சசிகுமார் கரியர்ல முதல் A படம் இது...



‘‘ஒரு கதைக்கு ஹீரோ, தயாரிப்பாளர் பொருத்தமாகக் கிடைத்தாலே அந்தப் படம் பாதி வெற்றி அடைந்த மாதிரி... அது ‘நான் மிருகமாய் மாற’ படத்துல எனக்கு கிடைத்தது...’’ என்கிறார் இயக்குநர் சத்ய சிவா. டீசர், டிரெய்லரை பார்க்கும்போது பழிவாங்கும் கதை போல் தெரிகிறதே?

நான் இயக்கிய ‘கழுகு’, ‘கழுகு - 2’ படங்களுக்குப் பிறகு வித்தியாசமான படங்களை எடுக்க முடிவு பண்ணினேன். அப்படி ‘சிவப்பு’ வந்தது.சசிகுமார் சாருக்கு கதை பண்ணும்போது கண் முன்னாடி வில்லேஜ் லுக் வந்துபோகும். அவர் என் கையில் கிடைத்தபோது அவரும் பண்ணாத விஷயமாக இருக்கணும், நானும் பண்ணாத விஷயமாக இருக்கணும் என்று முடிவு பண்ணியதோடு, வித்தியாசமான கதைக்களமாக இருக்க வேண்டும் என்று உருவாக்கிய ஸ்கிரிப்ட் இது.

இது கதையாக சொல்லும்போதே ரெகுலர் டெம்ப்ளேட்ல இருக்கிற மாதிரியான உணர்வை கொடுக்கும். குடும்பத்தை காப்பாற்ற ஒரு காமன்மேன் சந்திக்கிற பிரச்னைகள்தான் படம். ஆனால், திரைக்கதை, ஹீரோவின் கேரக்டர், கதைக்களம் எல்லாமே புதுசா இருக்கும்.இந்த மாதிரி ஜானர்ல தமிழில் நிறைய படங்கள் வந்துள்ளது. கார்த்தி சாரின் ‘நான் மகான் அல்ல’ படமும் இந்த ஜானர்ல வந்த படம்தான். கதையாக கேட்கும்போது ஒரு ஃபீல் கொடுக்கும். ‘கழுகு’ படத்துக்குப் பிறகு எனக்கு சொல்லும்படியாக பிரேக் கிடைக்கவில்லை. இந்தப் படம் எனக்கு பிரேக் த்ரூ படமாக இருக்கும்.

சசிகுமார் என்ன சொல்றார்?

கதைப்படி சவுண்ட் என்ஜினீயராக வர்றார். அவருடைய கேரக்டர் பேர் பூமிநாதன். கதை எழுதும்போதே ஹீரோ கேரக்டரை சாதாரண ஆளாக நினைத்து எழுதினேன். கதையில் எங்கும் ஹீரோயிசம் இருக்காது. ஆனால், ரியாலிட்டி இருக்கும். எந்த காட்சியும் கதைக்கு அந்நியமாக இருக்காது. எல்லாமே லைவ்வாக இருக்கும். அந்த வகையில் கதைக்கு உள்ளே சசிகுமாரை கொண்டு வந்ததை ஒரு சவால் என்றே சொல்லலாம். அவருடைய முந்தைய படங்களில் நிறைய ஃபைட் பண்ணியிருப்பார், டயலாக் பேசியிருப்பார். இதில் ஃப்ரெஷ் சசிகுமாரைப் பார்க்கலாம்.

படத்தில் எகிறிக் குதிக்கிற மாதிரியான ஃபைட் கிடையாது. பக்கம் பக்கமாக டயலாக் கிடையாது. இதுவரை சசிகுமார் முழுமையான சிட்டி சப்ஜெக்ட்டில் நடிக்கவில்லை. இந்த மாதிரி விஷயங்கள் சசிகுமார் சாரை வித்தியாசமாக காண்பித்திருக்கும். சசிகுமார் சார் தவிர வேற ஆர்ட்டிஸ்ட் இந்த கதை பண்ணும்போது அது ரெகுலர் ஃபீல் கொடுப்பதைத் தவிர்த்திருக்க முடியாது. சசி சார் பண்ணும்போது அது ஹைலைட்டா இருந்துச்சு. அப்படித்தான் கதைக்குள் வந்தார்.

சசி சாரின் இன்வால்வ் மென்ட் வேற லெவல். அவர் அடிப்படையில் ஒரு இயக்குநராக இருந்தாலும் அந்த ஃபீல் வராதளவுக்குதான் படப்பிடிப்பில் அவருடைய அப்ரோச் இருக்கும். ஒரு நடிகராகத்தான் ஸ்பாட்டுக்கு வருவார். கதைக்கும் கேரக்டருக்கும் என்ன தேவையோ அதை முழுமையாகக் கொடுக்க என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதையெல்லாம் செய்தார்.
சவுண்ட் என்ஜினியர் வேலை எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தாலும் சவுண்ட் என்ஜினியர்களின் ஒர்க்கிங் ஸ்டைல் எப்படி இருக்கும் என்பதை ஸ்டூயோக்களுக்கு விசிட் அடித்து அதை உள்வாங்கி நடித்தார்.  

வில்லனாக யார் பண்றாங்க?

விக்ராந்த். ஒரு கதையோட வெற்றி அந்த கதையில் யார் நெகட்டிவ் ரோல் பண்ணுகிறார்களோ அவர்கள் கையில்தான்  இருக்கிறது. இந்தக் கதையும் அந்த ரகமே. அப்படித்தான் விக்ராந்த் வந்தார். வில்லன் என்றால் மனதுக்குள் ஒரு ஃபிரேம் பண்ணி வைத்திருப்போம். என்னுடைய வில்லன் கேரக்டர் பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் தெரிவார். ஆனால், வில்லனைப் பார்க்கும்போதே நம்மையும் அறியாமல் ஒரு பயம் உண்டாகும்.

ஹீரோயினாக ஹரிப்ரியா. குடும்பத் தலைவியாகவும், ஆறு வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்கணும்; ஹீரோவின் மனைவியாக நடிக்கிறவங்க கொஞ்சம் மெச்சூரிட்டியாக இருக்கணும் என்ற அடிப்படையில் ஹரிப்ரியா கதைக்குள் வந்தார். எந்த கோணத்திலும் ஹரிப்ரியாவாகத்  தெரியாமல் கேரக்டராகத் தெரிவார். வேறு எந்த ஹீரோயின் நடித்திருந்தாலும் ஹீரோயின் என்ற இமேஜ் கண் முன்னாடி வந்து நின்றி ருக்கும்.

படத்துக்கு பலமே பாடல்கள்னு சொல்வாங்க... நீங்கள் பாடல்கள் வைக்காதது ஏன்?

மியூசிக் ஜிப்ரான் பண்ணியிருக்கிறார். பின்னணி இசை ஆழமாக தேவைப்பட்டதால் படத்துல பாடல்களை வைக்கவில்லை. கதை மியூசிக்கை பேலன்ஸ் பண்ணி இருக்கும். அதனால் அவர் சில இடங்களில் சைலன்ஸ் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணமுடியாத அளவுக்கு எல்லா காட்சிக்கும் மியூசிக் போட்டிருக்கிறார். ரொம்ப அழகாக பண்ணிக்கொடுத்தார். சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கே பயமாக இருக்கிறது. அவ்வளவு யதார்த்தமாக காட்சிகள் இருந்தது என்றார்.

ஒளிப்பதிவு ராஜா பட்டாஜி. ‘பியார் பிரேமா காதல்’ பண்ணியவர். டெக்னிக்கலாக ஸ்ட்ராங் பர்சன். அவருடைய ஒர்க் பேசப்படும்.எடிட்டர் பிரவீன். என்னுடன் ‘கழுகு’ பண்ணியவர். படத்துல எடிட்டிங்கிற்கு தனி பேட்டர்ன் இருக்கும். அதை சரியாகப் பண்ணினார்.‘செந்தூர் பிலிம்ஸ்’ ராஜா சார் பற்றி சொல்லியே ஆகணும். கதையைக் கேட்டதும் ஆர்வமாகி, வித்தியாசமான படமாக இருக்கும் என்று முழு சுதந்திரம் கொடுத்தார்.

படத்துல என்ன மெசேஜ் சொல்லப் போறீங்க?

நம்முடைய வாழ்க்கையில் நமக்கே தெரியாமல் ஒருசில பிரச்னைகள் வரும். அந்தப் பிரச்னைகளிலிருந்து எந்தவித பின்புலமும் இல்லாதவன் எப்படி தன்னுடைய வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதற்கான ‘கைட் லைனா’க இந்தப் படம் இருக்கும். படத்துல வரும் பிரச்னைகளை ஆடியன்ஸ் தன்னுடன் கனெக்ட் பண்ணிப் பார்க்க முடியும்.

‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்குமளவுக்கு படத்துல வன்முறைக் காட்சிகள் உள்ளதா?

சசிகுமார் சார் கரியர்ல முதல் ‘ஏ’ படம் இது. அதுவும் வயலன்ஸ் காட்சிகளுக்காக கொடுத்தார்கள். படத்துல எந்த இடத்திலும் வன்முறை இருக்காது. ‘வயலன்ஸ் காட்சிகள் சினிமாயிசமாக இல்லாமல் யதார்த்தமாக இருந்தது’ என்று சென்சார் போர்டு அதிகாரிகள் சொன்னார்கள். இயல்பு வாழ்க்கையில் ஒருவர் நம்மைத்  தாக்கும்போது ரத்தம் இருக்கும் என்றால் கதையிலும் ரத்தம் இருக்கும். சண்டைக் காட்சிகள் வழக்கமான சண்டைக் காட்சிகளாக இல்லாமல் யதார்த்தமாக இருக்கும்.

ஆறு நிமிட ஃபைட்டை சிங்கிள் ஷாட்ல எடுத்தோம். அதுல இருக்கிற வயலன்ஸுக்காக ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தார்கள். சசி சாருக்கு இந்தப் படம் ப்ரேக்கிங்காக இருக்கும். அவருக்கு என்று ஃபேன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். அவர்களை எந்த இடத்திலும் இந்தப் படம் ஏமாற்றாது.

அடுத்து எந்த ஹீரோவுக்கு கதை சொல்லப் போறீங்க?

ஒரு பேட்டியில் சுந்தர்.சி சார், ‘படம் வெளிவந்த அன்றே ஃபோன் வந்தால் படம் ஹிட் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு மூன்று நாள் கழித்து ஃபோன் வந்தால் சுமார் என்று எடுத்துக்கொள்ளுங்கள். போன் வரலையா... படம் ஃப்ளாப். அப்புறம், நீங்க ஃபோன் பண்ணி டிரை பண்ண கத்துக்குங்க’ என்று சொல்லியிருந்தார். இதுதான் சினிமா வாழ்க்கையின் யதார்த்தம். இந்தப் படம் ரிலீஸ் அன்று எனக்கு ஃபோன் அழைப்பை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  

சமீப காலமாக இரண்டாம் பாகம் நிறைய வெளிவருகிறது... அது குறித்து ஒரு படைப்பாளியாக உங்கள் கருத்து?

நானும் ‘கழுகு’ படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளேன். பார்ட் - 2 எடுப்பது தவறு என்று சொல்லமாட்டேன். சில கதைகளை ஒரே பாகத்தில் சொல்வது கடினம். அதுவே, வலுக்கட்டாயமாக பண்ணும்போது அது விமர்சிக்கப்படுகிறது. நேரத்தை கருத்தில் கொண்டுதான் பார்ட் 2 எடுக்கிறார்கள். கதைக்கு தேவைப்பட்டால் பார்ட் - 2 எடுப்பதில் தவறு இல்லை.

எஸ்.ராஜா