வித்தியாசம்
‘‘அம்மா, நேத்து ராத்திரி நான் வேலை செய்யற ஓட்டல்ல, ஒரு கண்ணாடி கிளாஸை கை தவறி கீழே போட்டு உடைச்சுட்டேன். முதலாளி லேசா கடிஞ்சுக்கிட்டார்!’’ - வருத்தமாக இதைச் சொல்லிவிட்டு கல்லூரிக்குக் கிளம்பத் தயாரானான் ராஜேந்திரன்.
‘‘இதுக்கு முன்னால வேலை செஞ்ச இடத்துலயும் இதே மாதிரி கண்ணாடி டம்ளர் உடைஞ்சது... முதலாளி திட்டினார்னுதான் வேலையை விட்டு நின்னே. இப்போ இங்கேயுமா? சரி, விடுடா... இன்னும் ரெண்டு வீட்டுல வேலை செஞ்சு நான் உன்னைப் படிக்க வைக்கறேன். நீ பார்ட் டைம் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்...’’ - பரிவுடன் பேசினாள் அம்மா.
‘‘இல்லம்மா, ரெண்டு முதலாளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. முந்தைய முதலாளி, கண்ணாடி டம்ளர் உடைஞ்சதும் ‘புதுசுடா... என்ன விலை தெரியுமா?’னு அவர் லாபத்தை மட்டுமே மனசுல வச்சுக்கிட்டுப் பேசினார். ஆனா இந்த முதலாளி, ‘கண்ணாடியாச்சே... கவனமா எடுக்க வேண்டாமா? அது உடைஞ்சு கையில, கால்ல பட்டுருச்சுன்னா என்னடா பண்ணுவே’ன்னு என் மேலயும் அக்கறை எடுத்துத் திட்டினார். அதனால நான் இந்த வேலையை விடப் போறதில்ல!’’ என்று சொன்ன மகனின் கைகளில் அம்மாவின் கண்ணீர்த் துளிகள் சிந்திச் சிதறின.
|