இளங்கோ பேசத் தேவையில்லை. மேடையில் நின்றாலே போதும்... பார்ப்போர் மத்தியில் உற்சாகம் பொங்கும். பாட்டும் பேச்சுமாக அவர்களின் ஆழ்மனக் கனவுகளைக் கிளறிவிட்டு, தன்னம்பிக்கையை ஊற்றெடுக்கச் செய்வார். 300 பயிற்சியாளர்களைக் கொண்ட ஒரு திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்குத் தலைவர். ஆண்டுக்கு 1 லட்சம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சியும், நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு தனித்திறன், நிர்வாகத்திறன் பயிற்சியும் வழங்குகிறார். ஆங்கில மொழியை இலகுவாகக் கற்றுக்கொள்ள இவர் தயாரித்த பாடத் திட்டம், மொழியியலில் ஒரு வேதமாக கொண்டாடப்படுகிறது.
இளங்கோ தமிழகத்தின் முன்னணி ‘வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்’டும் கூட! ஆயிரம் விளம்பரங்களுக்கு மேல் குரல் கொடுத்தவர். பல்லாயிரம் மேடைகள் கண்ட பாடகர். சராசரி மனிதர்களுக்கே சாத்தியமில்லாத இத்தனை சாதனைகளையும் களைப்பும், மலைப்பும் இன்றி செய்துகொண்டிருக்கும் இளங்கோ பார்வையற்றவர். அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த இளங்கோவின் அப்பா நடராஜ். அம்மா, அம்சம். அடித்தட்டுக் குடும்பம். ‘‘அப்பாவும் அம்மாவும் நெருங்கிய உறவுக்காரங்க. ரத்தபந்தத்தில கல்யாணம் பண்ணிக்கிட்டா, அது குழந்தைகளைப் பாதிக்கும்னு சொல்லித்தர அப்போ யாருமில்லை. அக்காவுக்காவது ஓரளவுக்கு கண் தெரியும். நான் ஒளியில்லாமதான் பிறந்தேன். இப்படியொரு நெருக்கடியான சூழல்ல, அம்மாவ விட்டுட்டு வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார் அப்பா. பார்வையில்லாத ரெண்டு பிள்ளைகளை கையில வச்சுக்கிட்டு அம்மா தவிச்சுப் போய் நின்னுச்சு. இப்போ நினைச்சாலும் அழுகை வருது’’ - நெகிழ்ந்து பேசுகிறார் இளங்கோ.
‘‘பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில சேந்தபிறகு தனிமை தகர்ந்து போச்சு. உணர்வை வெளிப்படுத்த பிரெயில் மொழி கிடைச்சுச்சு. 5ம் வகுப்பு வரைக்கும் அங்க படிச்சேன். அதன்பிறகு தூய லூர்து பார்வையற்றோர் பள்ளியில! கூடுதல் பாடமா கர்நாடிக் மியூசிக் எடுத்துப் படிச்சேன். ஹார்மோனியம், கீ போர்டும் கத்துக்கிட்டேன். அம்மா ரொம்ப கடுமையா நடந்துக்குவாங்க. சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினாலும் கொட்டுவாங்க. குளிச்சுட்டு ஒழுங்கா உடம்பு துடைக்காம வந்தா அடிப்பாங்க. ‘கழுதை மாதிரி வயசாகுது... சரியா குளிக்கத் தெரியலை’ன்னு திட்டுவாங்க. நடக்கும்போது குச்சி பிடிச்சு நடக்கக்கூடாது. தடுமாறாம நடக்கணும். பாக்கிறவங்க, ‘கண்ணு தெரியாத பிள்ளைகளை ஏன் இப்படி கொடுமைப்படுத்துற’ன்னு கேப்பாங்க. ‘உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போங்க’ன்னு அவங்களையும் திட்டுவாங்க.
அதெல்லாம் ஏன்னு இப்பதான் புத்திக்கு உறைக்குது. யார் உதவியும் இல்லாம பரபரப்பான சாலைகள்ல கூட தனியாளா என்னால நடந்து வரமுடியுதுன்னா அம்மா அன்னைக்கு கிள்ளினதுதான் காரணம். பார்வை தெரியலைங்கிறதை ஒரு உரிமையா எடுத்துக்கிட்டு, மத்தவங்களை சார்ந்து வாழப் பழகிடக்கூடாதேங்கிற கவலை அம்மாவுக்கு...’’ - கண்கலங்குகிறது இளங்கோவுக்கு.
‘‘இந்த இருட்டு உலகத்தில வாழறதுக்கு தற்கொலை செஞ்சுக்கிட்டு செத்துடலாமான்னு பல தடவை தோணியிருக்கு. ஆனா சில நிமிடங்கள்ல அந்த எண்ணத்தை மாத்திக்குவேன். எல்லா படைப்புகளுக்குப் பின்னாடியும் ஒரு காரணம் இருக்கும். என்னைப் படைச்சதுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கத்தானே செய்யும். இயற்கையை மீறி நாம ஏன் சாகணும்னு நினைப்பேன். அந்த நேரங்கள்ல எனக்கு உற்ற நண்பனா இருந்தது ரேடியோதான். நம்பிக்கை தரக்கூடிய பாடல்களைக் கேப்பேன். பிபிசியில வர்ற ஆங்கில உரையாடல்களை விரும்பிக் கேட்பேன். என்ன பேசுறாங்கன்னு புரியாது. ஆனா அவங்க பேசுற லாவகம் ரசிக்கும்படியா இருக்கும்...’’ - சிரிக்கிறார் இளங்கோ.
பத்தாம் வகுப்பில், 478 மதிப்பெண். பார்வையற்றோர் அளவில் மாநில முதலிடம். அதன்பிறகு சவால் தொடங்கியது. ‘‘ராயப்பேட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில சேந்தேன். நான் ஒருத்தன் மட்டும்தான் பார்வையற்றவன். இங்கிலீஷ் மீடியம் வேற. நிறைய சிரமப்பட்டேன். பாடம் நடத்தும்போது வாக்மேன்ல பதிவு பண்ணி, நாலஞ்சு முறை கேப்பேன். சொல்லிப் பாப்பேன். பிளஸ் 2வில அக்கவுண்டன்சியில சென்டம் கிடைச்சுச்சு. அதன்பிறகு லயோலா கல்லூரியில் ஆங்கிலம் படிக்கணும்னு எனக்குக் கனவு. அதுவும் சாத்தியமாச்சு. நான் ரொம்ப தைரியசாலி. அதுக்கும் அம்மாதான் காரணம். தனியாளா கிளம்பி சென்னை முழுவதும் சுத்துவேன். வேகமா நடப்பேன். பல இடங்கள்ல தடுக்கி விழுந்திருக்கேன். ஆனா எழுந்து, முன்னைவிட வேகமா நடப்பேன். ஜிம்முக்குப் போனேன். பவர் லிஃப்ட்ல 150 கிலோ வரைக்கும் தூக்கினேன். கல்லூரியில ரொம்பவும் ஆக்டிவா இருப்பேன். தடுமாற்றம் இல்லாம ஆங்கிலம் பேசவும் கத்துக்கிட்டேன். பிபிசி உதவியால அமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ்னு வகை பிரிச்சு பேசவும் பழகிட்டேன். எம்.ஏ ஆங்கிலம் படிக்கிற மாணவர்களே என்கிட்ட உச்சரிப்பு கத்துக்க வருவாங்க. ஒலியியல் பாடத்தில கோல்ட் மெடல் வாங்கினேன்.
லயோலா ஆர்கெஸ்ட்ராவில நான்தான் பிரதான பாடகர். கல்ச்சுரல் நிகழ்ச்சிகளுக்காக கால் வைக்காத கல்லூரிகள் இல்லை. தொடக்கத்தில என்னை பார்வையில்லாதவன்னு புறக்கணிச்சவங்க எல்லாம், காலப்போக்கில என்னை அங்கீகரிச்சாங்க. பெஸ்ட் அச்சீவர் அவார்டோட கல்லூரியை விட்டு வெளியே வந்தேன்...’’ என்கிற இளங்கோவின் பயணம் வியப்பை ஏற்படுத்துகிறது.
‘‘ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழிப்பயிற்சி பத்தி மெட்ராஸ் யுனிவர்சிடியில எம்.பில் பண்ணிட்டு அம்பத்ர் டி.ஐ ஸ்கூல்ல ஆசிரியரா சேந்தேன். அடுத்து குருநானக் கல்லூரியில விரிவுரையாளர். அடுத்து மெட்ராஸ் யுனிவர்சிடியில பகுதிநேர விரிவுரையாளர். அப்போ ஆங்கிலம் பயிற்றுவிப்பு தொடர்பா ‘எஃபெக்டிவ் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இன் இங்கிலீஷ்’னு ஒரு துணைப்பாடம் தயாரிச்சேன். மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சுச்சு. இன்னைக்கு எம்.ஏ ஆங்கில இலக்கியத்தில அது ஒரு பாடத் திட்டமா இருக்கு. நிகழ்ச்சிகளுக்காக தொடர்ந்து வெளிநாடுகள் செல்ல வேண்டியிருந்ததால கல்லூரிப் பணியை விட்டுட்டேன். நிறைய கல்லூரி, பள்ளிகளுக்கு பேசப் போனேன். அது தனியா ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்கும் அளவுக்கு எனக்கு அனுபவங்களைத் தந்துச்சு...’’ என்று சிரிக்கிறார் இளங்கோ. உலகின் பல நாடுகளில் இளங்கோவுக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைனில் ஆங்கிலப் பயிற்சியும், தொடர்புத்திறன் பயிற்சியும் அளிக்கிறார். உலகெங்கும் தனியாளாகப் போய் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்துகிறார். வெளிச்சத்தைப் பார்த்தறிந்திராத இளங்கோ பலருக்கு வெளிச்சமாக இருக்கிறார்!
படங்கள்:
ஆர்.சந்திரசேகர்