சுதந்திரம்





‘‘கடைசியா என்னதாண்டா சொல்ற?’’ - சந்திரன் சலிப்புடன் கேட்டார்.
‘‘மொதல்ல சொன்னதுதான் டாடி... நான் யார்கிட்டேயும் கைகட்டி நிற்க மாட்டேன். யாருக்கும் பணிஞ்சு பதில் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன். சுதந்திரமா இருக்கணும்...’’ என்றான் ஹரி.
‘‘சரி... வேலைக்குப் போக மாட்டே. என்ன தொழில் செய்யலாம்னு இருக்கே?’’
‘‘ஆட்களை வச்சி பெரிய லெவல்ல ஊறுகாய் தயாரிச்சி கடைகளுக்கு சப்ளை பண்ணலாம்னு இருக்கேன் டாடி. அதுக்கு ஜஸ்ட் 2 லட்சம் இருந்தா போதும்!’’
‘‘சரிடா, அடுத்த வாரம் ஏற்பாடு பண்றேன்!’’

தீபதர்ஷினி டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸுக்குள் நுழைந்த ஹரி, கேஷ் கவுன்டரில் இருந்தவரிடம் கேட்டான்.
‘‘சார், நான் அருணா பிக்கிள்ஸ் ஓனர்... எங்க பிராடக்ட்ஸை உங்க கடையில வச்சி சேல்ஸ் பண்ண முடியுமா?’’ என்றான்.
‘‘ஓனரைத்தான் கேட்கணும் சார்... பக்கத்து ரூம்லதான் இருக்கார்... போய்க் கேளுங்க!’’
‘‘ஓகே... தேங்க்ஸ்!’’ என்றபடி நகர முயன்ற ஹரியிடம் கேஷியர் அக்கறையுடன் சொன்னார்...
‘‘சார், ஒரு நிமிஷம்... எங்க ஓனர்கிட்ட பேசும்போது கைகட்டி நின்னு பேசுங்க.. ரொம்ப பணிவா பதில் சொல்லுங்க... உங்களுக்கு ஆர்டர் கண்டிப்பா கிடைக்கும்!’’ என்றார்.
ஹரியின் மனதுக்குள், அவன் தந்தை உரக்கச் சிரிக்கும் சத்தம் கேட்டது.