வந்தாச்சு



இதழ் பூவரசி

வவுனியாவில் இருந்து வெளிவரும் இந்த அரையாண்டு இதழ், இலங்கை இன அழித்தொழிப்பு கொடூரத்தையும், அதன் தொடர்ச்சியான அவலங்களையும் தேர்ந்த படைப்புகள் வழி காட்சிப்படுத்துகிறது. போருக்குப் பிந்தைய ஈழம் பற்றிய தீபச்செல்வனின் கட்டுரை, அங்கு அதிவேகத்தில் நிகழ்ந்துவரும் சிங்களப் பண்பாட்டு படையெடுப்பு பற்றி விளக்குவதோடு, போராட்டத்தை கூர்மைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. பத்திநாதனின் Ôஈழ அகதிகள் எதிர்பார்ப்பது நலத்திட்ட உதவிகளையா?’ கட்டுரை வலியூட்டுகிறது. பாலு மகேந்திரா, எஸ்.பொ, உமா வரதராஜன், கவிஞர் திருமா வளவன் ஆகியோரின் நீண்ட நேர்காணல்கள் நிறைவு. தமிழ்த் திரைப்படங்கள் ஈழ விவகாரத்தை மலினப்படுத்தி விட்டனÕ என்ற அழுத்தமான குற்றச்சாட்டை பதிவு செய்கிறார் பாலு மகேந்திரா. அழுத்தமான கட்டுரைகள், அழுகுணர்வு ததும்பும் கவிதைகள் என சிறப்பான படைப்புகளோடு வெளிவந்துள்ள இதழின் திருஷ்டிப்பொட்டு, எழுத்துரு. பல பக்கங்கள் கண்களை உறுத்துகின்றன.

(ஆசிரியர்: ஈழவாணி, விலை ரூ.125/-. தமிழக முகவரி: எண்-130, எஸ்ஸி-பி ரெசிடென்ஸி, வானகரம், சென்னை-95. பேச: 9600131346.)

இசை அழகன் அழகி

‘தமிழ் படம்’ மூலம் கவனத்தை ஈர்த்த கண்ணன் இசையில் வெளிவந்திருக்கிறது ‘அழகன் அழகி’ பாடல்கள். ஒரு ஆங்கிலப் பாடலுடன் சேர்த்து மொத்தம் 7 பாடல்கள். கபிலன் எழுதி, விஜயபிரகாஷ் பாடியுள்ள ‘மழைத்துளியா நீ...’ பாடல் மென் சோக மெலடி. நா.முத்துக்குமார் எழுதியுள்ள ‘நெஞ்சில் நினைப்பதெல்லாம்...’ பாடல், மயில் தோகையை தழுவி வந்த தென்றலாய் செவியில் நுழைகிறது.  நரேஷ் அய்யர், ஸ்வேதா மேனன் குரல்களில் பின்னிப் பிணைந்திருக்கும் கெமிஸ்ட்ரி, இதயம் வருடுகிறது. சினேகன் எழுதி சின்னப்பொண்ணு பாடியுள்ள ‘அடடா அழகாய்...’ பாடல் செம உற்சாகம். கிராமங்களின் முகங்களில் நகரத்து சாயம் பூசப்பட்டு வருவதை அப்பட்டமாய்ச் சொல்கின்றன வரிகள். ஆங்காங்கே குரல் மாற்றிப் பாடியிருக்கும் சின்னப்பொண்ணுவை பாராட்டலாம். இயக்குனர் நந்தா பெரியசாமியும் ஒரு பாடல் எழுதியுள்ளார்.


புத்தகம் சொற்பிறப்பியல்

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தமொழி தமிழ்’ என அழுத்தமாக நிறுவும் நூல். பல்கலைக்கழகங்கள் செய்திருக்க வேண்டிய பணி... தனியொரு மனிதராக 20 ஆண்டுகள் உழைப்பில் செய்து முடித்திருக்கிறார் நூலாசிரியர். உலகெங்கும் பேசப்படுகிற மொழிச் சொற்கள் அனைத்தையும் ஆராய்ந்து, பகுபதம் பிரித்து, எல்லா மொழிகளும் தமிழ்த்தாயின் சேய்களே என அறிவியல், மொழியியல் ஆதாரங்களோடு அறுதியிட்டுக் கூறுகிறார். அரபி, ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், நார்வேஜியன், ஜப்பானிய மொழி உள்ளிட்ட சர்வதேச மொழிகளையும் ஒப்பாய்வுக்கு உள்ளாக்குகிறார். உதாரணத்துக்கு, மாறன் (அரசன்) என்ற தமிழ்ச்சொல் அதே பொருளில் சிறிய ஒலித்திரிபுகளுடன், மார்க், மார்க்ஸ், மார்கஸ், மார்கோனி, மார்டின் என ஐரோப்பிய மக்களின் பெயர்களாக மாறியிருப்பதை சுட்டிக்காட்டும் போது வியப்பு மேலிடுகிறது. மனித இனம் தோன்றிய வரலாறு, மொழி உருவான தருணம் என சரித்திரத்தையும் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறார் முகமது ஹனீபா.

(பக்கங்கள்: 992, விலை: ரூ.500/-, வெளியீடு: எம்.ஆர்.எம். முதன்மொழிப் பதிப்பகம், 670, ஈ.வே.ரா. சாலை, கே.கே.நகர், திருச்சி-620021, பேச: 9942538273.)

வலை sirukathaigal

தமிழ்ச் சிறுகதைகளுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளம், www.sirukathaigal.com. ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’, ‘அக்கிரஹாரத்துப் பூனை’... புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’... இப்படி தமிழின் முக்கிய சிறுகதைகளாக அறியப்படும் எதையும் மிஸ் பண்ணவில்லை இவர்கள். அமானுஷ்யம், அறிவியல், காதல், க்ரைம் என்று வகை வாரியாக இங்கே பட்டியலிடப்பட்டிருக்கின்றன நூற்றுக்கணக்கான சிறுகதைகள். ந.பிச்சமூர்த்தி முதல் சாரு நிவேதிதா வரை கிட்டத்தட்ட 205 கதாசிரியர்களின் படைப்புகளைத்   தாங்கியிருக்கும் இந்தத் தளத்துக்கு வாசகர்களும் தங்கள் சிறுகதைகளை அனுப்பலாம். ஆனால், தேர்வாகும் சிறுகதைகளே இடம்பெறும்!