ரத்னவேல் ஒளிப்பதிவாளர்





‘‘இயக்குனரின் முதல் ரசிகன் நான். அதே நேரம் முதல் விமர்சகனாகவும் இருக்கிறேன். ரசிப்பது மட்டும் ரசிகனின் வேலை அல்ல... விமர்சிப்பதும்தான்!’’

 கேள்விகளுக்குப் பதில் சொல்வதைவிட, புரிய வைக்கவே முயற்சி செய்கிறார் ரத்னவேல். ஒளியின் நடனத்தை, நளினத்தை, அழகை ரத்னவேலுவின் கண்கள் தேடித்தேடி தரிசிக்கின்றன. பாலாவின் ‘சேது’, கவுதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’, ஷங்கரின் ‘எந்திரன்’ போன்ற நினைவில் நிற்கும் படங்களில், தன்னுடைய பங்களிப்பை உறுதி செய்து தடம் பதிக்கிறார் ரத்னவேல்.

‘‘படித்து கௌரவமான அரசு வேலையில் இருக்கணும். இல்லேன்னா, 100 பேருக்கு வேலை தர்ற மாதிரி சொந்தமா தொழில் செய்யணும். என் குடும்பத்தில் எழுதப்படாத சட்டமா இருந்த இந்த ரெண்டு வழியிலும் போகமுடியாதுன்னு கேமராவோடு நின்ற பையன் நான். டாக்டர், எஞ்சினியர், கலெக்டர், எஸ்.பி என்று சொந்த பந்தங்கள் இருக்கும்போது, என்னால் அதிர்ச்சியில் உறைந்தார் அப்பா.

என் அண்ணன் சுந்தரவேலுக்கு சினிமா பெரிய கனவு. கேமராவில் விதம்விதமா படம் எடுத்துக் கொண்டிருப்பார். சினிமா பார்த்துவிட்டு வந்து மணிக்கணக்கில் பேசுவார். சினிமா ஆர்வத்தை வீட்டில் வெளிப்படுத்தக்கூட முடியாத சூழல். விளையாட்டை வேடிக்கை பார்த்தவன் விளையாட்டு வீரன் ஆனதுபோல, அண்ணனின் ஆர்வத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் கலையார்வம் முழுசாக இறங்கியது. அண்ணன் தொழிலதிபராகும் முயற்சியில் இறங்க, எட்டாவது படிக்கும்போது அவருடைய கேமரா என் கைக்கு மாறியது. மற்றவர்களின் கவனத்தில் பதியாத என்னுடைய முதல் திருப்புமுனை அது.


வீட்டில் எந்த நிகழ்ச்சி என்றாலும் நான்தான் ஆஸ்தான புகைப்படக்காரர். ஊட்டியின் அழகை கேமராவில் நான் படமாகப் பதிவு செய்ததை பலரும் பாராட்டினார்கள். ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’ படங்களுக்குப் பிறகு பி.சி.ஸ்ரீராமும், மணிரத்னமும் என்னுடைய ஆதர்ச புருஷர்களாக மாறினார்கள். பி.சி.ஸ்ரீராம் சாரோட ஒளிப்பதிவை ரசிப்பதற்கே நிறைய அறிவு தேவைப்பட்டது. எந்த வளர்ச்சிக்கும் ஆர்வமே முதல் படி. அந்தப்படியில் என்னை ‘நாயகன்’ படம் ஏற்றியது. தமிழ் சினிமாவின் வாசலாக இருக்கும் வடபழனியில் வீடு. தெருவில் என்னோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இயக்குனர் ஆபாவாணன் போன்றவர்கள் திடீரென்று வி.ஐ.பி ஆனார்கள். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்கிற அடையாளத்தோடு ஆபாவாணன் எடுத்த ‘ஊமை விழிகள்’ படம் அப்போது அனைத்து பத்திரிகைகளிலும் பாராட்டைப் பெற்றது. சென்னையில் திரைப்படக் கல்லூரி இருப்பதும், அங்கு ஒளிப்பதிவைக் கற்றுத் தருகிறார்கள் என்பதும் அப்போதுதான் தெரியவந்தது.

பிளஸ் 2 முடித்த கையோடு என்னை எங்கு சேர்ப்பது என்கிற ஆராய்ச்சியில் இருந்தார் அப்பா. சொன்னதை ஏற்றுக் கொண்டு அமைதியாக நடந்து கொள்கிற பையன், திடீரென்று ‘திரைப்படக் கல்லூரியில்தான் படிப்பேன்’ என்று உறுதியாகச் சொல்வேன் என வீட்டில் யாரும் எதிர்பார்க்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்தாலும், என் கருத்துக்கு மதிப்பு கொடுத்தார் அப்பா. ‘ஒரு டிகிரியாவது வாங்கினாதான், நீ நினைச்சதை செய்ய முடியும்’ என பரஸ்பர ஒப்பந்தத்தை முன்வைத்தார். அப்பாவின் விருப்பத்திற்காக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் சேர்ந்தேன். ‘கொஞ்ச நாள்ல மறந்துடுவான்’ என்று நினைத்தவரின் முன்னால், மூன்றாவது வருடம் கழித்து திரைப்படக் கல்லூரி விண்ணப்பத்தோடு போய் நின்றேன். வேறு வழி இல்லாமல் சம்மதித்தார்.

அப்போதும் ‘வருஷத்துக்கு 10 பேர் மட்டுமே சேரமுடியுற படிப்புல பையனுக்கு எங்க இடம் கிடைக்கப்போகுது?’ என்று நம்பிக்கையோடு இருந்தார். படிப்பு முடித்துவிட்டு போகிறவர்களுக்கு என்ன தெரியுமோ, அதைவிட அதிகமாக நான் தெரிந்து வைத்திருந்தது அவருக்குத் தெரியாது. பி.எஸ்சி இயற்பியல் படித்ததாக வீடு நம்பிக் கொண்டிருக்க, அமெரிக்கன் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் என்று நான் தேடித்தேடி ஒளிப்பதிவு பற்றி தெரிந்து கொண்டிருந்தேன். இன்டர்நேஷனல் போட்டோகிராபி தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களோடு இருந்த எனக்கு எளிதில் இடம் கிடைத்தது. 
வானம், மரம், கிளை, இலை எல்லாம் கடந்து, தன்னுடைய இலக்காக இருந்த கிளியின் கழுத்து மட்டும் தெரிந்த அர்ஜுனனின் குறியைப் போல, ஒளிப்பதிவில் மனம் சிக்கிக் கொண்டது. அந்த வயதுக்குரிய காதலுக்குக்கூட நேரம் ஒதுக்கியதில்லை. அப்போது எங்கள் கல்லூரியில் ஒரு விளம்பரத்தை ஷூட் பண்ணிக் கொண்டிருந்தார் ராஜீவ்மேனன். எங்களை தூரமாக நின்று அவர் வேலையை கவனிக்க அனுமதித்தார்கள். ஒவ்வொரு ஃபிரேமிலும் சமரசம் செய்துகொள்ளாத உழைப்பை வெளிப்படுத்திய அவரிடம்தான் உதவியாளராக சேர வேண்டும் என்று தீர்மானித்தேன். அப்போதே என் விருப்பத்தையும் வெளிப்படுத்தினேன். சிறுபிள்ளைத்தனமான என்னுடைய முயற்சியை சின்ன சிரிப்போடு தாண்டிப் போனார் அவர். ‘மொதல்ல படிப்பை முடிப்பா. அப்புறம் பார்க்கலாம்’ என்று சம்பிரதாயமாகச் சொன்னார். கொஞ்சம் அவமானமாக இருந்தது.


அந்த நிராகரிப்புதான் அடுத்த திருப்புமுனை.
‘நான் உங்ககிட்டேதான் வந்து சேருவேன்’ என மனசுக்குள் சபதமே எடுத்தேன். படிப்பு முடிந்த கையோடு ராஜீவ் மேனன் முன்னால் போய் நின்றேன். உறுதி எடுப்பதைவிட, எடுத்த உறுதியில் உறுதியாக இருப்பதுதான் வாழ்வில் பல திருப்பங்களை நிகழ்த்திக் காட்டும். ‘கீழே டீ கொட்டிட்டா, அதைத் துடைப்பியா?’ எனக் கேட்டார் அவர். ‘அந்த ஃபிரேமுக்கு என்ன தேவையோ, அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன் சார்’ என்கிற பதில் அவரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அன்று புதிதாக வந்த தொழில்நுட்பம் வரை தெரிந்து வைத்திருந்த தகுதி, ‘ராஜீவ் மேனனின் கடைசி அசிஸ்டன்ட்’ என்கிற இடத்தைத் தந்தது.

அவரிடம் உதவியாளராக இருந்தவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவே, எனக்கு சீக்கிரமே பதவி உயர்வு கிடைத்தது. ஒரு கட்டத்தில் நான் மட்டுமே இருந்தேன். கல்லூரியில் படிக்காத விஷயங்களை அவர் அருகிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது. ‘ராண்டி, அந்த ஜன்னல் லைட்டை கட் பண்ணு’ என்று சொல்லிவிட்டு வேறு வேலையில் மூழ்கி
விடுவார். அங்கு பத்து ஜன்னல்கள் இருக்கும். எந்த ஜன்னலில் இருந்து அதிகமான லைட் வருகிறது என்பதை கவனித்து சரியாக செய்திருப்பேன். சொல்லி செய்வதைக் கடந்து, அவர் நினைப்பதைப் புரிந்து செயல்படுகிற அளவு எண்ணங்கள் ஒத்துப்போனது. ஒளிப்பதிவு மட்டுமின்றி இயக்கம், ஆர்ட் டைரக்ஷன், எடிட்டிங் என எல்லாம் கற்றுக்கொள்ள முடிந்தது.

என் ஆதர்ச நாயகன் மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்திற்கு என் குருநாதர்தான் ஒளிப்பதிவு. அவருக்கு ‘ஆல் இன் ஆல் அழகுசுந்தரம்’ நான்தான். அப்போது ஓடிய ஓட்டம் பத்து படத்தில் வேலை பார்த்த அனுபவத்தைக் கொடுத்தது. எட்டு கிலோ எடை குறைய வைத்த ஓட்டம் அது.

சரத்குமார் நடிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகம் ஆக, ‘அரவிந்தன்’ படத்தின் பூஜை அன்றே டிரெய்லர் வெளியிட முடிவு செய்தார்கள். வித்தியாசமான அந்த முயற்சியில் டிரெய்லர் மட்டும் ஷூட் செய்வதற்காக போனேன். திறமைக்குரிய அங்கீகாரமாக அதுவே என்னுடைய முதல் வாய்ப்பாக மாறியது. ‘ஒளிப்பதிவு  ரத்ன வேல்’ என்று வெள்ளித்திரையின் கவனம் என் மீது பதியும்படியான அடையாளம் கிடைத்தது.

அப்போதிருந்தே, ‘கதை பிடித்தால் மட்டுமே வேலை செய்வேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிடுவேன். சிலருக்கு என் மீது வருத்தம்கூட வரும். 10 படம் ஒளிப்பதிவு செய்தால், 8 படங்கள் வெற்றிப்படங்களாக இருக்க இந்த உறுதி மட்டுமே காரணம். ‘சேது’, ‘நந்தா’, ‘திருமலை’ என தேர்ந்தெடுத்து செய்த படங்கள் நல்ல பெயரையும், கமர்ஷியல் வெற்றியையும் சேர்த்துத் தந்தன. தனிப்பட்ட சுக துக்கங்களை மறந்து, வருடக்கணக்கில் உழைக்கிற படங்களில் வெறும் பணம் மட்டுமே சம்பளமாக இருக்க முடியாது. இப்படி இருந்தால் வாய்ப்புகளே வராது என்று பயமுறுத்தினார்கள். என்னால் ரசித்துச் செய்ய முடிகிற படங்களை செய்தால் போதும் என்று உறுதியாக இருந்தேன். பல பேருக்கு கனவா இருக்கிற ரஜினி சார் படம் வரை வாய்ப்புகளுக்குப் பஞ்சம் இல்லை. ஒரே ஒரு லைட் மட்டுமே வைத்து ஷூட்டிங் நடத்துகிற சின்ன பட்ஜெட் படத்திலும், ‘எந்திரன்’ போன்ற மெகா பட்ஜெட் படத்திலும் சமமா ஈடுபாடு காட்டும் மனநிலையை, ஒளிப்பதிவு மீதுள்ள காதல்தான் தருகிறது.

‘ஜெகடம்’ என்கிற தெலுங்குப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்த நேரம். அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. ‘இன்னும் 48 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருப்பார். சொந்தங்களுக்கு சொல்லிவிடுங்கள்’ என மருத்துவர்கள் கைவிரித்தார்கள். மனம் முழுக்க துயரம் ததும்பியது. என் ஒருத்தனுக்காக படத்தின் வேலையை நிறுத்த முடியாது. ஒவ்வொரு படத்திலும் பலருடைய கனவும், உழைப்பும் இருக்கிறது. வருடக்கணக்கில் உழைத்த படத்தின் ரிசல்ட் நன்றாக வர, ஒருமுறை நான் நேரில் சரிபார்த்து கரெக்ஷன் சொல்ல வேண்டும். 24 மணி நேரத்திற்குள் திரும்பிவிடலாம் என்று மும்பைக்கு விமானம் ஏறினேன். வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு அவசர அவசரமா விமானம் பிடிக்க ஓடினால், அந்த விமானம் ரத்தானது. அடுத்த விமானம் வரை காத்திருந்த நேரத்தில், ‘அப்பா இருக்காரா?’ என்ற கேள்வியைக் கேட்டு பதில் வாங்கிய வலியின் மிச்சம் இன்னும் இருக்கிறது. ஒரு மகனாக கடைசி சொட்டு பாலை அப்பாவின் வாயில் ஊற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பிறகுதான் வந்தது. வீட்டை நெருங்கியபோது, ‘அப்பா இல்லடா... நம்மள விட்டுப் போயிட்டாரு’ என்ற செய்தி வந்தபோது வெடித்து அழுதேன்.

ஒரு பிள்ளையாக, பெற்ற அப்பாவின் உயிர் பிரியும்போது உடன் இருக்கமுடியாத துர்பாக்கியத்தை என் வாழ்நாளில் தீர்த்துக்கொள்ள முடியாது. என் அப்பா இறந்த ஒரு வாரத்தில் இயக்குனர் கவுதம் மேனனின் அப்பா இறந்து போனார். ‘அப்பாவைப் பத்தி படம் பண்ணலாமா?’ என்று கவுதம் கேட்டதும், என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் வார்த்தைகளில், காட்சிகளில் கவுதம் அப்பா இருப்பார். ஒளியின் அசைவுகளில் என்னோட அப்பா இருப்பார்’’ என்று சொல்கிற ரத்னவேலின் அடுத்த கனவு, சினிமா இயக்கம்.

‘‘கிடைச்சது  போதும்னு சோம்பேறியா இருந்துடாதே. அடுத்தது என்னன்னு யோசி என சொல்லிட்டே இருப்பாங்க அம்மா. சினிமா இயக்கும் வாய்ப்பின் வெகு அருகில் இருப்பதாக பலமுறை உணர்ந்திருக்கேன். அந்த உணர்வுக்கு மதிப்பு தரணும்னு நினைக்கிறேன். மீண்டும் புது மாணவனா மாறும் வாய்ப்பு. புதுசா கத்துக்கிறதுல கிடைக்கிற சந்தோஷம், வேற எதுலேயும் இல்லை.’’

‘இது ஓகே. அடுத்தது?’ என்ற கேள்வியை ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கான பதிலாக வழி மொழிகிறார் ரத்னவேல்.
(திருப்பங்கள் தொடரும்...)