நியூஸ் வே





எல்லோரையும் திட்டியே பாப்புலரான நடிகை ராக்கி சாவந்த் சமீபத்தில் திட்டியது தனுஷை. ஒரு நிகழ்ச்சியில் தன்னோடு ஆட ஒப்புக்கொண்டு, கடைசி நேரத்தில் வராமல் போனதால் கோபித்துக் கொண்டு தனுஷைத் திட்டினார். ‘‘என்னோடு ஆடுவதற்கு அவருக்கு பயம். நான் நன்றாக ஆடி அவரை டாமினேட் செய்துவிடுவேன் என தனுஷ் பயந்தார்’’ என்றெல்லாம் சொன்ன ராக்கி, இப்போது தனுஷை மன்னித்து விட்டாராம். ‘‘தனுஷையும் ரஜினியையும் நான் ரொம்பவே நேசிக்கிறேன். இன்னொருமுறை வருவதாக தனுஷ் ஒப்புக் கொண்டிருக்கிறார். பிஸியா இருக்கார் பாவம்’’ என்கிறார் ராக்கி.

சென்னை வெயிலைத் தாங்கிக்கொண்டு கிரிக்கெட் ஆட வரும் ஐ.பி.எல். வீரர்கள் மத்தியில் படு ஹிட் ஆகியிருக்கிறது இளநீர் பாயசம். சச்சின், டோனி, ஹர்பஜன் என இந்திய வீரர்கள் எல்லோரும் தாஜ் ஓட்டலில் டம்ளர் டம்ளராக கேட்டு வாங்கிக் குடித்து தாகத்தை தணித்துக் கொள்கிறார்கள்.

ஐ.நா. அகதிகள் மறுவாழ்வு ஏஜென்சியின் சிறப்புத் தூதர் ஆகியிருக்கிறார் நடிகை ஏஞ்சலினா ஜோலி. 10 ஆண்டுகளாக நல்லெண்ணத் தூதராக இருந்து, உலகெங்கும் பயணம் செய்து அகதிகளுக்கு உதவிய அவருக்கு இப்போது இந்த சிறப்பு அந்தஸ்து தரப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அரசு தூதர்கள் போன்றவர்களுக்கே தரப்படும் இந்த அந்தஸ்தை அடையும் முதல் நட்சத்திரம் ஏஞ்சலினா.

கேட்டி பெர்ரியை நினைவிருக்கிறதா? ஐ.பி.எல். துவக்க விழாவுக்காக சென்னை வந்து ஆடிய அமெரிக்கப் பாடகி. எப்போதும் தலைக்கு பச்சை கலரில் ‘டை’ அடித்துக் கொள்வதால் முடி வீணாகிறதாம். அதனால் பச்சை கலரில் ‘விக்’ வாங்கி இப்போது அணிகிறார்.

‘ஹாரி பாட்டர்’ வேடத்தில் நடித்து கோடிகளில் சம்பாதித்த டேனியல் ரேட்கிளிஃபுக்கு பெரிய பிரச்னை. சம்பாதித்த பணத்தை எப்படி செலவழிப்பது என்று புரியவில்லையாம். யாராவது சொல்லிக் கொடுங்களேன்!