சானியா மிர்சா விவாகரத்து..?
கடந்த சில நாட்களாக வதந்தியாக சுற்றிக்கொண்டிருந்த விஷயம் இப்போது உண்மையாகிவிட்டது என்கிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்பது இனிதான் தெரியும்.
ஆம். விளையாட்டு உலகில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்த சானியா மிர்சாவும், ஷோயப் மாலிக்கும் விவாகரத்து செய்யப் போவதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து என்பது சம்பந்தப்பட்ட இரு தனி நபர்களின் அந்தரங்க விஷயம். ஏன் பிரிகிறார்கள் என்பதும் அவர்கள் இருவர் மட்டுமே தீர்மானிக்கும் செயல். இதுகுறித்து கருத்து சொல்ல எவருக்கும் உரிமையில்லை. ஏன் விவாதிக்கக் கூட.
 இவை எல்லாம் தெரிந்தாலும் சானியா மிர்சா - ஷோயப் மாலிக் என இரு தரப்பு ரசிகர்களையும் இந்தச் செய்தி கடுமையாக பாதித்துள்ளது. காரணம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பகை நிலவுவதாக ஒரு சூழலை அரசியல்வாதிகள் கட்டமைத்து வருகையில்... எந்தவொரு விளையாட்டுப் போட்டியிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்போது அந்தப் போட்டியை யுத்தத்துக்கு சமமாக மக்கள் கருதும் அளவுக்கு ஒரு waveஐ அரசியல்வாதிகள் உருவாக்கும் சூழலில் -இருநாட்டு விளையாட்டு வீரர்கள் காதலித்ததும் மணந்து கொண்டதும் சிறப்பு வாய்ந்த அம்சமல்லவா?
 மில்லினியத்தின் ஆரம்பத்தில் இந்தியர்களின் டார்லிங்காக இருந்தவர் சானியா மிர்சா. டென்னிஸ் உலகில் வெற்றிக் கொடியை பறக்கவிட்ட சானியாவை இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களும் கனவு நாயகியாக கொண்டாடினார்கள். இந்த காலகட்டத்தில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரரான ஷோயப் மாலிக்கை காதலித்தார் சானியா மிர்சா. 2010ம் ஆண்டில் ஷோயப் மாலிக்குக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்திருந்தது. இந்த கவலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார் ஷோயப் மாலிக்.
இதே காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் சானியா மிர்சாவும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார்.கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததால் சானியாவும் அப்போது மன உளைசலில் இருந்தார். ஹோபர்ட் நகரில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் இருவரும் சந்தித்துக்கொள்ள, பரஸ்பரம் மனக் காயங்களுக்கு மருந்திட்டுக்கொண்டது இந்த ஜோடி. போதாதா..? இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டது.அடுத்த சில மாதங்களுக்கு காதல் பறவைகளாகத் திரிந்த இவர்கள் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
மாலிக்கின் உறவினர்கள் 15 பேரும், சானியாவின் உறவினர்கள் 35 பேரும் கலந்துகொண்ட திருமணத்தில் 61 லட்ச ரூபாய் மெஹர் கொடுத்து சானியாவை மணந்தார் ஷோயப் மாலிக். திருமணத்துக்குப் பின் இந்தியாவில் இருப்பார்களா பாகிஸ்தானில் இருப்பார்களா என்று ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு நாட்டையும் விட்டு துபாயில் செட்டிலானார்கள். கடந்த ஆண்டுக்கு முன்புவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.
2017ல் காயங்கள் காரணமாக டென்னிஸ் உலகில் இருந்து சானியா மிர்சா விலகி இருக்க, கிரிக்கெட்டில் இருந்து சற்று விலகியிருந்த ஷோயப் மாலிக்குடன் இணைந்து துபாயில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். 2018ம் ஆண்டில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், யார் கண் பட்டதோ, இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசலை இருவரும் மறைமுகமாக தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் மகனுடன், தான் மட்டும் தனியாக இருக்கும் படத்தை வெளியிட்ட சானியா மிர்சா, ‘கடினமான நேரத்தைக் கடக்கும் தருணங்கள்’ என்று அதற்கு அடிக்குறிப்பு இட்டிருந்தார். மற்றொரு பதிவில், ‘உடைந்த உள்ளங்கள் எங்கே போகும்? - அல்லாவைத் தேடி...’ என்று குறிப்பிட்டிருந்தார்.அதேபோல் சில நாட்களுக்கு முன் தங்கள் மணவாழ்க்கையில் சிக்கல் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷோயப் மாலிக்கும் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த அவர், ‘நாம் ஒன்றாக இருக்க முடியாத சூழல் ஏற்படலாம். தினந்தோறும் சந்திக்க முடியாத நிலைகூட ஏற்படலாம். ஆனால், உன் புன்னகை தவழும் முகத்தை அப்பா எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.இந்தச் சூழலில் இருவரும் இப்போது பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்துகொண்டதான அறிவிப்பை அவர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் ஷோயப் மாலிக்கின் உறவினரான உமேர் சந்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
என்.ஆனந்தி
|