மெக்காலேயின் கல்விக் கொள்கையே உலகளவில் இந்தியர்கள் சாதிக்க காரணம்!



பொதுவாக மெக்காலே என்றாலே ‘இந்தியர்களை குமாஸ்தாவாக மாற்ற ஆங்கிலக் கல்வியைக் கொண்டுவந்தவர்’ என்ற ஒரு வாசகம் எல்லா புத்தகங்களிலும், வாட்ஸ் அப்புகளிலும் அவ்வப்போது கலங்கடிக்கும்.
இச்சூழலில், ‘மெக்காலேயின் கல்விக் கொள்கையை முழுமையாக நாம் பின்பற்றியிருந்தால் இந்தியா இந்நேரம் ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறியிருக்கும். மெக்காலேயின் கல்விக் கொள்கையை எதிர்த்தும், திரித்தும், சுருக்கியும் ஆட்சியாளர்களும் மக்களும் புரிந்துகொண்டதால்தான் இதுபோன்ற வதந்திகள் மெக்காலேயைப் பற்றி சுற்றுகின்றன’ என்பதை வலியுறுத்தி ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது.

1835ல் மெக்காலே இந்தியாவின் கல்விக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்று வெளியிட்ட அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து ‘நவீன கல்விக் கொள்கையை நோக்கி: மெக்காலே கூறியது என்ன?’ என்னும் தலைப்பில் சிறு நூலாக வெளியிட்டிருக்கிறார்கள் விஜயசங்கர் மற்றும் சுந்தர் கணேசன். சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனரான சுந்தர் கணேசன் தன் நிறுவனத்தின் மூலமே இந்த நூலை  வெளியிட்டிருக்கிறார். விஜயசங்கர், ‘ஃப்ரன்ட்லைன்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘மெக்காலே 1835ல் இந்தியாவின் கல்வி பற்றிய தன் அறிக்கையில் கூறிய செய்திகளைக் காட்டிலும் கூறாத செய்திகளை அடிப்படையாக வைத்துதான் அவரைப் பற்றிய பிம்பங்கள் கட்டப்பட்டன. இதை அவர் 1835ல் சமர்ப்பித்த அறிக்கையை ஒரு பார்வை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.நம்மை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், 1813 முதல் இந்தியக் கல்விக்காக வருடந்தோறும் ரூபாய் ஒரு லட்சத்தை இனாமாக ஒதுக்கியது.

இந்த பணம் எப்படி வீணாகிறது என்று தொடங்கி இந்தியக் கல்வி எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்த அறிக்கையை, தான் இடம்பெற்ற இந்தியக் கல்விக் குழுமத்திலும் பிரிட்டனின் பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்தார்...’’ என்று சொல்லும் விஜயசங்கர், மெக்காலேயின் அறிக்கையின் சாராம்சம் பற்றி விளக்கினார்.

‘‘அப்போது வரை இந்தியாவில் குருகுலங்களில் சமஸ்கிருதக் கல்வியும், மதரசாக்களில் அரபிக் கல்வியும்தான் இருந்தன. இவை ஒருசிலருக்கு மட்டுமே பயன்பட்டன. அச்சான புத்தகங்களும் இந்த மொழிகளில் மட்டுமே இருந்தன. பெரும்பான்மை இந்திய மக்கள் கல்வியறிவு பெற இயலாதவர்களாகத்தான் இருந்தார்கள். அதாவது கல்வி மறுக்கப்பட்டது. இந்தக் காலங்களில் இந்தியக் கல்வி பற்றி பிரித்தானிய ஆட்சியாளர்களிடையே விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுதான் மெக்காலேயின் அறிக்கை வந்தது.

அப்போது அரசுப் பள்ளிகள் கிடையாது. ஆகவே, இதுவரை ஒதுக்கப்பட்ட அந்த ஒரு லட்சம் ரூபாய் ஏற்கனவே இருக்கும் சமஸ்கிருதத்தையும், அரபி மொழியையும் படிக்கவே செலவிடப்பட்டிருக்கிறது. அவற்றில் புராணங்களே இருக்கின்றன. அறிவியல் இல்லை.எனவே, இந்திய மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஆங்கிலக் கல்வியே அவசியம். இது அனைவருக்குமான கல்வியாக இருக்கவேண்டும் என்று மெக்காலே கூறினார்.

ஆளும் நாட்டின் மொழிக்காக அதை அவர் கற்றுக்கொள்ளச் சொல்லவில்லை. ஒருகாலத்தில் பிரிட்டனும் கல்வியறிவு இல்லாமல்தான் இருந்தது. ஆனால், கிரேக்கம், எகிப்து போன்ற நாகரிக நாடுகளின் உலக செல்வங்களை ஆங்கிலத்தில் கற்றுக்கொண்டதன் மூலம் பிரிட்டன் அறிவியல் முதற்கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியது. எனவே, ஆங்கிலக் கல்வி என்பது உலக அறிவின் பொக்கிஷம் என்றார் மெக்காலே...’’ என்று சொல்லும் விஜயசங்கர், இந்தியா மெக்காலேயின் கொள்கைகளை எப்படி எதிர்கொண்டது என்பது பற்றியும் விளக்கினார்.

‘‘மெக்காலே தன் அறிக்கையைச் சமர்ப்பித்த சில பத்தாண்டுகளில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் 1857ல் நடந்தது. இதன்பிறகு பிரிட்டனின் நேரடி ஆளுகையின் கீழ் இந்தியா வந்தது. அப்போது இந்தியாவை ஆள்வது பிரித்தானிய அதிகாரிகள் மட்டுமாக இருக்க வேண்டியதில்லை, இந்தியர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கலாம்... இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலக் கல்வி கற்றுக்கொள்வதன் மூலம் இந்தியாவை சிறப்பாக ஆளலாம்... என்ற முடிவுக்கு பிரிட்டன் வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள் முளைக்கத் தொடங்கின. பிரிட்டனின் ஆங்கிலக் கல்விக் கொள்கைகள் தொடர்பாக இந்தியர்களிடையே இரண்டு வகையான கருத்துக்கள் அன்று நிலவின.

ஒன்று, ஆங்கிலேயர் ஆட்சிதான் இந்தியாவில் நவீனத்தைப் புகுத்தியது. இதனைத் தொடர்ந்தே அதுவரை இருந்த பழமையான பழக்கங்கள், சட்டதிட்டங்களை மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பாதையில் சென்றவர்களை சீர்திருத்தவாதிகள் என்று சொல்லலாம். உதாரணமாக இந்திய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவராக இருந்த ராஜாராம் மோகன்ராய் ஆங்கிலக் கல்வியை ஆதரித்தார்.

இரண்டாவதான கருத்தியல்வாதிகள் பழமைவாதிகள். இவர்கள், வேதத்தில் இல்லாததா ஆங்கிலத்தில் இருக்கிறது என்று விதண்டாவாதம் செய்தார்கள். புஷ்பகவிமானத்தை, விமானம் என்று கருதியவர்கள் இவர்கள்தான். இலக்கியத்தில் கற்பனை இருப்பது விரும்பத்தக்கதுதான். ஆனால், அந்தக் கற்பனைக்கு அறிவியல் அடிப்படை வேண்டும்.
இப்படியாக மெக்காலே காலம் முதல் அவரது கல்விக் கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தன; இருக்கின்றன...’’ என்று சொல்லும் விஜயசங்கர், இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் நேருவும் அபுல் கலாம் ஆசாத்தும் சேர்ந்து சீர்திருத்தவாதிகளின் ஆங்கிலக் கல்வியை ஏற்றார்கள், பழமைவாதிகளின் கருத்துக்களைப் புறக்கணித்தார்கள், அதனால்தான் இன்று இந்தியா ஓரளவாவது வளர்ச்சியடைந்த நாடாகத் திகழ்கிறது’ என்கிறார்.

‘‘எல்லோருக்கும் கல்வி என்பது இந்தியாவுக்கு எப்போதுமே தேவையான ஒரு கல்வியாக இருக்கிறது. மெக்காலே இருந்தபோது உள்ளூர் மொழிகளின் தேவை பற்றி அவருக்குத் தெரிந்திருக்காது. ஆனால், ஆங்கிலத்தின் தேவையை அவர் அன்றே உணர்ந்திருந்தார். உள்ளூர் மொழிக் கல்வி அவசியம்தான். ஆனால், உலகின் தொடர்பு மொழியாக இன்றும் இருக்கும் ஆங்கிலக் கல்வியை யாரும் மறுக்கமுடியாது. உள்ளூருக்கு ஒரு மொழியும் வெளி உலகத்துக்கு ஆங்கிலமும் இருப்பது முக்கியம். ஆகவேதான் தமிழ்நாடு இதுவரை இருமொழிக் கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறது.

ஒரு சமூகத்தின் தேவைதான் ஒரு மொழிக் கல்வியின் தேவையை உணர்த்துகிறது. ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டும் அல்ல. அது அறிவு. அந்த அறிவுக்கு 150 வருடங்களுக்கு முன்பே அடித்தளமிட்ட மெக்காலே, அன்றை விட இன்று அதிகம் தேவைப்படுகிறார். ஆங்கிலம், குமாஸ்தாக்களை அல்ல... உலக இந்தியர்களை உருவாக்கும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் விஜயசங்கர்.

டி.ரஞ்சித்