம்தான் செய்வோம், உரிமையாகத் தரமாட்டோம்’ என்றால் இதை எப்படிப் புரிந்துகொள்வது? ‘கொடுக்கிறதை வாங்கிக்கோ, நீ கேட்காதே’ என்பது மன்னராட்சி காலத்து நடைமுறை.

‘நூறு சதவீதம் சேவை செய்கிறோம்’ என்று சொல்பவர்கள் இந்த 25 சதவீதத்தை ஏன் எதிர்க்க வேண்டும்..? சேர்த்துச் செய்யலாமே? தங்கள் பண்பாட்டுக்கும் மொழிக்கும் பாதகம் வந்து விடும் என்கிறார்கள். இன்று சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், எத்தனை சிறுபான்மை சமூகத்துப் பிள்ளைகள் படிக்கிறார்கள்..? தி.நகரில் உள்ள ஒரு ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் ஒரு ஆங்கிலோ இண்டியன் மாணவர் கூட இல்லை. சரி, ஆசிரியராவது ஆங்கிலோ இண்டியனா என்றால், அதுவும் இல்லை. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் சிறுபான்மை சமூகத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை யாராலும் தடுக்கமுடியாது. அரசியல் சாசனம் அவர்களுக்குக் கொடுத்துள்ள உரிமை அது. ஆனால் அறக்கட்டளையை அரசிடம் பதிவு செய்யும்போதே, ‘ஜாதி, மத, இன, மொழிப் பாகுபாடின்றி அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சேவை செய்வோம்’ என்று உறுதிமொழி கொடுத்துத்தான் அனுமதி வாங்குகிறார்கள். அதற்கு புறம்பாக நடக்கக்கூடாது.

இந்த கல்வி உரிமைச்சட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் 25 சதவீத ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் உரிமைதான் இந்த ஒதுக்கீட்டின் அடிப்படை. 1980 முதல் இன்றுவரைக்குமான கல்விமுறையால் ‘ஏழைக்கு அரசுப்பள்ளி, பணக்காரனுக்கு தனியார் பள்ளி’ என்று நம் சமூகம் செங்குத்தாக பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்த ஒதுக்கீடு அந்தப் பிளவை சற்றுக் குறைக்கும். ஏழையும், பணக்காரனும் ஒருவனை ஒருவன் புரிந்து கொள்வான். நட்பு பாராட்டுவான். சமூகத்தில் புரிந்துணர்வு ஏற்படும். இதனால் சிறுபான்மை சமூகத்தின் பண்பாடு மீது எந்தத் தாக்குதலும் நடக்காது. சிறுபான்மைப் பள்ளிகள் இந்த விஷயத்தில் தங்கள் கடமையில் இருந்து விலகி நிற்கின்றன...’’ என்று காட்டம் காட்டுகிறார் கஜேந்திரபாபு. சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை. அதேநேரம், சிறுபான்மை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டது என்பதுதான் யதார்த்தம்!
-வெ.நீலகண்டன்