மாடு மேய்க்கும் சிறுவனிடம் கூட இறைத்தன்மை இருக்கலாம் என்ற மகத்தான கருத்தை வலியுறுத்துகிறது கிருஷ்ணாவதாரம். ஆனால், அந்த கிருஷ்ணனுக்கென்று இதுவரை தமிழகத்தில் பெரிய அளவில் கோயில்கள் ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த ஏக்கத்தைப் போக்கத்தான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை கிராமத்தில் வி.ஜி.பிக்கு எதிரில் ஆறரை ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமான கிருஷ்ணர் கோயில் ஒன்றை எழுப்பி வருகிறது ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என பரவலாக அறியப்படும் ‘இஸ்கான்’ அமைப்பு!
பார்க்க அமெரிக்க நாடாளுமன்றம் போல் வெள்ளை வெளேரென்று கண்களை மிரட்டிய அந்த பிரமாண்ட கோயிலுக்கு விசிட் அடித்தோம். இதன் அமைப்பைப் பற்றி விளக்கம் தந்தார், கோயில் தலைவர் சுமித்ர கிருஷ்ணதாஸ். கருவறை, உள் பிராகாரம், வெளிப் பிராகாரம், நாற்புறமும் கோபுரம் என்ற நம்மூர் மரபுக்கு முற்றிலும் மாறுபட்டு, அடுக்குமாடியாக நிமிர்ந்திருக்கிறது இந்தக் கோயில். முதல் தளம்தான் கிருஷ்ணன் குடியிருக்கும் கோயில். தரை தளம் பிரமாண்ட கம்யூனிட்டி ஹாலாக உருவாகியிருக்கிறது. நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு கருங்கல் யானைகள் நம்மை வரவேற்றன. ‘‘பகவான் பாற்கடலைக் கடைஞ்சப்போ, முதல்ல யானைகள் தோன்றியதா புராணம். அதனால, சாஸ்திரப்படி ஒரு கோயிலை திசைக்கு ஒண்ணா எட்டு யானைகள் தாங்கி நிக்கணும். இன்னும் ஆறு யானைகள் சீக்கிரமே ரெடியாகி வந்துடும்!’’ என்றார் கிருஷ்ணதாஸ்.
வாசலருகிலேயே இரு பக்கமும் பிரிந்து மேலேறும் பிரமாண்ட படிக்கட்டுகளில் நடந்தால் கோயிலுக்குள் நுழையலாம். தொடரும் படிக்கட்டுகளில் ஆங்காங்கே சில படிகள் மிக அகலமாக அமைக்கப்பட்டு, அவை ஒரு சக்கரத்தைத் தாங்கி நிற்கின்றன. மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்களே அவனுக்கு சக்தியைத் தருகிறதாம். இந்தப் படிகளை கடக்கும் பக்தர்கள், தங்கள் உடலின் சக்தியை உணர்வதற்காகத்தான் இந்த சக்கர படிக்கட்டுகளாம். அவற்றில் கடைசி சக்கரத்தைத் தாண்டினால் கோயில் தளம். ‘‘இதுதான் மோட்ச தளம். இங்கேதான் ஏழாவது சக்கரம் இருக்கு! படிகள்ல இருக்கறது இந்த உலகத்து இன்பத்தை அனுபவிக்கிற சக்கரங்கள். ஏழாவது, மோட்சத்தை அடையறதுக்கான சக்கரம்’’ என்றபடி நம்மை உள்ளே அழைத்தார் கிருஷ்ணதாஸ். சுமார் ஏழாயிரம் சதுர அடியில் தரை முழுக்க ராஜஸ்தான் வெள்ளைப் பளிங்கு பதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையின் மத்தியில் ஒளி ஊடுருவக்கூடிய ஓனிக்ஸ் வகை பளிங்குக் கல்லில் அமைந்துள்ளது ஏழாவது சக்கரம். பின் புறம் உள்ள மின் விளக்குகளால் அது ஒளியை சிந்திக் கொண்டிருந்தது. அந்த சக்கரத்தில் நின்றுகொண்டு மேலே பார்த்தால், கூரையில் சுமார் இருபதடி விட்டம் கொண்ட ஒரு வட்ட துவாரம். ஒலி, ஒளி உட்புகும் படியாக மெல்லிய தகடுகள் இதன் மீது வேயப்பட்டுள்ளன. அதற்கு மேல் ஒரு காற்றாடி எப்போதுமே சுற்றிக்கொண்டிருக்கிறது.
‘‘வெளியிலிருந்து எப்படி காற்றும், ஒளியும், ஒலியும் உள்ளே வருதோ, அதே போல இந்தச் சக்கரத்துல நின்னு எதிர்ல இருக்குற கிருஷ்ணனை பக்தர்கள் பிரார்த்தனை செய்யும்போது, அவங்களோட வேண்டுதலும் இந்த துவாரம் வழியா இறைவனை எட்டும். இந்த துவாரத்துக்கு பிரம்மஸ்தானம்னு பெயர்’’ என்றார் கிருஷ்ணதாஸ். சுவாமி சிலைகளுக்கு மேலான விதானங்கள், குஜராத் தேக்கு மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் மூன்று விதானங்கள். நடுவில் உள்ள விதானத்தில் ராதை, கிருஷ்ணன் சிலைகளுடன் இரண்டு கோபிகைகளான விசாகா மற்றும் லலிதாவும் இடம் பெறுவர். மற்ற சிம்மாசனங்களில் சைதன்யர், பூரி ஜகந்நாதர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. கோயிலின் கூரை முழுவதும் வென்டிலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்ட்ரலைஸ்டு ஏசி போல பைப் லைன் கொடுக்கப்பட்டுள்ள இந்த வென்டிலேட்டர்கள், ஒரு ராட்சத மின்விசிறியோடு இணைக்கப்பட்டுள்ளன. அந்த மின்விசிறி இயற்கையான காற்றை இந்த வென்டிலேட்டர்கள் வழியாக கோயிலுக்குள் சுழலவிடும். இதனால் கோயிலுக்குள் எவ்வளவு பேர் இருந்தாலும் புழுக்கமாக இருக்காதாம். இரண்டாம் தளமான மொட்டை மாடியிலிருந்து எழும்புகின்றன கோயிலின் மூன்று கோபுரங்கள். நடுவில் உள்ள கோபுரம் மற்ற இரண்டை விடவும் பெரியது. இதில் கலசங்கள் பொருத்தப்பட்டு, ஏப்ரல் 26ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட இருக்கிறது இந்த ஆன்மிக பிரமாண்டம். ஆக, இனி ஈசிஆரில் ஆன்மிகப் பயணிகளையும் பார்க்கலாம்!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.கிருஷ்ணமூர்த்தி