நிலம் என்னும் நல்லாள் எங்களுக்கே சொந்தம்!சொல்கிறார்கள் வீரப்பன் கிராம மக்கள்



‘‘நம்ம உழுகிற நிலம் நமக்கே சொந்தம்ன்னு சொல்லுது 2006 வன உரிமைச்சட்டம். அந்த நிலத்தை மணியகாரர், தாசில்தார் எல்லாரும் அளந்துட்டும் போயிருக்காங்க. அப்படி சொந்தமுள்ள நிலத்திற்கு நில உரிமைச் சான்று வேண்டி இந்த கிராம சபை தீர்மானம் போடுது. இதை நாம் மணியகாரர், ஆர்.ஐ, தாசில்தார் எல்லோருக்கும் அனுப்பப் போறோம்!’’ வசந்தராஜ் பேச, கூட்டமே கைதட்டுகிறது.
இந்த கிராமத்தின் பெயர் சோளகனை; ஒரு காலத்தில் வீரப்பன் நடமாடிய கிராமம், ஒரு காலத்தில் அதிரடிப்படைக்கு மறைந்து திரிந்த மக்கள் கூட்டம்தான் இப்போது இப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.   

வீரப்பன் இருந்த வரை, ‘அவருக்கு அரிசி பருப்பு கொண்டு போகக்கூடாது; உணவு வழங்கக்கூடாது. கண்ணில் தட்டுப்பட்டால் உடனடியாகத் துப்பு தரவேண்டும். உங்களுக்கு
வேண்டிய சன்மானம் தருகிறோம். உங்கள் ஊரையே சுபிட்சமாக்கி, சொர்க்கபுரியாக்குகிறோம்!’ என்றெல்லாம் சொல்லி ஆசை வார்த்தைகள் கூறிய அதிரடிப்படை போலீஸாரையும், ‘வீரப்பன்கிட்டப் போனியா? அரிசி பருப்பு கொடுத்தியா?’ எனக்கேட்டு சித்ரவதை செய்த டார்ச்சர் முகாம்களையும் நம்மால் மறக்க முடியாது. அதில் முதலாவதாக வருவதுதான் இந்த சோளகனை கிராமம்.  

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து பர்கூர் சுமார் 50 கிலோமீட்டர். அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் துருசணம்பாளையம். இங்கேயிருந்து புலி, சிறுத்தை, யானை, கரடி என வனவிலங்குகள் பகலிலேயே திரியும் காட்டுப் பாதையில் 10 கிலோமீட்டர் சென்றால் எட்டுவதுதான் இந்த சோளகனை. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இந்த 10 கிலோமீட்டர் தூரமும் சின்னதாக ரோடு போட்டிருக்கிறார்கள். இப்போது அந்த ரோடு அத்தனையும் ஜல்லிக்கற்களாகக் கிடக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் போட்ட சாலை இது!
அரைகிலோமீட்டருக்கு ஒரு முறை தடுக்கி விழுந்து எழ வேண்டியிருக்கிறது.

இப்போதைக்கு ஒரு ஜீப் செல்கிறது. அதுவும் இந்த சோளகனைக் கிராமத்தைச் சேர்ந்தவரே வாங்கி விட்ட ஜீப். காலையில் ஊருக்குள்ளிருந்து 9 மணிக்குப் புறப்பட்டு வரும் ஜீப் துருசணம்பாளையத்தில் வந்து ஹால்ட் செய்கிறது. அங்கிருந்து மாலை 3 மணிக்கு சோளகனை புறப்படும். 12 பேர் கொள்ளளவு கொண்ட ஜீப்பில் காலையில் வரும்போதும் சரி, மாலையில் போகும்போதும் சரி 25 முதல் 30 பேர் வரை ஏற்றிக் கொள்ளப்படுகிறார்கள். தலைக்கு ரூ.30 கட்டணம். அதில் பயணிப்பவர்கள் கடைசி வரை ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.

‘‘இந்த ரோடு போடறதுக்கு முந்தி அரிசி, பருப்பு, ரேசன் பொருட்கள் எல்லாமே தலைச்சுமையாத்தான் பத்து கிலோமீட்டரும் நடந்து கொண்டு போவோம். அப்ப ஒத்தையடிப்
பாதையே பெரிய விஷயம். இந்த ரோடு போட்டப்ப மூணு ஊரும் (கீழ்சோளகனை, மேல் சோளகனை, நடுசோளகனை) சந்தோஷப்பட்டோம். அப்புறம் பார்த்தா சில மாசம் கூட ரோடு தாங்கலை!’’ என்கிறார் வசந்தராஜ்.

சோளகனைக்குப் போகிறவர்கள் யாராக இருந்தாலும் அடுத்தநாள்தான் திரும்பி வர முடியும். அல்லது ஜீப்பில் போய் ஒரு எட்டுப் பார்த்து விட்டு கரடு முரடான 10 கிலோமீட்டரும் நடந்தே திரும்பி வரலாம். அப்படி வரும்போது யானை வந்து மிதித்தாலோ, கரடி குறுக்கிட்டுப் பிடுங்கி எடுத்தாலோ, சிறுத்தைப்புலி எதிர்ப்பட்டு குரல்வளையைக் கடித்து தூக்கிட்டுப் போனாலோ யாரும் பொறுப்பல்ல. டூவீலர் பயணம் கூட படு ஆபத்தானது. அடுத்தநாள் ஜீப்பில் திரும்பி வருவதே பாதுகாப்பு.

ஊரின் நாலாபுறமும் குவியல், குவியலாய் மலைகள், நடுவே பள்ளத்தாக்கு, சிறு, சிறு நீரோடைகள். இப்படியொரு அற்புதமான பகுதியை அவ்வளவு சுலபமாகக் காண முடியாது. இங்கே சோளகர் பழங்குடிகள் சுமார் 220 குடும்பங்கள் வசிக்கின்றனர். திரும்பின பக்கமெல்லாம் ராகிப் பயிர் பூத்துக்குலுங்குகிறது.  கால் பதித்து நடந்தால் ஐம்பது, நூறு மீட்டர் இடைவெளியில் ஏதாவது ஒரு நீரூற்றுகுறுக்கிட்டு கால்களை ஜிலுஜிலுக்க வைக்கிறது.

ஊருக்குள் முக்கால்வாசிப் பேர் மூங்கில் கீற்றுகளை வைத்து முறம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை சந்தைக்கு கொண்டு போய் வியாபாரிகளுக்கு தருகிறார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருவாய் வாழ்க்கையின் ஒரு பகுதிக்கு ஜீவாதாரமாக விளங்குகிறது.

புதிதாக ஊருக்குள் போய் விட்டோமே, இரவில் சாப்பாடு இல்லையே என்ற கவலை இல்லை. ஆளாளுக்கு அவரவர் வீட்டில் ராகிக்களியும், அரிசிச் சோறும் செய்து வைத்துக் கொண்டு சாப்பிட வாங்க என்ற பாடாய்ப்பட்டு அழைக்கிறார்கள். ஊரின் கடைக்கோடியில் படுகல் மாதேஸ்வரன் கோயில், அதற்குக் கீழே மாரியம்மன் கோயில் மற்றும் நாட்டார் தெய்வங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. மாரியம்மன் கோயிலில் படுத்துறங்க பாய் தலையணை, பெட்சீட் எல்லாம் கொடுக்கிறார்கள். தம் ஊருக்கு வருபவர்களை உற
வாளிகள் போலவே நடத்துகிறார்கள்.  

சாதி இல்லை, பேதம் இல்லை. பசிக்கு சோறு என்று கேட்டுவிட்டால் எந்த வீடும் சோறு பொங்கிப் போடத் தயங்குவதில்லை. இந்த குணத்தால் 1992 - 93ம் ஆண்டுகளிலேயே இவர்கள் வீரப்பன் விவகாரத்தால் மாளாத் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். யார் வந்து சோறு கேட்டாலும் பசியாற்றும் மக்கள்.

அவர்களுக்கு மட்டும் இல்லை என்றா சொல்லியிருப்பார்கள். அப்படி யாரோ ஓரிருவர் சோறு பொங்கிப் போட ஊரே அல்லோல கல்லோலப்பட்டது. இரவு பகல் பாராது வந்த அதிரடிப்படை ஆளாளுக்குத் தூக்கிக் கொண்டு போனது. அந்த ரணம் மிகுந்த  வாழ்க்கை இன்றில்லை. நிம்மதியான வாழ்க்கைதான் என்றாலும், பிழைப்புதான் கேள்விக்குறி.

அத்தனை பேரும் ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் விவசாயம் செய்பவர்கள்தான். அதிலும் யானைகள் தொந்தரவு, காட்டுப்பன்றிகள் நடத்தும் சேதாரம், அதற்கான கட்டுக்காவல், பரண் மீது படுத்துக்கூவல். தவிர, கூலி நாழிக்கு வேலைக்குப் போவதோடு, ஆடு, மாடு மேய்ப்பையே தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

அப்படியானவர்களுக்குத்தான் இப்போது அவரவர் உழும் நிலங்களை அவரவர்க்கே சொந்தமாக்கித்தரும் வேலையை முனைப்புடன் செய்து தந்து கொண்டிருக்கிறது விபிஜி என அன்புடன் அழைக்கப்படும் வி.பி.குணசேகரன் தலைமையிலான பழங்குடியினர் சங்கம். நில அளவீடுகள் செய்து அரசுக்கும், பழங்குடி மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுகிறார்கள்.

இந்த சோளகனையில் ஏற்கனவே 23 பழங்குடிகளுக்கு நில உரிமைச்சான்று (நிலப்பட்டா) வாங்கிக் கொடுத்து விட்டார்கள். இப்போது 44 பேருக்கு நில அளவை செய்து பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். ‘‘எங்க அப்பன் கெஞ்சானை 25 வருஷத்துக்கு முன்னாடி வீரப்பனுக்கு சோறு கொடுத்தியா, அரிசி தந்தியான்னு அதிரடிப்படை பிடிச்சுட்டுப் போச்சு. ஒரு வருஷம் கேம்ப்ல வச்சிருந்து விட்டாங்க. கரண்டு கொடுத்து உடம்புல துணியில்லாம எல்லாம் சித்ரவதை பண்ணினாங்க. அவர் அதுலயே வீட்டுக்கு வந்தபின்னால செத்துப் போயிட்டார். இப்ப இருக்கிற கொஞ்சூண்டு நிலத்தில ராகி போட்டுட்டு மூங்கில் முற வேலைகள் செஞ்சுட்டு இருக்கேன்!’’ என்கிறார் மாதையன்.

ஊர்த்தலைவர் என்ற முறையில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர் புட்டான். ‘‘வீரப்பனோட உருவத்தை நாங்க யாருமே பார்த்ததில்லை. ஆனா, அதிரடிப்படை சித்ரவதையில் என் சித்தப்பனும், அப்பனும் இறந்துட்டாங்க. நம்ம எப்படி பொறந்தோமோ அப்படி வச்சுத்தான் கேம்ப்ல சித்ரவதை செய்வாங்க. அடின்னா அடி அப்படி ஒரு அடியைப் பார்க்கவே முடியாது.
ஒரு வருஷம் அப்படியேதான். என் அப்பனுக்கு ஒன்றரை லட்சம் கிடைச்சுது. எனக்கு அதுவும் கிடைக்கலை!’’ என்கிறார் புட்டான்.

பழங்குடியினர் சங்கத்தலைவர் வி.பி.குணசேகரன், நிதானமாக பேசத் தொடங்கினார். ‘‘பெரும்பாலும் வெகுளியான மக்கள். நாங்கள் 1990களில் இங்கே வந்து இயக்கப்பணி செய்த போது பெரும் துன்பத்தில் இருந்தார்கள். வீரப்பன் ஒரு பக்கம், அதிரடிப்படை மறுபக்கம் என்று வாட்டிக் கொண்டிருந்த காலம் அது. நாங்கள் சதாசிவம் கமிஷன் போடும் அளவு போராடுவதற்கு தூண்டுகோலாக அமைந்த கிராமமும் இதுதான்.

வீரப்பன் போன பிறகு அதிரடிப்படையும் போயே விட்டது. அதனால் இங்கே வனத்துறை வைத்ததுதான் சட்டமாக இருந்தது. 2006 வன உரிமைச் சட்டம் வந்தபிறகு அதில் உள்ள விஷயங்களை இப்போதுதான் படிப்படியாக அமல்படுத்த வைத்து வருகிறோம். அந்த வகையில்தான் இப்போது கிராம சபை கூடி இப்படியொரு நிலப்பட்டா தர தீர்மானம் இயற்றி வருகிறோம். பர்கூர் மலையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளது. பொரும்பாலானவருக்கு நிலம் உண்டு. பட்டா இல்லை. அதை முறையாக தீர்மானம் இயற்றி வருவாய்த்துறை அதிகாரிகளை இங்கேயே வரவழைத்து அளந்து தர ஏற்பாடு செய்து வருகிறோம்!’’ என்கிறார் வி.பி.குணசேகரன்.

கா.சு.வேலாயுதன்