மாப்பிள்ளை





பயணக் களைப்பில் நன்றாக உறங்கிப் போயிருந்தேன்.
தலைமுடியை மென்மையாக விரல்களால் கோதிவிட்டு அம்மா எழுப்பினாள்.
‘‘மணி எட்டு ஆகிடுச்சு தம்பி... பசிக்கும் இல்ல... எழுந்திருப்பா!’’
மெல்ல எழுந்து, பல் துலக்கி சமையலறையில் சென்று அம்மா அருகே அமர்ந்தேன்.
‘‘இந்தாப்பா முறுக்கு... நானே பண்ணினது! சாப்பிட்டுட்டு காபி குடி!’’
அம்மா சுட்ட முறுக்குக்கு அப்படி ஒரு சுவை. நான்கை உள்ளே தள்ளிவிட்டு காபியை சுவைத்தேன்.
அப்படியே ஊர்க் கதைகள் பேசியபடி, அம்மா தேங்காய்ப் புட்டு தயார் செய்துவிட்டார். அதை அம்மா கையாலேயே பழம் நெய் போட்டு பிசைந்து வாங்கி ஒரு பிடி பிடித்துவிட்டு, வார இதழ் படித்தபடி மறுபடி தூங்கப் போக...
‘‘என்ன... சாருக்கு பகல் கனவா? எழுந்திருங்க! அப்பா உங்களை உடனே குடோனுக்குப் போகச் சொல்றார்... லோடு வந்திருக்காம்!’’ - முதுகில் ஒரு தட்டு தட்டி மனைவி எழுப்பி விட்டாள்.
‘ஞாயிற்றுக்கிழமையும் லோடா’ என்று வெளியில் கேட்காமல் முனகியபடி, தடதடவென கிளம்பி குடோனுக்கு ஓடினேன்.
பெரிய்ய்ய்ய இடத்துப் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு, வீட்டோடு மாப்பிள்ளை ஆன பிறகு, அம்மா வீட்டிற்கு கனவில்தான் போய் வர முடிகிறது.