கவிதைக்காரர்கள் வீதி






முடிச்சு

கோலத்தில்
அவள் போட்ட
முடிச்சுகளை அவிழ்ப்பதில்
எறும்பு
தோற்றுப் போனது.
- தூ.சிவபாலன், கட்டுமாவடி.

இடைவெளி

அப்பாவின் கைகளிலிருந்து
என் விரல்களை விடுவித்து
நடக்கத் தொடங்கியதிலிருந்து
உருவான இடைவெளியை
அவர் மார்பில் உறங்கியபடி
நிரப்புகிறான் என் மகன்!
- அ.கோ.விஜயபாலன்,
திருவாரூர்.

புகைபபடம்

தான் பார்த்து ரசிக்க,
இதுவரை எவரும்
புகைப்படம் எடுக்காத
என் பால்யத்தை
தன் விழிக் கேமராவில்
விதம்விதமாகப்
படம்பிடித்து வைத்திருக்கிறாள்
அம்மா
- ஜி.வி.மனோ,
கொலுவை நல்லூர்.

ஏக்கம்

குழந்தைக்கு
சோறூட்டினாள் தாய்.
ஏக்கத்தோடு பார்த்தது
தனிமையில் இருந்த நிலா!
- பீ.ஆர்.பூஜாரமேஷ், சோழபுரம்.

கவிதை

மரங்களின் கவிதைகள்
நின்று வாசிக்கும் வழிப்போக்கன்
நிழல்
- எம்.ஏ.கண்ணன், ராஜபாளையம்.

அருகே...

சற்றே சிரமப்பட்டு
எண்ணிக் கொண்டிருந்தேன்
புள்ளியாய்க் கிடந்த
தொலைதூரத்து நட்சத்திரங்களை...
இரக்கப்பட்ட
ஒரே ஒரு நட்சத்திரம்
அருகில் வந்து காட்டியது தன்னை
காலை நேரக் கிழக்கு வானத்தில்!
- வசந்தராஜா, நெய்வேலி.