கவிதைக்கார்கள் வீதி





மழலைகள்...
சாமிக்குத்தான் மொதல்ல
அப்புறம் நாம சாப்பிடலாம்
என்று குழந்தையிடம்
அம்மா சொன்னபிறகு
படையலை வெறுத்தார்
பிள்ளையார்!
 அக்னிபுத்ரன்

இயல்பு
நடுச்சாமத்தில்
நாயின் ஊளை.
பலரும் வந்தார்கள்
என் மன
மரணப்பட்டியலில்...
என் வீட்டார் தவிர!
 போடி சிவாஜி, எர்ணாகுளம்.

புலம்பல்
விற்றுவிட்ட வீட்டிலிருந்து
கடைசி பாத்திரத்தை
எடுத்துக்கொண்டு
வெளியேறியபோது
புழக்கடை மரம்
உதிர்த்த சருகுகள்,
பரிதவிப்பின் வார்த்தைகளாகவும்
இருக்கலாம்!
 வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

நிழல்
இருட்டில்
மனிதர்களின் நிழலை
மேலும் கீழுமாய்
ஊஞ்சலாட்டி விளையாடுகிறது
மெழுகுவர்த்தி!
 தஞ்சை கமருதீன், தஞ்சாவூர்.

ஓசை
பெருமழையில்
தேவாலய மணியோசை
சன்னமாகக் கேட்கிறது.
 ப.மதியழகன், மன்னார்குடி.

பரிதவிப்பு
பாதி கதை கேட்டதுமே
தூங்கிவிடுகிற குழந்தைகளால்
பரிதவித்தபடி
அந்தரத்தில் நிற்கின்றன
கதாபாத்திரங்கள்!
 நா.கி.பிரசாத், கோவை.