ஆயிரம் கண்கள் கொண்டவன் இந்த ஏஜெண்ட் கண்ணாயிரம்!



‘‘எந்த கேசா இருந்தாலும் இழுத்துப் போட்டு தாங்கிப்பாரு, எவ்வளவு காசு கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்பாரு... இதுக்கு மேல அவர் பெயரைச் சொல்லலைன்னா தப்பாயிரும்...
அவர்தான் எங்க அண்ணன் கண்ணாயிரம்...’’‘‘நீங்க ஷெர்லாக் ஹோம்ஸ் ஃப்ரம் லண்டன் இல்ல, கண்ணாயிரம் ஃப்ரம் இரும்புத்தூர்...’’இப்படி டீசரிலேயே காமெடியும் சீரியஸுமாக புது கெட்டப், கோட் சூட், குதிரை, கையில் துப்பாக்கி என புதிதாகத் தெரிகிறார் சந்தானம்.

‘வஞ்சகர் உலகம்’ படத்திற்குப் பிறகு மனோஜ் பீதா இயக்கும் படம் இது. தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஏஜெண்ட் சாய் னிவாச ஆத்ரேயா’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்தான் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. ‘‘சந்தானம் படம்னாலே காமெடி கேலி கிண்டல் இதெல்லாம் எதிர்பார்த்து வருவாங்க. ஆனா, இந்தப் படம் சந்தானம் டெம்ப்லேட்டிலிருந்து அப்படியே வேற படமா இருக்கும்...’’ சீரியஸாகவே பேச ஆரம்பித்தார் மனோஜ் பீதா.

கண்ணாயிரம்... என்னும் பெயர்க்காரணத்தை சொல்லுங்க?

கதை முழுக்க முழுக்க கிராமப்புறத்தில் நடக்குது. அங்க கண்ணாயிரம் என்கிற பெயர் சாதாரணமா இருக்கும். தவிர ‘ஆயிரம் கண்கள்...’ என்கிற பொருளும் இருக்கிறதால ஏஜெண்ட் கேரக்டருக்கு பொருத்தமாகவும் இருக்கும். அதனால் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.

டிடெக்டிவ் ஏஜெண்ட் ஆக சந்தானம், எப்படி நடிச்சிருக்கார்?

பொதுவாகவே நல்ல காமெடி, கேலி, கிண்டல் செய்கிற நடிகர்கள் பெர்ஃபாமன்ஸும் நல்லாவே செய்வாங்க. அப்படிதான் சந்தானம் சார் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, மத்த படங்களிலிருந்து அவர் பெர்ஃபாமன்ஸ் இந்த படத்தில் நிச்சயமா ரொம்ப வித்தியாசமா இருக்கும். அவர் கேரக்டர் ஆச்சரியத்தை உண்டாக்கும்.

கதை எழுதிட்டு யார் ஹீரோ அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தப்ப சந்தானம் சார் இந்தக் கதையிலே ஆர்வம் காட்டினார். ‘இந்தப் படம் உங்களுக்கு ஏத்த படம் இல்லையே சார், முழுக்க முழுக்க சீரியஸான படம்... உங்களுக்கு செட் ஆகுமா’னு கேட்டேன். ‘உங்க ஸ்டைல் சொல்லுங்க, அதன்படி நடிப்போம்’னு சொல்லி சந்தானம் சார் ஆர்வமாகவே இந்தக் கதையை ஓகே செய்தார்.

எத்தனையோ படங்கள் இருக்க ஏன் ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா ரீமேக்?

கதை இதுதான்னு தேர்வு செய்து படம் செய்கிற இடத்தில் எல்லாம் நான் இல்ல. இது என் ரெண்டாவது படம்.  அதேபோல ரீமேக் படங்கள் செய்கிற எண்ணமும் எனக்கு கிடையாது. ஆனா, இந்தப் படத்தைப் பாருங்கனு சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கும் இந்தப் படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ‘ஆனா, ரீமேக்கா நான் செய்ய மாட்டேன்... கதையை எடுத்துக்கிட்டு என்னுடைய ஸ்டைல்ல என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ செய்து புது கதையாதான் நான் உருவாக்குவேன்’னு செய்திருக்கேன்.

ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தில் லொகேஷன் இன்னொரு கேரக்டராக டிராவல் ஆகும். தமிழில் லொகேஷன்களை எப்படி தேர்வு செய்திருக்கீங்க?

இங்க கற்பனையா ஒரு கிராமமே உருவாக்கியிருக்கோம். அதாவது செட்டு... ஆர்ட் டைரக்டர்... இப்படி எல்லாம் செய்யல. கதை நடக்கும் இடத்தை கற்பனையான ஒரு கிராமமா மாத்தியிருக்கோம். அதாவது என்னுடைய விஷுவலுக்கு அந்த கிராமம் எப்படி இருந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சோம். அந்த மாதிரி அந்த லொகேஷனை கற்பனை உலகமா கொண்டு வந்திருக்கோம்.

ரெடின் கிங்ஸ்லே, முனீஸ் காந்த்... இப்படி படம் முழுக்க காமெடி கேரக்டர்கள் நிறைய இருக்கிறார்களே?

ஆமா; புகழ், ராம்தாஸ் இப்படி எல்லாருமே காமெடி ஸ்பெஷலிஸ்ட்ஸ். ஆனாலும் இந்தப் படத்தில் காமெடி இருக்கும்; அதுவும் வித்தியாசமாக இருக்கும். இதுவரைக்கும் மத்த படங்கள்ல இவங்க செய்த காமெடி போர்ஷன்களிலிருந்து முற்றிலுமா வேற ஒரு ஜானர்ல காமெடி செய்திருப்பாங்க. சீரியஸ் காமெடியா அது இருக்கும். கேரக்டர்களில் கூட தெலுங்குக்கும் , தமிழுக்கும் நிறைய மாற்றங்கள் பார்க்கலாம்.

குறிப்பா தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவுடன் ஒரு பெண் கேரக்டர் சேர்ந்தே வரும். அந்த கேரக்டருக்கு பதிலா ரியா சுமன் ஒரு டாக்குமெண்டரி ஃபிலிம் மேக்கரா அந்த ஊருக்கு வராங்க. படம் பண்ணணும்னு வருகிற ரியா சுமனுக்கு ஒரு சீரியஸான விஷயம் நடக்குது.அப்படித்தான் அந்தக் கேரக்டர் சந்தானம் சார் கேரக்டரோட பயணிக்கும். ஆனா, அசிஸ்டென்டாவோ அல்லது சக டிடெக்டிவாவோ அந்த கேரக்டர் இருக்காது.

தமிழ்ல மேஜர் மாற்றம் அப்படினா எதை சொல்லுவீங்க?

தெலுங்கு படத்தில் இறந்து போன அம்மாவின் வழக்குக்காகத்தான் ஹீரோ தேடி அலைவார். ஆனா, ஹீரோ மற்றும் அம்மா சென்டிமென்டை பெருசா அதிலே காண்பிச்சிருக்க மாட்டாங்க.
அந்த எமோஷனலை தமிழில் பார்க்கலாம். நிறையவே மேஜர் சேஞ்ஜஸ் இருக்கும். அதுல இந்த அம்மா - பையன் இடையிலான பந்தத்தை இன்னும் கொஞ்சம் ஹைலைட் செய்திருக்கேன். நிச்சயமா அந்தப் படத்தில் இருந்து இந்தப் படம் முற்றிலும் வேறு ஒரு படமாதான் இருக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா இசை எப்படி வந்திருக்கு... படத்தின் மற்ற டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க..?

படத்துக்கு இன்னொரு கேரக்டரே யுவன் சார் மியூசிக்தான். அரபிக் டியூன்ஸ் எல்லாம் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கார். சமீபத்தில் கூட ஒப்பாரியை அடிப்படையா வைத்து ஒரு பாடல் ரிலீஸ் செய்திருக்கோம். மியூசிக்கும் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். நீரவ்ஷா சாருடைய அசிஸ்டண்ட் சரவணன் ராமசாமி, தேனி ஈஸ்வரன் ரெண்டு பேரும் இந்த படத்துக்கு சினிமாட்டோகிராபர்ஸ். ஆர்ட் டிபார்ட்மென்ட் செல்வா, எடிட்டிங் அஜய்... அவருக்கு இது முதல் படம். எடிட்டர் ஆண்டனியின் அசிஸ்டண்ட்.  

நீண்ட நாட்களாகவே தமிழில் டிடெக்டிவ் திரைப்படங்கள் வரலை... அந்த இடைவெளியை ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ பூர்த்தி செய்யுமா? ..

ஆமா... ‘துப்பறிவாளன்’ படத்திற்கு அப்புறம் வரப்போகிற டிடெக்டிவ் படம் இதுதான்னு நாங்களும் நினைக்கறோம். அந்த அளவுக்கு இந்தப் படம் மேஜிக் செய்யுமானு கேட்டா... சொல்லத் தெரியலை. ஆனா, நிச்சயமா ஒரு நல்ல டிடெக்டிவ் படமா ஆடியன்ஸை எங்கேஜ் பண்ணும். இந்தப் பட ரிலீசுக்கு அப்புறம்தான் என்னுடைய அடுத்த படம் பத்தி யோசிக்கணும். ஸ்கிரிப்ட் எழுதியாச்சு. அது ஒரு ஆக்‌ஷன் படமா இருக்கும். நானும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்துக்காகத்தான் காத்திருக்கேன்.

ஷாலினி நியூட்டன்