சுட்ட கதை சுடாத நீதி





தன் மகனின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ஐம்பது வயதில் சொந்த ஊரை விட்டுக் கிளம்பி அமெரிக்கா போயிருந்தார் அந்தத் தாய். தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து, அங்கேயே வாழ்க்கைப்பட்ட அந்தப் பெண்மணி, பக்கத்து நகரத்தைக்கூட அதிகம் பார்த்ததில்லை. கிராமத்து வீடு, வாசல், தோட்டம், வயல்வெளி என வாழ்க்கை முடிந்துவிடும் என நினைத்தவருக்கு அமெரிக்க வாழ்க்கை கடும் மிரட்சி தந்தது.

குழந்தையைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலை, சமையல் என அங்கும் நான்கு சுவர்களுக்குள்ளேயே இருந்துவிட பிரியப்பட்டார். மகனின் குழந்தைகள் வளர்ந்து, அவர்களுக்கும் திருமணமாகி, அந்தக் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவருக்கு, வயது எண்பதைத் தாண்டும்போது சொந்த ஊர் ஏக்கம் வந்தது. மரணத்துக்குமுன் ஒரே ஒருமுறையாவது கிராமத்துக்குப் போய் சொந்தங்களையும், அந்த மண்ணையும் பார்த்துவிட ஆசைப்பட்டார்.

அமெரிக்கா வந்து, அங்கேயே குடியுரிமை வாங்கித் தங்கிவிட்டதால், இப்போது அமெரிக்க பாஸ்போர்ட் எடுத்து, அவர் இந்தியா செல்லவேண்டும்.

பாஸ்போர்ட் எடுக்கப் போனார். ‘‘முதலில் உங்கள் தேச பக்தியைக் காட்டும் உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகே பாஸ்போர்ட் தருவோம்’’ என்று அங்கிருந்த அதிகாரி சொல்லிவிட்டு, ‘‘முதலில் வலது கையை உயர்த்திக் கொள்ளுங்கள்’’ என்றார். 

மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்கியிராத அந்த மூதாட்டிக்கு ‘உறுதிமொழி’ என்ற வார்த்தையே மிரட்சி தந்தது. தயக்கத்தோடு கையை உயர்த்தினார். ‘‘நான் சொல்வதை அப்படியே சொல்லுங்கள்...’’ என்ற அதிகாரி தொடர்ந்தார்... ‘‘இந்த தேசத்தையும், நமது அரசியல் சாசனத்தையும் எப்பாடுபட்டாவது எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றுவேன்’’ என்று அந்த அதிகாரி சொல்லிக்கொண்டே போக, மூதாட்டியின் முகம் வெளிறிப் போனது.

‘‘எதையோ நான் காப்பாத்தணும்னு சொல்றீங்க... அதை நான் இந்த தள்ளாத வயசுல தனியா செய்யணுமா? இல்ல, எனக்கு யாராவது உதவிக்கு வருவாங்களா?’’ என்றார் அப்பாவியாக!