கூழாங்கல் அழகில் குவிக்கலாம் லாபம்





சென்னை, அசோக் நகரில் உள்ள பார்வதியின் வீட்டை அலங்கரிக்கிற போட்டோ ஃபிரேம், பூங்கொத்து, டேபிள் வெயிட், வால் ஹேங்கிங் எல்லாமே கூழாங்கற்களால் செய்யப்பட்டவையாம்! தொட்டுப் பார்த்தால்தான் நம்ப முடிகிறது. கடற்கரை மணலில் கூழாங்கற்களைப் பார்த்தால், நின்று ரசிக்கக் கூடத் தோன்றாது நமக்கெல்லாம். ஆனால் பார்வதியின் கைவண்ணத்தில் ஒவ்வொரு கல்லும், ஒரு கலை வடிவம் பெறுகிறது.

‘‘டி.எஃப்.ஏ முடிச்சிருக்கேன். சின்ன வயசுலேருந்தே எதையும் வேஸ்ட்னு தூக்கிப் போட மாட்டேன். ஒரு இடத்துல நிறைய கூழாங்கல் கொட்டிக் கிடந்தது. அதுல ஒரு கல் மட்டும் எனக்கு வித்யாசமா தெரிஞ்சது. அந்தக் குவியல்லேருந்து நாலஞ்சு கல்லை சேர்த்து வச்சுப் பார்த்தப்ப, ஒரு மனித உருவம் கிடைச்சது. அப்படி உருவானதுதான் இந்த ஐடியா. இன்னிக்கு எந்தக் கல்லைக் கொடுத்தாலும், அதுல என்னால ஏதாவது ஒரு வடிவத்தைக் கொண்டு வந்துட முடியும்’’ என்கிற பார்வதி, ‘‘கூழாங்கற்களில் செய்யும் கலைப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பும் அதிகம்’’ என்கிறார்.

என்னென்ன தேவை?
முதலீடு?
‘‘கலர் கலரான, விதம்விதமான வடிவம் மற்றும் அளவுகளில் கூழாங்கற்கள். அழகு மீன்கள் விற்பனை செய்கிற அக்வேரியம் கடைகளில் இவை கிடைக்கும். இது தவிர, மார்பிள் சிப்ஸ், கார்ட்போர்டு, ஃபேப்ரிக் பெயின்ட், பிரஷ், பசை, வார்னிஷ் மற்றும் அலங்கரிக்க விருப்பமான பொருள்கள். கூழாங்கற்கள் அளவைப் பொறுத்து 1 பாக்கெட் 30 ரூபாயிலிருந்து கிடைக்கும். மற்ற பொருட்களுக்கும் சேர்த்து மொத்த முதலீடு 300 ரூபாய்.’’

என்னென்ன செய்யலாம்? என்ன ஸ்பெஷல்?
‘‘கூழாங்கல் பொருள்களில் பேப்பர் வெயிட்தான் பிரபலம். பூ ஜாடி, போட்டோ ஃபிரேம், குட்டிக் குட்டி பொம்மைகள், கிரீட்டிங் கார்டு... இப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நமக்குக் கிடைக்கிற கல்லின் வடிவத்தைப் பொறுத்து, டிசைனை முடிவு செய்து கொள்ளலாம். கம்பெனி பெயர் மற்றும் லோகோவுடன் டிசைன் செய்து கொடுக்கும் பேப்பர் வெயிட்டுகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘ஒரு பாக்கெட்டில் 10 கற்கள் இருக்கும். பேப்பர் வெயிட் என்றால் பத்திலும் செய்யலாம். ஒரு பேப்பர் வெயிட்டை 50 ரூபாய்க்கு விற்கலாம். ஒரு நாளைக்கு 15 பேப்பர் வெயிட் டிசைன் பண்ணலாம். மற்ற பொருட்களின் விலையை, அவற்றின் டிசைன் மற்றும் அளவைப் பொறுத்து நிர்ணயம் செய்யலாம். ஸ்டேஷனரி கடைகள், கிஃப்ட் விற்பனையாகிற கடைகள், கண்காட்சிகளில் கொடுக்கலாம். 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சியில் 5 பொருள்கள் கற்றுக் கொள்ள, தேவையான பொருள்களுடன் சேர்த்துக் கட்டணம் ரூ. 500
 ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்