விஜயா டீச்சர்





வாசலில் நின்றிருந்த போலீஸ்காரர், ‘‘ஆனந்த் வீடு இதுதானே..?’’ என்று கேட்டதும் திகைத்துப் போன விஜயா திரும்பி அண்ணன் சோமசுந்தரத்தைப் பார்த்தாள். சாப்பிட உட்கார்ந்த சோமு அப்படியே தட்டை நகர்த்திவிட்டு எழுந்து வாசலுக்குப் போனார்.

‘‘ஆனந்த் வீடு இதுதான்... என்ன விஷயம், சொல்லுங்க..?’’ என்று சோமு கேட்க, ‘‘ஒரு கம்ப்ளெய்ன்ட் விஷயமா விசாரிக்கத்தான்... உடனே ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவைப் பாருங்க’’ என்று சொல்லிவிட்டு அந்த கான்ஸ்டபிள் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்து கிளம்பினார்.



சோமு அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்ப, ‘‘அண்ணே... நீ தனியா போய் அங்க என்ன பேசுவ? இரு, நானும் கூட வர்றேன்’’ என்று விஜயாவும் கிளம்பினாள்.
எடுத்த எடுப்பிலேயே ஏக வசனத்தில் ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.

‘‘யாருய்யா நீ... அந்த பொறம்போக்குக்கு நீ என்ன உறவு..?’’ என்ற அவருடைய வார்த்தைகளுக்கே சோமுவின் கண்கள் கலங்கிவிட்டன.

‘‘நான் சோமசுந்தரம்... டிரான்ஸ்போர்ட்டில் செக்கிங் இன்ஸ்பெக்டரா இருக்கேன்... ஆனந்த் என் தம்பி...’’ என்றார். இன்ஸ்பெக்டர் ஏதோ பெரிய ஜோக் கேட்டது போலச் சிரித்தார்.
‘‘ஓஹோ... நீ பஸ்ஸுல டிக்கெட் போடுறே. உன் தம்பி காலேஜ்ல டிக்கெட் போடுறான்... அப்படித்தானே?’’ என்றார். இன்ஸ்பெக்டர் முதலிலேயே சிரித்ததற்கான அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. ஸ்டேஷனில் இருந்த அத்தனை பேரும் சிரித்தார்கள்.

‘‘என் தம்பியை எங்கே சார்..?’’ என்றாள் விஜயா.

‘‘அதைத் தெரிஞ்சுக்கத்தானே உங்களை வரச் சொன்னோம். காலேஜ்ல ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்திருக்கான். அவ பிரின்ஸிபல் கிட்டே புகார் கொடுத்துட்டா. அப்புறம் உங்கப்பா போய் மன்னிப்பு கேட்டதும் விட்டிருக்காங்க. அதுக்கப்புறமும் சும்மா இருக்காம, அந்தப் பொண்ணை பஸ் ஸ்டாண்டுல பார்த்து சைட் அடிச்சு கலாட்டா பண்ணியிருக்கான். அந்தப் பொண்ணு பஸ் ஸ்டாண்டுல இருக்கற போலீஸ் அவுட்போஸ்ட்ல புகார் கொடுத்திருக்கா. அங்கே தேடிப் போனா பையன் எஸ்கேப்... அதான் வீட்டுக்கு வந்தானான்னு விசாரிக்க கூட்டிட்டு வரச் சொன்னேன். இப்போ சொல்லுங்க... அந்த பொறம்போக்கு எங்கே?’’ என்றார்.



சோமு திருதிருவென்று விழித்துக் கொண்டு நிற்க, விஜயாதான் பேசினாள்.
‘‘சார்... காலைல காலேஜுக்கு போன எங்க தம்பி இன்னும் வீட்டுக்கு வரலை... நாங்களே கவலையோட இருக்கோம். நீங்க இப்படி அவனைத் திட்டுறது எங்க மனசை ரொம்ப சங்கடப்படுத்துது... நானும் ஸ்கூல் டீச்சரா இருக்கறவ. பிள்ளையை ஒழுங்காதான் வளர்க்கிறோம். அவனும் நல்லாத்தான் இருக்கான். அவன் வந்து சொல்லும் வரையில் உண்மை என்னன்னு தெரியாது... புகார் கொடுத்தது யாருன்னு சொல்லுங்க... நான் பேசறேன்’’ என்றாள் விஜயா.

‘‘அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நீங்க ஆனந்த் வந்தா உடனே இங்க அனுப்பி வையுங்க... அது போதும். மத்த கதைகளை எல்லாம் அவனே சொல்லுவான். நீங்க போகலாம். ஜீப்பை எடுய்யா... இன்னும் எத்தனை ராஸ்கல்கள் இப்படி சுத்தறாங்கன்னு பார்த்துட்டு வருவோம்’’ என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டார்.

இருவரும் தளர்வாக ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தார்கள்.
‘‘என்ன விஜயா இது கேவலம். அக்காக்களுக்கு கல்யாணம் நடக்கப் போகுதே... நாம இப்படிச் செய்யலாமான்னு கொஞ்சமாவது இந்தப் பயலுக்குத் தோண வேண்டாம்... அப்பாவுக்குத் தெரிஞ்சா அவனை வெட்டிப் போட்டுருவார்...’’ என்று வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தார் சோமசுந்தரம்.

‘‘அண்ணே... நீ கொஞ்சம் சும்மா வர்றியா! ஆனந்த் அப்படிப்பட்டவன் இல்லை. அப்பாகிட்டே எதையாவது உளறி வைக்காதே... வீட்ல நல்ல காரியம் நடக்கற நேரத்துல குட்டையைக் குழப்பாதே. வீட்டுல போய் நான் பேசிக்கறேன்... நீ சும்மா இரு போதும்...’’ என்றாள்.

சோமசுந்தரத்திடம் வீறாப்பாகப் பேசி வாயை அடைத்துவிட்டாலும், வீட்டில் போய் என்ன பேசுவது என்று விஜயாவுக்குத் தெரியவில்லை.
‘அப்பாவிடம் மொத்தமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது ஆனந்தைப் பற்றி சொல்லத்தான் வேண்டும். உண்மையை முழுதாகச் சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனை அப்பா மதிக்கவே மாட்டார். அவன் படிப்பில் பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்தாலும் மதிக்க மாட்டார். பேச்சின் நடுவே அந்த இன்ஸ்பெக்டர் ஏதோ அப்பா காலேஜுக்குப் போய் பிரின்ஸிபலிடம் மன்னிப்பு கேட்டதாகச் சொன்னாரே... அப்பா அப்படியெல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்லையே. இதில் என்ன ஏமாற்று வேலை செய்தான் என்று தெரியவில்லையே...’

யோசனையோடு நடந்தாள் விஜயா.
மொத்த குடும்பமும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. அம்மா பதற்றமாக ஓடி வந்து, ‘‘என்ன ஆச்சு’’ என்று கண்ணீரும் அழுகையுமாக ஆரம்பிக்க, சோமசுந்தரத்தை உள்ளே அழைத்தாள் அண்ணி.

‘‘என்னங்க... ஒரு நிமிஷம் உள்ளே வாங்க...’’ என்ற அவள் பின்னால் போன சோமு, ‘‘விஜயா சொல்லுவா...’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
‘‘அது வந்தும்மா...’’ என்று விஜயா ஆரம்பித்த நொடியில் வீட்டுக்குள் போன் அடித்தது. எடுத்துப் பேசிய ராதா, ‘‘ஒரு நிமிஷம்...’’ என்று சொல்லி ரிசீவரை வைத்துவிட்டு விஜயாவிடம் வந்து, ‘‘போன் உனக்குத்தான்... கலைச்செல்வன் சார் பேசறார்’’ என்றாள்.

ஒருகணம் பிரகாசமான விஜயா உள்ளே போய் போனை எடுத்தாள்.
‘‘டீச்சர்... உங்க தம்பி வீட்டுல ஏதாவது பிரச்னை பண்ணிட்டாரா? மதுரை பஸ் ஸ்டாண்டில் திருதிருன்னு முழிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாரு. ‘என்ன தம்பி இந்தப் பக்கம்’னு கேட்டா ஏதேதோ சொல்றாரு... அப்புறமா வீட்டு நம்பரைக் கேட்டு வாங்கி போன் பண்றேன்... நீங்க ஆளைக் காணோம்னு போலீஸுக்கு போயிடாதீங்க...’’ என்றார்.



விஜயா சிரித்தபடியே குரலைத் தாழ்த்திக் கொண்டு பேசினாள்.
‘‘நல்லவன்னு நீங்க சர்டிபிகேட் கொடுத்த ஆனந்த், இப்ப உங்க கையிலேயே சிக்கிட்டானா... நாங்க ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அவனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டுட்டு வந்தாச்சு. சரி, நீங்க அவனைக் கூட்டிட்டு வாங்க. காலையில் பேசிக்கலாம்!’’ என்றாள்.
போனை வைத்துவிட்டு புதிய தெம்போடு வீட்டினர் பக்கம் திரும்பினாள்.

‘‘நம்ம ஆனந்த் எங்கேயும் போகலை... எந்த சிக்கல்லயும் மாட்டலை. ஃபிரெண்டோட மதுரைக்கு போயிருக்கான். அதுக்குள்ளே போலீஸ் என்னவோ ஏதோன்னு குழப்பிட்டாங்க. கலைச்செல்வன் சார் மதுரையில் பார்த்துட்டு போன் பண்ணினாரு... ஒண்ணும் பிரச்னை இல்லை. வாங்க உள்ளே போலாம்...’’ என்று சொல்லிவிட்டு உள்ளே நடந்தாள்.
துணிக்கடையில் மொத்த குடும்பமும் ஆஜராகி இருந்தது. கடையையே தலைகீழாகப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். சீதாவும் ராதாவும் ஆளுக்கொரு பக்கமாக புடவைகளைப் பார்த்துக் கொண்டிருக்க... அம்மா விலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘‘அடியே... ஐயாயிரம் ரூபாய்க்குள்ளே பாருங்க... சம்பந்தி வீட்டுல சொல்லி விட்டிருக்காங்க. அதுக்குள்ளே எடுத்தாதான் நமக்கு மரியாதை’’ என்றாள் அம்மா.
‘‘சீதா... நான்தான் பிசினாரி குடும்பத்தில் சிக்கிட்டேன்னு நினைச்சேன். ஆனா, உன் மாமனாரு தொட்டதுக்கெல்லாம் கணக்கு பார்ப்பாரு போலிருக்கே... ஐயாயிரம் ரூபாயை அளந்து கொடுத்திருக்காரு. பார்த்தும்மா, நாளைக்கு உப்பு, புளி, மிளகாய் எல்லாம் அளந்து எடுத்துக் குடுத்து சமைக்கச் சொல்லப் போறாரு...’’ என்று கேலி பேசினாள் ராதா.
அம்மா குறுக்கிட்டாள்.

‘‘சும்மா பெரியவங்களை கேலி பேசாதே... அவருதான் அன்னிக்கே அதுக்கு காரணமும் சொல்லிட்டாரே. அதிலே உள்ள நல்ல குணத்தைப் பாரு... அடுத்தவங்க கஷ்டத்தை உணர்ந்து பேசுற மனுஷந்தான் உண்மையான மனுஷன்... அப்படி ஒரு இடம் சீதாவுக்கு கிடைச்சிருக்கறது உண்மையிலேயே அதிர்ஷ்டம்தான்...’’ என்ற அம்மா, சீதா இரண்டாவதாக எடுத்து வைத்த சேலையைப் பார்த்துவிட்டு, ‘‘இது எதுக்குடி...’’ என்றாள்.

‘‘நம்ம விஜயா அக்காவுக்குதான்... எங்க ரெண்டு பேருக்கும் எடுக்கும்போது அவளுக்கும் எடுக்கணுமில்லே... ஒருவேளை அவளுக்கும் திடீர்னு மாப்பிள்ளை வந்து, எங்க நிச்சயத்தோடு சேர்த்து அவளுக்கும் செய்ய வேண்டியிருந்தா, அப்போ ஓடிக்கிட்டிருக்க வேண்டாமே...’’ என்றாள் சீதா. மூன்று சேலைகளையும் பில் போட்டார்கள்.
அம்மாவுக்கு மளுக்கென்று கண்களில் நீர் திரண்டது.

‘‘சொல்லு ஆனந்த்... எல்லாரும் கடைக்குப் போகட்டும்னுதான் வெயிட் பண்ணினேன். சீக்கிரம் சொல்லு... எங்கே போனே... காலேஜ்ல என்ன பிரச்னை... அப்பான்னு சொல்லி யாரைக் கூட்டிட்டுப் போனே?’’ என்று கேள்விகளை அடுக்கினாள் விஜயா.

‘‘எனக்கு வேண்டாதவங்க சொல்ற பழி அது. அப்படியெல்லாம் நான் எதுவும் செய்யலை... சும்மா என்னை போலீஸ் மாதிரி கேள்வி கேட்காதே... எனக்கு முக்கியமான வேலை இருக்கு’’ என்றபடி வெளியில் கிளம்பினான்.

‘‘உனக்கு அப்பாவோட பெல்ட் ட்ரீட்மென்ட்தான் சரி... ஸ்டேஷனில் இருந்து வந்ததுமே அப்பாகிட்டே சொல்லியிருக்கணும்... ஆனா, விட்டேன் பாரு... அது என் தப்பு. போலீஸில் உன் மேல ஒருத்தி புகார் கொடுத்திருக்கா... அதுக்கு பதில் சொல்லும்போது அப்பாகிட்டே மாட்டுவே... என்னமோ பண்ணு!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
பள்ளிக்கூடம் வழக்கம் போலத்தான் இருந்தது. ஆனால், விஜயாவுக்குள் மீண்டும் அந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வரும்போது கலைச்செல்வன் எதிர்ப்பட்டார்.

‘‘என்ன சார்... சொல்லாம கொள்ளாம ஊருக்குப் போயிட்டீங்க..?’’ என்றாள். ‘‘என்ன டீச்சர்... தம்பியைப் போட்டு அடிச்சுட்டீங்களா... சின்னப் பையன். என்னப்பான்னு கேட்டதும் பொலபொலன்னு அழுதுட்டான். ஏதோ ஒரு பொண்ணு தேவையில்லாம இவன் மேலே புகார் கொடுத்திருக்கா... அதுக்கு பயந்துக்கிட்டு மதுரைக்கு பஸ் ஏறிட்டான். நேரா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போய், புகார் கொடுத்தவங்களையும் வர வச்சு பேசிட்டு வந்துட்டேன். இனிமே நல்லவிதமா இருப்பேன்னு சொல்லியிருக்கான்’’ என்று பேசிக் கொண்டே போன கலைச்செல்வனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

‘‘எங்க குடும்ப விஷயம் இருக்கட்டும்... ஊருக்கு எதுக்குப் போனீங்க..?’’ என்றாள். ‘‘தங்கைக்கு வரன் வந்திருக்குன்னு சொன்னாங்க... போனேன். செட் ஆகலை... அம்மா வழக்கம்போல, ‘உனக்காவது பார்ப்போமே’ன்னு ஆரம்பிச்சுட்டாங்க. தங்கைக்கு ஒரு இடம் அமையாம எனக்குன்னு பேச்சே இல்லைன்னு சொல்லிட்டேன். நீங்களே சொல்லுங்க... தங்கைக்கு கல்யாணம் முடிக்காமல் நாம கல்யாணம் முடிச்சா நல்லாவா இருக்கும்?’’ என்றார் கலைச்செல்வன். விஜயா அப்படியே கலைச்செல்வனைப் பார்த்தபடி நின்றாள். (தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்