ரெடி மிக்ஸில் பணமும் கலக்கும்!





எந்திரங்கள் வந்து சமையலை சுலபமாக்கின. இந்தக் காலத்தில் எந்திரங்களுக்குக் கூட வேலையில்லை. எல்லாம் இன்ஸ்டன்ட் மயம்! பிரியாணி முதல் பாயசம் வரை எல்லாவற்றுக்கும் ரெடி மிக்ஸ் வந்தாச்சு. பாக்கெட்டை பிரித்தோமா, சூடுபடுத்தினோமா, சாப்பிட்டோமா என இன்றைய சமையல் அத்தனை சுலபம்! சென்னையைச் சேர்ந்த கவுரி, விதம்விதமான இன்ஸ்டன்ட் மிக்ஸ் தயாரிப்பதில் நிபுணி. ‘‘வீட்டிலேயே சுத்தமான, ஆரோக்கியமான முறையில் இதைத் தயாரிப்பது உடல்நலத்துக்கும் நல்லது, வருமானத்துக்கும் வழி காட்டும்’’ என்கிறார் அவர். ‘‘ஊறுகாய் பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். விற்பனைக்குப் போற இடங்கள்ல, ரெடி மிக்ஸ் பண்றீங்களான்னு கேட்டாங்க. நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சதும், ஊறுகாய் வகைகளோட சேர்த்து, ரெடி மிக்ஸ்களையும் பண்ண ஆரம்பிச்சேன். வருஷம் முழுக்க ஆர்டர் இருக்கற அளவுக்கு இது என்னை பிசியா வச்சிருக்கு’’ என்கிற கவுரி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘மளிகை சாமான்கள், பாத்திரங்கள், எடை மெஷின், காலி பாட்டில்கள், அடுப்பு... 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை  முதலீடு.’’

என்னென்ன செய்யலாம்? என்ன ஸ்பெஷல்?
‘‘வத்தக் குழம்பு மிக்ஸ், மோர்க் குழம்பு மிக்ஸ், பூண்டு குழம்பு மிக்ஸ், புளிக்காய்ச்சல், சட்னி பொடி, வெரைட்டி ரைஸ் மிக்ஸ், பாயசம் மிக்ஸ்னு இன்னும் நிறைய... பொதுவா கடைகள்ல வாங்கற இன்ஸ்டன்ட் மிக்ஸ்ல ஒருவித கெமிக்கல் வாசனை வரும். சுவையும் வித்தியாசமா தெரியும். ஆனா வீட்டுத் தயாரிப்புல கெமிக்கல் கிடையாதுங்கிறதால, சாதாரண சமையல்ல என்ன ருசி கிடைக்குமோ, அதே ருசி இருக்கும். ஆர்டருக்கேத்தபடி அப்பப்ப ஃப்ரெஷ்ஷா தயாரிக்கிறதால, கெட்டுப் போகாமலிருக்க சேர்க்கற விஷயங்களுக்கு தேவையில்லை. அதனால ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘கெமிக்கல் கலக்கறதில்லைங்கிறதால, கடைகளுக்குக் கொடுக்கறதில்லை. அக்கம்பக்கத்து வீடுகள், பெண்கள் வேலை பார்க்கற இடங்கள்னு போய் சாம்பிள் கொடுத்தாலே, தொடர்ச்சியா ஆர்டர் வரும். குழம்பு பேஸ்ட் வகைகளை 300 கிராம் 60 ரூபாய்க்கும், பொடி வகைகளை 100 கிராம் 30 ரூபாய்க்கும் கொடுக்கலாம். 30 சதவீத லாபம் நிற்கும். காலி பாட்டில்களை வாங்கி, சோப்புத் தண்ணில ஊற வச்சுக் கழுவி, வெயில்ல காய வச்சு ஈரம் போன பிறகு நிரப்பிக் கொடுத்தா, 6 மாசம் வரைக்கும் கெட்டுப் போகாது. தினம் ஒரு வெரைட்டியா பண்ணினா, அலுப்பும் தெரியாது.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சில 6 வகை இன்ஸ்டன்ட் மிக்ஸ் கத்துக்க 500 ரூபாய் கட்டணம்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்