விஜயா டீச்சர்





வீடே நிறைந்தது போல இருந்தது. வடிவேலும் அவனுடைய பெற்றோரும் கிண்டலான குரலில் கேட்டபடி வாசலுக்கு வந்தபோதே, சுகுமாருக்கும் போன் செய்துவிட்டான் சோமு. சுகுமாரும் அவனுடைய பெற்றோரும் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிட்டார்கள்.

‘‘யாருமே எதிர்பார்க்காம இந்த கல்யாணம் நடந்திருச்சு... நீங்க எல்லாம் பொறுத்துக்கணும்...’’ என்று கைகூப்பினார் அப்பா. சொல்லும்போதே தலை தாழ்ந்து, கண்கள் பனித்தன.
‘‘இதென்ன கூத்தா இருக்கு? உங்க பையன் செய்த விஷயம் உங்களுக்கே தெரியாதுன்னா நல்லாவா இருக்கு... அது சரி, இத்தனை பொம்பளைப் புள்ளைக வீட்டுல இருக்கும்போது அப்படி என்ன அவசரம் இவனுக்கு...’’ என்றான் வடிவேல்.


‘‘என்ன மாப்பிள்ளை இப்படிச் சொல்லிட்டீங்க? நமக்கு மனசுக்கு புடிக்காத விஷயத்தை எப்படி ஏத்துக்க முடியும்னு சொல்றது உங்க பாலிசி. அதாவது, ‘மத்தவங்க என்ன நினைச்சாலும் பரவாயில்லை... எனக்குப் புடிச்சதை நான் கேட்பேன்’னு சொல்ற ஆள் நீங்க! உங்களை மாதிரியே ஆனந்தும் ஒரு விஷயத்தைப் பண்ணினா கோவிக்கிறீங்க... உங்க கேரக்டரே புரியலையே’’ என்றாள் விஜயா நமுட்டுச் சிரிப்போடு.

வடிவேலுக்கு சட்டென்று வியர்த்துவிட்டது.
‘‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லை! அக்காக்களுக்கு கல்யாணம் ஆகணுமே... அதுக்குள்ளே ஏன் அவசரப்பட்டான்னுதான் கேட்கிறேன்...’’ என்றான்.
‘‘நானும் அதைத்தான் சொல்றேன்! நம்ம ஆசைப்பட்டது கிடைக்கணும்னா, அக்காவுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் காத்திருக்கணுமா என்ன..?’’ என்றாள் மறுபடியும் சிரிப்போடு.
இதற்குமேலும் ஏதாவது பேசினால் தனது இமேஜ்தான் டேமேஜ் ஆகும் என்பது புரிந்து வடிவேலு கொஞ்சம் அசடு வழிந்தான். ‘‘நீங்க சொன்னா சரிதான்...’’ என்றான் விஜயாவைப் பார்த்து!
விஜயா திரும்பி, ‘‘உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா...’’ என்றாள் சுகுமாரைப் பார்த்து.
‘‘நீங்க எப்படி எல்லா விஷயங்களையும் சிரிச்சுக்கிட்டே டீல் பண்றீங்க..?’’ என்றான் சுகுமார்.


‘‘சந்தோஷமான விஷயங்களை சிரிச்சுக்கிட்டேதானே பேசமுடியும்! நடந்திருக்கறது ஒரு கல்யாணம்... அதுவே சந்தோஷமான விஷயம்தானே! அதை எதுக்கு வருத்தத்தோட பேசணும்? அம்மா பாயசமே வைக்கிறாங்க... சந்தோஷமா சாப்பிடலாம்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் விஜயா.
அடுத்த நாள்...
நளினியின் வீட்டுப் படியேறினாள் விஜயா. வாசலிலேயே அவளைப் பார்த்துவிட்ட நளினியின் அண்ணன் குழப்பமும் கோபமுமாக வர... அப்பா ஒரு அதட்டல் போட்டு உள்ளே அனுப்பிவிட்டு வாசலுக்கு வந்தார்.

‘‘என்ன டீச்சரம்மா... என்ன விஷயம்?’’ என்றார்.
‘‘ஐயா... நான் எதையும் நியாயப்படுத்த வரலை! உங்க பொண்ணும் என் தம்பியும் செய்தது பெரிய தப்புதான். ஆனா, இன்னொரு தப்பைச் செய்து நாம மேலும் நஷ்டப்பட்டுறக் கூடாது. ரெண்டு பேரும் ஏதோ அவசரத்தில் முடிவு எடுத்துட்டாங்க. கல்யாணம்னா என்னன்னு புரிஞ்சுக்கற வயசுகூட அவங்களுக்கு இல்லை. ஆனா எங்க வீட்டுல அவனுக்கு நாங்க போட்ட கெடுபிடியும், நளினிக்கு நீங்க செய்ய திட்டமிட்ட கல்யாணமும் அவங்களை அப்படி முடிவு செய்ய வச்சிடுச்சு!

எந்தப் பொண்ணுக்குமே அம்மா வீடு ஒரு ஆறுதலான இடம். நாங்க தங்கத் தாம்பாளத்திலேயே வச்சு தாங்கினாலும் தாய்வீடு போல வராது. அது இல்லைன்னு ஆகிடுச்சுன்னா பொம்பளை பாதி ஆளாகிடுவா... நீங்க கொஞ்சம் மனசு இரங்கி வரணும்’’ என்றாள் கைகூப்பியபடி.

‘‘எங்க வரணும்... உங்க வீட்டுல வந்து விருந்து சாப்பிட்டுட்டு மாப்பிள்ளையையும் பொண்ணையும் மறுவீடு கூட்டிட்டு வரச் சொல்றீங்களா? இல்லே டீச்சர்... எனக்கு எல்லாமே அத்துப் போச்சு. நீங்க போயிட்டு வாங்க! இந்த மனநிலையிலும் நான் இவ்வளவு தன்மையா ஏன் பேசறேன்னு எனக்கே தெரியலை. தயவுசெஞ்சு புறப்படுங்க...’’ என்று என்றார் கறாராக!
விஜயா திரும்பிய கணத்தில் நளினியின் அம்மா ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டாள்.

‘‘செல்லமா வளர்ந்த பொண்ணு! உங்களைப் பார்க்கும்போதே, உங்க வீட்டுல என் பொண்ணு கண்ணு கலங்காதுன்னு தெரியுது. இருந்தாலும் பெத்த மனசு... நீங்கதான் பார்த்துக்கிடணும்’’ என்று அழுதாள்.


‘‘அழாதீங்கம்மா! காலம் மிகப் பெரிய வாத்தியார்... எல்லாத்தையும் அவர் திருத்தி எழுதுவார். உங்க பொண்ணு உங்க வீட்டுக்கு சந்தோஷமா வருவா. நாங்க நல்லபடியா பார்த்துக்குவோம். உங்க பொண்ணாலதான் தறுதலையா திரிஞ்ச எங்க தம்பி திருந்தியிருக்கான். எல்லாம் மாறும்...’’ என்று ஆறுதலாகக் கைகளைப் பற்றிப் பேசிவிட்டு வந்தாள்.

கல்யாணம் களை கட்டியிருந்தது. நாள் பார்த்து, நேரம் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஜோடிகளோடு ஆனந்தையும் நளினியையும் நிற்க வைத்து பெரியவர்களின் ஆசீர்வாதங்களை வாங்க வைத்தாள் விஜயா.

இரண்டு கல்யாணத்தை எதிர்பார்த்து வந்த விருந்தினர்கள், மூன்று ஜோடியைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பேசினார்கள். வந்திருந்த எல்லோரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்த அப்பா, அங்கும் இங்கும் நடமாடும் விஜயாவை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

விஜயாவும் சாப்பாடு பந்திக்கும் முகூர்த்த மண்டபத்துக்குமாக ஓடிக் கொண்டேயிருந்தாள். யாரையோ வழியனுப்ப வாசலுக்கு வந்தவள், அப்படியே உறைந்து நின்று விட்டாள். ஈஸ்வரியின் மகனைத் தூக்கியபடி கலைச்செல்வன் வர, அவரோடு ஜோடியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஈஸ்வரி.

ஓடி வந்து ஈஸ்வரியின் மகனை அள்ளி முத்தமிட்ட விஜயா, ‘‘என்ன சார்... ஈஸ்வரி வீட்டுக்குப் போயிருந்தீங்களா?’’ என்றாள்.

‘‘ஆமாம்...’’ என்று கலைச்செல்வன் சொன்ன நேரத்தில் விஜயாவின் அப்பா வாசலுக்கு வந்தார். ‘‘வாங்க தம்பி’’ என்று அவரிடம் பேச ஆரம்பித்துவிட, ஈஸ்வரியை அணைத்து அழைத்து வந்தாள் விஜயா.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்குடி! இதுதான் வாழ்க்கையின் அழகு... இந்த சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் அத்தனை பெரிய துக்கத்தை நமக்குக் கொடுத்திருக்கான் இறைவன். அப்படி நினைச்சு மனசை தேத்திக்கோ’’ என்றாள் விஜயா.

‘‘அவனுக்கு இப்போ கலைச்செல்வன் சார்தான் எல்லாம்! அவர்கூட பைக்கில் போக பிரியப்படுறான். போகட்டும்னு விட்டுட்டேன். சண்டே முழுக்க அவன்
கூடத்தான் விளையாடிக்கிட்டிருந்தார். எனக்கு பெரிய நிம்மதியா இருக்கு. தம்பி கல்யாணத்துக்கு நாள் பாருங்கனு சொல்லிட்டேன்...’’ என்றாள்.
விஜயா ஏதும் சொல்லாமல் அவளையே பார்க்க, கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த ஈஸ்வரி, ‘‘ஆனா, எங்க கல்யாணத்துக்கு முன்னே நீ கல்யாணம் பண்ணிக்கணும். உன் தம்பி
வரைக்கும் உன்னை ஓவர்டேக் பண்ணிட்டுப் போறாங்க... நீ என்ன டவுன் பஸ் மாதிரி நொண்டியடிச்சுக்கிட்டு இருக்கே?’’
என்றாள்.

அதேநேரம் கோயில் பிரசாதத்தை அப்பா கையில் கொடுத்த அர்ச்சகர், ‘‘பெரியவ விஜயாவுக்கு இப்போ திசை மாற்றங்கள் இருக்கு. நம்ம தேவிபட்டினம் போய் ஒரு அர்ச்சனை பண்ணி ஸ்நானம் பண்ணிட்டு வாங்களேன். வரன் தேடி ஓடி வரும்...’’ என்றார்.
சுபவேளையில் அவர் சொன்ன வார்த்தைகள் அப்பாவை நெகிழ வைத்தன. ‘‘என் அடுத்த வேலை அதுதான்’’ என்றார்.
வீட்டையே பேக் பண்ணுவது போல எல்லா இடங்களிலும் பைகளாகக் கிடந்தன.

‘‘மாமா... நீங்க ஹனிமூனுக்கு ரூம் புக் பண்ணிய காட்டேஜில் எக்ஸ்ட்ரா ரூம் இருக்குமா..?’’ என்றான் ஆனந்த்.
‘‘முதல்ல அரியருக்கு படிச்சு அதை க்ளியர் பண்ணு... அப்புறம் ஹனிமூன் போலாம்’’ என்று அவன் காதைத் திருகினாள் ராதா.
‘‘எனக்கு ஸ்வெட்டர் வேண்டாம். நம்ம உடம்புக்கு குளிரெல்லாம் ஓடியே போயிரும்னு வீர வசனம் பேசிட்டு, குளிக்க வெந்நீர் வைக்கச் சொல்றீங்களே... நியாயமா?’’ என்று வடிவேலுவை கலாய்த்துக் கொண்டிருந்தாள் சீதா.

வடிவேலு  சீதா, சுகுமார்  ராதா ஜோடிகள் ஹனிமூனுக்காக காரைக் கிளப்ப, இந்தப் பக்கம் மற்ற குடும்பத்தினர் எல்லோரும் வேனில் ஏறினார்கள். வேன் ராமநாதபுரம் திசையில் வேகமாக விரைந்தது. தேவிபட்டினம்...

கடல் அலைகள் முத்தமிடும் கரையோரம், ஆள் மூழ்கும் அளவுக்கான நீர்ப்பரப்பில் நவக்கிரகங்கள் அலையில் குளித்துக் கொண்டிருந்தன. பலரும் நவக்கிரகங்களைச் சுற்றி முழுகி எழுந்து கொண்டிருக்க, கரையில் நின்றது விஜயாவின் குடும்பம்.

‘‘கல்யாணத் தடையா... கவலையே வேண்டாம்! இங்கே குரு பகவானை மனசுல தியானம் பண்ணிண்டு முங்கி எழுந்திருங்கோ. வீட்டுக்குப் போறதுக்குள்ளே நல்ல செய்தி வரும்’’ என்று அர்ச்சகர் சொல்ல, மெதுவாகத் தண்ணீரில் இறங்கிய விஜயா, விரக்திச் சிரிப்போடு முங்கி எழுந்தாள்.

குரு பகவான் தன் பார்வையை அவள் பக்கம் திருப்புவார் என்ற நம்பிக்கை அவளுடைய குடும்பத்தினருக்கு நிறையவே இருந்தது. விஜயாவின் திருமணம் இனி தடைபடாமல் நடந்துவிடும் என்ற நம்பிக்கையோடு, மூத்தவளின் திருமணத்துக்காக அந்தக் குடும்பம் ஆவலாகக் காத்திருக்கத் தொடங்கியது.
(மீண்டும் சந்திப்போம்!)
படங்கள்: புதூர் சரவணன்