Troll... Negativityயால் நொறுங்கிப் போகிறேன்... ராஷ்மிகா மந்தனா உருக்கம்



ராஷ்மிகாவின் மனதுக்குள் இவ்வளவு வலியா என்று யோசிக்க வைத்திருக்கிறது ரசிகர்களுக்கு அவர் எழுதியுள்ள லேட்டஸ்ட் ஓப்பன் லெட்டர்.
அதைப் படிக்கும் போதே எந்தளவுக்கு ட்ரோல்களும் நெகட்டிவிட்டியும் அவரைக் காயப்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.ராஷ்மிகா மந்தனா அப்படி அந்தக் கடிதத்தில் என்னதான் சொல்லியிருக்கிறார்?

‘கடந்த சில நாட்களாகவே, அவ்வளவு ஏன் சில வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என்று கூட சொல்லலாம்... இரண்டு, மூன்று விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன. அந்த விஷயங்களை சரி செய்ய சரியான நேரம் இதுதான் என நினைக்கிறேன்.நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.
இதை சில வருடங்களுக்கு முன்பே நான் செய்திருக்க வேண்டும்.சினிமாவில் என்னுடைய கரியரை தொடங்கியதிலிருந்தே வெறுப்புகளை அதிகம் எதிர்கொள்கிற நிலையில்தான் இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சமூகவலைத்தளங்களில் எக்கச்சக்கமான ட்ரோல்கள். ஏகப்பட்ட நெகட்டிவிட்டி.

நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கைக்கான விலை இது என எனக்குத் தெரியும். ஒவ்வொருத்தருக்கும் பிடித்தவளாக நான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. சிலருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றும் எனக்குத் தெரியும். ஒவ்வொரு தனி மனிதரும் என்னை நேசிக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக நீங்கள் என் மேல் நெகட்டிவிட்டியைக் கொட்டலாம் என்பது அர்த்தமில்லையே..!

உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு நாளும் நான் என்னென்ன வேலைகளைச் செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என் வேலையின் மூலமாக நீங்கள் உணரும் மகிழ்ச்சிக்காக நான் ரொம்பவே அக்கறை காட்டுகிறேன். நீங்களும் நானும் பெருமைப்படக்கூடிய விஷயங்களைக் கொடுக்க என்னால் முடிந்தளவு முயற்சி செய்கிறேன்.
ஆனால்... உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் சொல்லாத விஷயங்களுக்காக இன்டர்நெட் மூலமாக நான் கேலி செய்யப்படும்போதும், மனரீதியாக தாக்கப்படும் போதும் என் இதயம் சுக்குநூறாக உடைந்து போகிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் மனது சோர்ந்து போகிறது.

பொதுவாக நான் பேட்டிகளில் சொன்ன சில விஷயங்கள் எனக்கு எதிராகத் திரும்புவதை நானே பார்க்கிறேன். இன்டர்நெட் முழுக்க பரப்பப்படும் சில தவறான செய்திகள் எனக்கு மட்டுமில்லாமல் சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ளேயும் வெளியேயும் இருக்கும் என் உறவுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். அது இன்னும் என்னை மேம்படுத்த வைக்கும். இன்னும் சிறப்பாக செயல்படத் தூண்டும். ஆனால், நெகட்டிவிட்டி, வெறுப்பில் என்ன இருக்கிறது..?

ரொம்ப நாட்களாகவே ‘அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இரு’ என என்னிடம் சொன்னார்கள். ஆனால், இப்போது அது எல்லை மீறி மோசமாகிவிட்டது. இதை நான் சொல்வதால் யாரையும் வெற்றி கொள்ள நினைக்கிறேன் என்று அர்த்தமில்லை. என் மேல் தொடர்ந்து காட்டப்படும் இந்த வெறுப்பின் காரணமாக, நான் சமூகத்தால் ஒதுக்கப்படுகிறேனோ என்று நினைக்க விரும்பவில்லை.

நான் குறிப்பிட்டதுபோல் மற்றவர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அன்பை நான் அடையாளம் காண முடிகிறது. அதை ஏற்றுக் கொள்கிறேன்.உங்களின் மாறாத நிலையான அன்பும் ஆதரவும்தான் என்னை இயங்க வைக்கிறது. இந்த இறுக்கத்தில் இருந்து வெளியேறி இதை இப்போது சொல்லும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது.

என்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருத்தருக்கும், இதுவரை நான் சேர்ந்து வேலை பார்த்தவர்களுக்கும், நான் வியந்து பார்த்தவர்களுக்கும் மட்டுமே என்னுடைய அன்பு இருக்கிறது. நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன். உங்களுக்காக இன்னும் நல்லவற்றைச் செய்வேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல் உங்களை மகிழ்விக்கச் செய்வதுதான் என்னையும் சந்தோஷப்படுத்துகிறது.

அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எல்லோரிடமும் அன்புடனும் பரிவுடனும் இருங்கள். நாம் அனைவரும் நமக்குள் இருக்கும் சிறந்தவற்றை வழங்கத்தான் முயற்சி செய்கிறோம். அனைவருக்கும் நன்றி...’ராஷ்மிகா மந்தனாவின் இந்தக் கடிதம் சமூகவலைத்தளங்களில் இப்பொழுது நிலவும் சூழலையே வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. பிரபலங்கள் அனைவரும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலை, மன அழுத்தத்தை இது வெளிப்படுத்துகிறது.

சோஷியல் மீடியா என்பது ட்ரோல்களுக்கும், நெகட்டிவிட்டிக்கும் மட்டுமே என்பது போன்ற சூழல் சரியல்ல. நெட்டிசன்கள் போடும் ஒவ்வொரு கமெண்ட்டும் ஒருபோதும் திரை நட்சத்திரங்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தக் கூடாது. ஆக்கபூர்வமான விமர்சனங்களுடன் பாசிட்டிவ்  எண்ணங்களை விதைப்போம்.

ஜான்சி