‘‘இன்னா மாமா... சௌக்கியமா?’’காலரை இழுத்து மேலே விட்டுக்கொண்டு, உதட்டோரப் புன்னகையோடு மதுரைத் தமிழில் நக்கல் தொனியில் ‘பருத்திவீரன்’ பட வசனத்தைச் சொல்கிறார் கார்த்தி. மேடைகளில் ரசிகர்களின் விருப்பத்திற்காக அவர் இந்த வசனத்தை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் விசில் சத்தம் பறக்கிறது. அமெரிக்காவில் எம்.எஸ். முடித்தவர் என்பதை சான்றிதழ் காட்டினால்கூட நம்புவது கடினம். க்ளீன் ஷேவ் செய்து, ‘டை’ கட்டினால் கார்ப்பரேட் எக்ஸிகியூட்டிவாக காட்சி தருகிறார். வெள்ளித்திரையில் ‘மாஸ் ப்ளஸ் க்ளாஸ்’ என்பது கார்த்தியின் தனித்துவ அடையாளமாகியிருக்கிறது. படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் பிடித்த ஒருவராக இருப்பதில் பரவசம் தெரிகிறது.
‘‘பிடிச்ச ஒரு வேலையைச் செய்யறதுக்கு முன்னால, பிடிக்காத வேலையை கொஞ்ச நாள் செஞ்சுட்டு வர்றது நல்லது. மனசுக்குப் பிடிக்காத வேலையைச் செய்யும்போது, ஒவ்வொரு நாளும் எவ்வளவு நீளமானதுன்னு புரியும். பிடிச்ச வேலையை முதல்ல இருந்து செஞ்சா நூறு சதவீத ஈடுபாடு காட்டமுடியும்னா, பிடிக்காத வேலையைக் கொஞ்ச நாள் செஞ்சுட்டு அப்புறம் பிடிச்ச வேலைக்கு வந்தா 200 சதவீத ஈடுபாடு காட்ட முடியும்ங்கறது என் அனுபவம்.
சினிமா 1 சதவீதம் ஜெயிக்கிறதுக்கும், 99 சதவீதம் தோக்கறதுக்கும் வாய்ப்பு இருக்கிற தொழில்னு மனசுல ஆழமா பதிஞ்சிருந்தது. அதனால, ‘எது நடந்தாலும் பரவாயில்லை... நான் சினிமாவுக்கு வர்றேன்’னு ஆரம்பத்தில் உறுதியா சொல்ல முடியலை. ‘நடிகனாயிடணும்’னு சும்மா ஜாலியா கூட நினைச்சதில்லை. 21 வயசுல வாழ்க்கையில என்ன ஆகப்போறோம்னு தெரியாம இருக்கிறதுதான் ரொம்ப சோகமான விஷயம். கேட்டாதான் எதுவும் கிடைக்கும்ங்கிறதே தெரியாதபோது, எப்படி கேட்கணும்னு மட்டும் தெரிஞ்சுடவா போகுது? இத்தனைக்கும், கேட்கிறது நியாயமா இருந்தா எங்க வீட்ல சுலபமா கிடைக்கும்.
அப்பா தெளிவா ஒரு விஷயம் சொன்னார்... ‘சினிமாவுக்குதான் வரணும்னு நினைச்சா, இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வா. வெளிநாட்டுக்குப் போய் படிக்கிற வாய்ப்பு ஆயிரத்துல ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். உனக்குக் கிடைச்சிருக்கு. போய்ப் படி. அனுபவத்தைத் தொலைச்சிடாத’ன்னு அவர் சொன்னது சரின்னு தோணுச்சு. சினிமா கனவை உள்ளுக்குள்ளேயே வச்சிக்கிட்டு, வெளிநாட்டில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு எழுதத் தயாரானேன். அப்படியே, சென்னையில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தேன். 4,300 ரூபாய் மாத சம்பளம். ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்கிறதுக்கும் எவ்ளோ கஷ்டப்படணும், எத்தனை பேருக்கு பதில் சொல்லணும்னு அப்பதான் தெரிய ஆரம்பிச்சது. ‘எனக்கு இது எதுவும் வேண்டாம். என்னை சினிமாவுல விட்டுடுங்க. நான் ஏதாவது பண்றேன்’னு சத்தமா கத்தணும்னு அப்பப்ப தோணும். போலீஸ் கழுத்து மேல கைவச்சு தள்ளிட்டுப் போற மாதிரி, சூழ்நிலை தள்ளிட்டுப் போகும்போது அடக்கமா போறதைத் தவிர வேற வழி இல்லை.
இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங் என் துறை. 100 பேர் சேர்ந்து ஒரு நாளைக்கு எவ்ளோ உற்பத்தி செய்ய முடியுதோ, அதைவிட அதிகமா எப்படி உற்பத்தி செய்யலாம்னு கண்டுபிடிக்கணும். 100 பேர் சேர்ந்து 1000 சட்டைகள் தைக்கிறதா இருந்தால், அதை 2000 சட்டைகளா மாத்துறதுக்கு வழியை யோசிக்கணும். கார்மெண்ட்ஸ் ஃபேக்டரியில ஏழைப் பெண்களோடு வேலை செய்த அனுபவம் வாழ்க்கையில் மறக்க முடியாதது. 10 மணி நேரத்துக்கும் அதிகமா வேலை செய்கிற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும், அவங்க வேலைக்கு வந்தே தீர வேண்டிய ஒரு காரணம் இருக்கும். படிப்பைப் பாதியில் நிறுத்திட்டு, தம்பியைப் படிக்க வைக்க வேலைக்கு வந்த அக்காவைப் பார்த்திருக்கேன். வயசான அப்பாவுக்கு பாரம் ஆகிடாம, தன்னுடைய கல்யாண செலவுக்கு பணம் சேர்க்க 30 வயசுக்கும் மேல வேலை செய்யுறவங்க இருந்தாங்க. அந்தப் பெண்கள்கிட்டேதான், ‘வீட்டுக்கு எப்படி உபயோகமா இருக்கணும்’னு கத்துக்கணும்.
சாதாரண மக்களின் சைக்காலஜி சினிமாவுக்கு ரொம்ப அவசியம். அவங்க எதை ரசிப்பாங்க; எதை ஏத்துக்க மாட்டாங்க; யார்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாங்கன்னு புரிஞ்சிக்காம சினிமாவில ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். வேலை பார்த்த அனுபவத்தில், ஓரளவு மக்களோட ரசனையைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஒரு பக்கம் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கான படிப்பு, இன்னொரு பக்கம் ஃபேக்டரி வேலைன்னு பிஸியா இருந்தாலும், சினிமா பார்க்கிறதும், அதைப் பற்றி பேசுறதும் குறையவே இல்லை. எஞ்சினியரிங் மாணவர்களின் கனவு பூமியான அமெரிக்காவில் எம்.எஸ் படிக்க இடம் கிடைச்சது. படிப்பு முடிஞ்சு, அங்கே ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டா அப்புறம் இந்தியா திரும்ப மனசு வராது. பணம், ‘சினிமா ஆசையில் பையன் சொல்றான். அமெரிக்கா போய் அங்க புது வாழ்க்கையைப் பார்த்துட்டா எல்லாம் மறந்து போகும்’னு வீட்ல நினைச்சிருக்கலாம்.
சினிமாவுக்குத்தான் வரணும்னு அண்ணனும் நினைக்கலை. வேலை செஞ்சிட்டிருந்தவரை, நடிக்க அனுப்பச் சொல்லி நிறைய இயக்குனர்கள் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. வசந்த் சார் இயக்கத்தில், மணிரத்னம் சார் தயாரிப்பில் ஒரு வாய்ப்பு வரும்போது நம்பி அனுப்பினாங்க. அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு வருமான்னு தெரியலை. ‘என்ன ஆனாலும் படிப்பு முடிச்சிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிடணும்’னு மனசுக்குள்ள உறுதி எடுத்துக்கிட்டுதான் அமெரிக்கா கிளம்பினேன். முற்றிலும் புதிய வாழ்க்கை. வீட்டின் பாதுகாப்பில் இருந்தவனுக்கு முதன்முதலாக யாரும் இல்லாமல் தன்னந்தனியாக வாழ்கிற அனுபவம் லேசான பயத்தைத் தந்தது. உணவு, வெயில், குளிர், தண்ணீர் எல்லாமே புதுசு. வீட்டைவிட்டு தள்ளி, யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்கிற அனுபவம் எல்லாருக்கும் கிடைச்சா நல்லா இருக்கும். நம்முடைய பலம், பலவீனம் எல்லாமே தெரியும். எல்லாரும்கூட இருக்கிறப்ப தப்பு பண்ண வர்ற தைரியம், யாரும் இல்லாதபோது வர்றது இல்லை.
தமிழ்நாட்டுக்குள்ள இருந்து வர்ற பசங்களோடவே போட்டி போட கஷ்டப்படும்போது, உலகத்தின் எல்லா திசையிலிருந்தும் வந்து படிக்கிற பசங்களோடு போட்டி போடணும். மீண்டும் ஆவரேஜ் வாழ்க்கை. ரங்கராட்டினத்துல அளவுக்கதிகமா சுத்திட்டு கீழே இறங்கினதுக்கு அப்புறமும் தலைக்குள்ள ஒரு ரங்கராட்டினம் சுத்தும். அதே மாதிரி இருந்துச்சு. எடுத்துக்கிட்ட ஒரு துறையில் கத்துக்க எவ்ளோ இருக்கு என்பதும், அடிப்படையை மட்டுமே தெரிஞ்சிக்கிட்டு அதுவே போதும்னு கத்துக்காம இருந்துடுறோம்ங்கிறதும் புரிஞ்சது. அசோக்ங்கிற நண்பன் என்கூட படிச்சான். சோர்ந்து உட்காரும்போதெல்லாம், ‘கிளம்பு... கிளம்பு... இன்னும் ரொம்ப தூரம் போகணும்’னு அவன் ஞாபகப்படுத்தினதை மறக்கவே முடியாது. தெரியலைன்னா தேடித் தேடிப்போய் கத்துக்கிற அவனுடைய பழக்கம் எனக்கும் வந்தது. தெரியலையேங்கிற தாழ்வு மனப்பான்மையை தொலைச்சுட்டு, ‘தெரிஞ்சிக்கிட்டா போச்சு’ன்னு உற்சாகமாகறதுக்கு சொல்லிக் கொடுத்தான். நம்முடைய செயல்களை நாமளே சுயவிமர்சனம் செஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம்னு சொல்லுவான். என்ன பண்ணாலும், அதை நானே சுயவிமர்சனம் செஞ்சுக்கிட்டது இல்லை. அமெரிக்காவில் படிக்கும்போது அடிக்கடி பண்ணிக்குவேன்.
மில்லினியம் ஆண்டு கொண்டாட்டத்துக்குப் பிறகும், உலகம் ‘ரெசஷன்’ என்கிற வார்த்தையை அதிகம் கேட்க ஆரம்பிச்சபோதும் நான் அங்க படிச்சிட்டிருக்கேன். சொர்க்க பூமி நரகமா மாறி, யாருக்கும் நம்பிக்கை தராம இருந்துச்சு. கடன் மக்களை வீதியில் நிறுத்தி வேடிக்கை பார்த்ததை கண்ணால பார்த்தேன். நன்றாகப் படித்து, நல்ல திறமையோடு இருந்தால் மட்டுமே வேலை கிடைக்கும்ங்கறது நிதர்சனமா தெரிந்தது. உழைக்க உழைக்க... மத்தவங்க பார்வை என் மேல பட ஆரம்பிச்சது.
அமெரிக்காவுல மறக்க முடியாத இன்னொருத்தர் சரோஜா அக்கா. வீட்டு சாப்பாடு சாப்பிடணும்னு அவங்க வீட்டுக்குப் போயிடுவேன். சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு அவங்க அக்கறையில் வெளிப்படும். அடிக்கடி சினிமா பத்தி பேசிக்கிட்டே இருப்பேன். ஹாலிவுட்ல எந்தப்படம் வந்தாலும் முதல் நாளே பார்க்கத் துடிக்கிற என் ஆர்வத்தைப் பலமுறை கவனிச்சிருக்காங்க. ‘இவ்ளோ ஆசையை வச்சிக்கிட்டு இங்க வந்து ஏண்டா குப்பை கொட்டிக்கிட்டிருக்க’ன்னு அடிக்கடி கேட்பாங்க. அவங்க சிபாரிசுல பெரிய நிறுவனத்தில் எனக்கு ஒரு நல்ல ப்ராஜெக்ட் கிடைச்சது. அவங்க வேலைபார்க்கிற கம்பெனிங்கிறதால கிடைச்ச வாய்ப்பு அது. இன்னொருத்தர் சிபாரிசுல எது கிடைச்சாலும் அது ரெண்டு பொறுப்புன்னு அப்பதான் புரிஞ்சது. நான் ப்ராஜெக்ட் முடிச்சிக் கொடுத்ததும், உடனே ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. ‘இந்த மாதிரி பையனுக்கு ஏன் ரெகமெண்ட் பண்ணீங்க’ன்னு அவங்கள கூப்பிட்டு கண்டிப்பா திட்டியிருப்பாங்க. ‘பிடிச்ச விஷயத்தை விட்டுட்டு, பிடிக்காததை பண்ணா இப்படித்தாண்டா ஆகும்’னு அக்கா விட்ட டோஸ், என் மனசுல பெரிய ஸ்கிரீன் கட்டி பல நாள் ஓடுச்சு. ப்ராஜெக்ட்ல தோத்தது, ஜெயிச்சதைப் பத்தி அவங்க பேசவே இல்லை. ‘இழப்பு எதுவா இருந்தாலும், புடிச்ச வேலையைச் செய்’னு அவங்க சொன்னது சுளீர்னு உறைச்சது. ‘அமெரிக்காவுல ஆணி புடுங்கனது போதும். இனிமே சினிமா...’ன்னு முடிவெடுத்த நேரத்துல, ‘பெங்களூருலயே வேலை.. ஒன்றரை லட்ச ரூபாய் மாத சம்பளம். கார், வீடு எல்லாம் கம்பெனியே குடுத்துடும்’னு அடுத்த வாய்ப்பு வாசலுக்கு வந்தது. ‘நீ கட்டாயம் இதைத்தான் பண்ணணும்’னு கண்டிப்பா இருந்துட்டா, எதை வேணும்னாலும் செய்யலாம். ‘உனக்கு நாலு சாய்ஸ்.. அதுல சரியான ஒண்ணைத் தேர்ந்தெடு’ன்னு சொல்லும்போதுதான் மனசு தாறுமாறா யோசிச்சு, வாழ்க்கையைத் தடம்புரள
வைக்கும்.
(திருப்பங்கள் தொடரும்...)