முடிவு





‘‘பொண்ணு பிடிச்சிருக்கு... இருபது பவுன் நகை. இருபதாயிரம் ரொக்கம். கல்யாணச் செலவு முழுக்க உங்களுடையது. இதுக்கெல்லாம் சம்மதம்னா போன் பண்ணுங்க...’’ என்று சொல்லிவிட்டு மாப்பிள்ளை வீட்டார் கிளம்பினார்கள்.

வளர்மதியின் தந்தை முகம் இருண்டு விட்டது. அவர் பத்து பவுன், பத்தாயிரம் ரொக்கம், பாதி கல்யாணச் செலவு என்றுதான் கணக்குப் போட்டு வைத்திருந்தார். இது அவர் நினைப்புக்கு இன்னொரு மடங்கல்லவா!

மாப்பிள்ளை வீட்டாரின் கறார் பேச்சைக் கேட்டதுமே அறைக்குள்ளிருந்த வளர்மதிக்கு புரிந்துவிட்டது. இந்த சம்பந்தமும் அவ்வளவுதான்! இதோடு பதினைந்து மாப்பிள்ளைகள் வந்து பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். எல்லா இடமும் நகை, பணம் விஷயத்தில் அடிபட்டுப் போய்விட்டன. பத்து பவுனுக்கும் பத்தாயிரம் ரொக்கத்துக்கும் ஒப்புக்கொள்கிற மாப்பிள்ளைக்காக காத்திருந்தபடியே இன்னும் எத்தனை காலம்தான் பெற்றோருக்கு பாரமாய் இருப்பது?

வளர்மதி கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டபோது கையிலிருந்த செல்போன் அலறியது.

‘‘வளர்மதி, நான் மகேஷ் பேசறேன். ஒரு வருஷமா நானும் எப்படி எப்படியோ என் காதலைச் சொல்லிட்டேன். நீ ஏத்துக்கல. கடைசியா இன்னிக்கு உன் முடிவைச் சொல்றேன்னு சொன்னியே... சொல்லு, என்ன உன் முடிவு?’’
‘‘ஐ டூ லவ் யூ’’ என்றாள் வளர்மதி.