Must Watch



மோனிகா ஓ மை டார்லிங்

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் இந்திப்படம், ‘மோனிகா ஓ மை டார்லிங்’.ரோபோ தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம், யூனிகார்ன். அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் தேவ் பிரகாஷ், ரோபோவால் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார். ஆனால், இந்த சம்பவம் விபத்து போல சித்தரிக்கப்படுகிறது.

யூனிகார்னின் முக்கிய பொறுப்புக்கு வருகிறார் ஜெயந்த். நிறுவனத்தின் சிஇஓவின் மகளைத் திருமணம் செய்யப்போகிறார் ஜெயந்த். அதே நேரத்தில் நிறுவனத்தில் வேலை செய்யும் மோனிகா என்ற பெண்ணுடன் காதலில் இருக்கிறார் ஜெயந்த்.

இந்நிலையில், தான் கர்ப்பமடைந்ததாக சொல்கிறாள் மோனிகா. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைக் காட்டி ஜெயந்தை ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்கிறாள் மோனிகா. அந்த ஹோட்டலுக்குச் செல்கிறான் ஜெயந்த். அங்கே நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரவிந்தும், சிஇஓவின் மகனும் இருக்கின்றனர்.

ஜெயந்த்தைப் போலவே அரவிந்த், சிஇஓவின் மகனிடமும் நீங்கள்தான் என் கர்ப்பத்துக்கு காரணம் என்று ஹோட்டலுக்கு வரவழைத்திருக்கிறாள் மோனிகா. மூன்று பேரும் சேர்ந்து மோனிகாவை கொலை செய்யத் திட்டமிடுகின்றனர். சூடு பிடிக்கிறது திரைக்கதை. ஓர் அட்டகாசமான திரில்லிங் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வாசன் பாலா.

லாஸ்ட் புல்லட் 2

இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி, சக்கைப்போடு போட்ட பிரெஞ்ச் திரைப்படம், ‘லாஸ்ட் புல்லட்’. இதன் அடுத்த பாகம்தான் ‘லாஸ்ட் புல்லட் 2’.  
திறமையான கார் மெக்கானிக் லினோ. சின்னச் சின்ன குற்றங்களில் ஈடுபட்டு வந்தவன்; அதி புத்திசாலி. அதனால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளைக்
கண்டுபிடிப்பதற்காக வலுக்கட்டாயமாக காவல்துறையில் சேர்க்கப்படுகிறான்.

இந்நிலையில் அவனுக்கு காவல்துறையில் குரு போல இருந்த ஒருவரும், அவனது சகோதரனும் கொல்லப்படுகின்றனர். தனது குருவையும், சகோதரனையும் காவல்துறையைச் சேர்ந்த சிலர்தான் கொலை செய்திருக்கின்றனர் என்பதை அறிகிறான் லினோ. இன்னொரு பக்கம் போதைப் பொருள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க லினோவின் உதவியை நாடுகிறது காவல்துறை.

ஒரு பக்கம் காவல் துறைக்கு சேவை செய்துகொண்டே, இன்னொரு பக்கம் காவல் துறைக்குள் இருக்கும் எதிர்களை லினோ எப்படி பழி தீர்த்துக்கொள்கிறான் என்பதே மீதிக்கதை.
ஆக்‌ஷன், திரில்லிங் என அட்டகாசம் செய்திருக்கிறது இந்தப் படம். மொழியைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தும் விதமாக திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் பியரெட்.

சபாஷ் சந்திரபோஸ்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி நம் கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது ‘சபாஷ் சந்திரபோஸ்’ எனும் மலையாளப்படம். எண்பதுகளின் ஆரம்பத்தில் உள்ள ஒரு குக்கிராமம். அந்த கிராமத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ஊரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். யதேந்திரன்தான் அந்த கிராமத்திலேயே வசதியானவர். அவர் வீட்டில் மட்டும்தான் டிவி இருக்கிறது. அதுவும் பிளாக் அண்ட் ஒயிட். இரவானதும் ஊரே டிவி பார்க்க யதேந்திரன் வீட்டுக்கு வந்துவிடும்.

யதேந்திரனின் நீண்ட கால நண்பனான சுபாஷ் சந்திரபோஸும் அங்கேதான் இருப்பான். ஞாயிறு என்றால் மதிய வேளையிலே யதேந்திரன் வீடு நிறைந்திருக்கும்.
இந்நிலையில் டிவி சம்பந்தமாக யதேந்திரனுக்கும், சந்திரபோஸுக்கும் இடையில் சண்டை ஏற்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் புது கலர் டிவி வாங்குகிறேன் என்று யதேந்திரனிடம் சவால் விடுகிறான் சந்திரபோஸ்.

கையில் பத்து ரூபாய் இல்லாத சந்திரபோஸ் சவாலை வென்றானா, தோற்றானா என்பதே நகைச்சுவை திரைக்கதை. நம் வீட்டில் டிவி வாங்குவதற்கு முன்பு டிவி பார்ப்பதற்காக மட்டுமே பக்கத்து வீட்டுக்குச் சென்ற நினைவுகளை மீட்டெடுக்கிறது இந்தப் படம். படத்தின் இயக்குநர் வி.சி.அபிலாஷ்.


ரோர்ச்சாக்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வியப்பளித்த மலையாளப்படம், ‘ரோர்ச்சாக்’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
துபாயில் வசிக்கும் இந்திய பிசினஸ் மேன் லூக் அந்தோணி. தனது மனைவியுடன் கேரளாவில் உள்ள ஒரு கிராமத்துக்கு விசிட் அடிக்கும்போது ஒரு விபத்து நிகழ்கிறது. லூக்கும் விபத்தில் அடிபட்டு மயக்கமடைகிறார்.

இயல்பு நிலைக்கு அவர் திரும்பும்போது மனைவியைக் காணவில்லை. போலீஸில் புகார் தெரிவிக்கிறார். காவல்துறை சாக்குப் போக்கான காரணத்தை வைத்து வழக்கை முடித்துவிடுகிறது. அந்த கிராமத்திலேயே ஒரு பழைய வீட்டை வாங்கி, மனைவியைத் தேட ஆரம்பிக்கிறார் லூக். உண்மையில் லூக்கின் மனைவி காணாமல் போய்விட்டாரா?

அந்த கிராமத்தினருக்கும் லூக்கிற்கும் என்ன சம்பந்தம்? எதற்காக லூக் அங்கே வந்திருக்கிறார்? அவரது மனைவிக்கு என்னவானது? இதுபோன்ற கேள்விகளுக்கு வித்தியாசமான முறையில் பதில் சொல்கிறது திரைக்கதை. ஸ்கிரிப்ட், இசை, ஒளிப்பதிவு என சகலத்திலும் புது அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம். லூக்காக மிரட்டியிருக்கிறார் மம்முட்டி. படத்தின் இயக்குநர் நிசாம்பஷீர்.

தொகுப்பு: த.சக்திவேல்