ஒரு கல் ஓரு கண்ணாடி விமர்சனம்





கல்லான பெண்ணைக் காதலித்துக் கனிய வைக்கும் ‘ரொமான்ஸிங் தி ஸ்டோன்’ பாணிக் கதைதான். ஏற்கனவே இரண்டுமுறை திருப்பிப் போடப்பட்ட தோசையாக இருந்தாலும் மூன்றாவது முறையும் திருப்பிப் போட்டு ரசிக்கவும் ருசிக்கவும் செய்திருப்பது இயக்குநர் ராஜேஷின் தைரியம். இந்தப்படத்தில் ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ ஆகியிருப்பது ஹீரோ உதயநிதி ஸ்டாலின். தோற்றத்தில் இன்றைய இளம் ஹீரோக்களுக்கு சளைக்காமல் தெரிபவர், அநியாயக்காரர்களைக் கண்டால் தூக்கிப்போட்டு உதைக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ க்ளிஷே ஹீரோவாகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமல், கண்ணுக்குப் பிடித்தவளைக் காதலிக்க ஏங்கும் ‘லட்சத்தில் ஒருவனாக’ இயல்பான கேரக்டரில் பொருந்தி ரசிக்க வைக்கிறார். அவரை வெறுப்பேற்ற அவர் கண்ணெதிரேயே ஒரு இளைஞனிடம் கடலை போடும் ஹன்சிகாவின் செயலைக் கண்டு வருந்துவதிலும், அந்த இளைஞன் ஹன்சிகாவை கடுப்பேற்றிவிட்டுச் செல்ல, சுற்றுப்புறம் மறந்து குத்துப்போடுவதிலும் இன்னுமொரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளப்படுகிறார். மதுபாட்டிலை முகர்ந்து பார்த்தே போதையேற்றிக் கொள்ளும் அவரது கேரக்டரைசேஷன் சினிமாவில் ‘புது சரக்கு’.

ஒரு ஹீரோவுக்குண்டான பில்டப்புடன் அறிமுகமாகும் சந்தானம் திரையில் வந்தவுடனேயே கைதட்டல்கள் தியேட்டரை நிறைக்கின்றன. ஹன்சிகாவின் வீட்டைக் கண்டுபிடித்து அதனெதிரே இருக்கும் டீக்கடையில் நிற்கும் உதயநிதியைப் பார்த்து, ‘‘இந்த டீக்கடை அதுவே இருந்ததா, இல்லை நீ போட்டியா..?’’ என்று விசாரிக்கும் லாவகத்திலிருந்து, ‘‘ராணுவத்தில செத்தவனை விட ஆணவத்துல செத்தவன்தான் அதிகம்...’’ என்று பஞ்ச் வைப்பது வரை படம் நெடுக சந்தானத்தின் ராஜ்ஜியம்தான். சரக்குடன் தண்ணீரைக் கலந்து உள்ளே தள்ள உதவும் பிளாஸ்டிக் டம்ளர் குப்பைக்குப் போய்ச் சேருவதைக் காட்டி அவர் சொல்லும் ‘லைஃப் லாஜிக்’கை காதலுக்கு உதவும் நண்பர்கள் பொன்னேடுகளில் பொறித்துக் கொள்ளலாம். விமானத்தில் ஏறி உதயநிதியும், சந்தானமும் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் வேலை பார்க்கும் பெண்ணிடம் கிங்ஃபிஷர் பியர் பற்றி சந்தானம் கம்ப்ளைன்ட் செய்வது உச்சகட்ட காமெடி.

கிர்ணிப்பழத்துக்கு வெண்ணெய் மேக்கப் போட்டதுபோல உருண்டு திரண்டு கண்களைக் கவர்கிறார் ஹன்சிகா. சிரித்தாலும் அழுதாலும் சிலிர்க்க வைக்கும் ஹன்ஷ், அதைத் தாண்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே போகிறது. உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் ரசிக்க வைக்கிறார். ஹன்சிகாவை உதயநிதி பார்க்கும் முதல் காட்சியிலேயே அவருடன் பைக்கில் அமர்ந்து வரும் சரண்யாவும் பார்க்கிறார். முதல் பார்வையிலேயே உதயநிதி காதலில் விழ, தன் பங்குக்கு சரண்யாவும் ‘‘இந்தமாதிரி பொண்ணதாண்டா உனக்குக் கட்டிவைக்கணும்னு இருக்கேன்...’’ என்பதோடு, அவரது காதலுக்கு வழிவிட்டு பைக்கில் இருந்து இறங்கி ஆட்டோ பிடித்துச் செல்வதில் ‘அட்டகாச அம்மா’வாகி விடுகிறார். அப்பாவியான சரண்யாவைப் புரிந்து கொள்ளாமல் ‘பொய் சொல்லித் தன்னைத் திருமணம் செய்து கொண்டதாக’க்கூறி அவர் கணவர் அழகம்பெருமாள் இருபது வருடங்களாக அவருடன் பேசாமலிருப்பது ஒட்டாத விஷயம். ஒரு காட்சியில் வந்தாலும் ‘உளுந்தூர்பேட்டை உலகானந்தா’ சாமிநாதன் கலக்குகிறார். ஒரு சாதாரண கதையை பிரமாண்டப் படமாக உணரவைத்திருப்பதில் இசையமைப்பாளர் ஹாரிஸுக்கும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெமுக்கும் பங்குண்டு. இருவரும் சேர்ந்து ஜோர்டான் பாடல் காட்சிகளில் பின்னியெடுத்திருக்கிறார்கள். அங்கங்கே ஓரிரு சீன்களில் வரும் சினேகா, ஆர்யா, ஆன்ட்ரியாவும் இது பெரிய படம்தான் என்று நம்ப வைக்கிறார்கள். கவலைகளை மறந்து சிரித்துவிட்டு வரலாம் - சென்டிமென்ட்டோ, லாஜிக்கோ, ஆக்ஷனோ ஒரு துளியும் இல்லையே போன்ற கவலைகளையும் கூட!
- குங்குமம் விமர்சனக்குழு