எப்போது முடியும் ரஷ்யா - உக்ரைன் போர்..?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பத்திரிகையாளர் ஒருவர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார். “உக்ரைன் போர் எப்படி முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்?” அதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பதில் இந்த ஒட்டு மொத்த பிரச்னையையும் எளிய ஒரு வரியில் அடிக்கோடிடுவதாக இருந்தது. “எனக்குத் தெரியாது. போரை நாங்கள் ஆரம்பிக்காதபோது அது எப்படி முடியும் என்று நாங்கள் எப்படி யூகிக்கமுடியும்?”
 இந்தப் போர் பிப்ரவரி மாதம் ஆரம்பித்தபோது யாருமே அது இவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக ரஷ்யா.வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா ஒரு சிறிய நாட்டை, அதுவும் ஒரு காமெடி நடிகரை புதிய அதிபராகக் கொண்ட நாட்டை, எளிதாகத் தனது படைபலத்தைக் காட்டி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிடலாம் என்று கனவு கண்டது.

யாருமே எதிர்பாராத வகையில், ஏன் அவரே கூட எதிர்பாராத வகையில் ரஷ்யாவை எதிர்த்து ஜெலன்ஸ்கி இது வரை கடந்த பத்து மாதங்கள் தாக்குப்பிடித்திருக்கிறார். தாக்குப்பிடித்ததோடு அல்லாமல் மேற்கு உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்த சில பகுதிகளில் இருந்து அவர்களை விரட்டவும் முடிந்திருக்கிறது.  போர் ஆரம்பித்தபோது ரஷ்யா நான்கு முனைகளில் இருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. முக்கியமாக வடக்கில் இருந்து உக்ரைன் தலைநகரான கீவைத் தாக்கி கைப்பற்ற நினைத்தது. தலைநகரைக் கைப்பற்றினால், ஒரு தேசத்தின் அதிகார பீடத்தை அசைத்து விடலாம்; உக்ரைன் அடிபணிந்துவிடும் என்று கணக்கிட்டது. ஆனால், உக்ரைன் மிகத்தீவிரமாக போரிட்டு தனது தலைநகரைக் காத்துக்கொண்டது. 
இந்த திருப்புமுனைக்கு பெரும் உறுதுணையாக இருந்தது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உட்பட்ட நேட்டோ (NATO) நாடுகள், உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவியும், பயிற்சிகளும்.
அந்த வகையில் இது ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கும் ஒரு மறைமுகப் போர் (Proxy War) என்றால் அது மிகையில்லை.
இந்த போர் உருவாக்கிய அச்சத்தினால், முன்பு எந்த பக்கமும் சாராமல் நடுநிலையாக இருந்த பின்லாந்தும் ஸ்வீடனும் கூட இப்போது நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டுகின்றன. அந்த நாட்டு மக்களிடையே அதற்கு பெரும் ஆதரவு உருவாகியுள்ளது. உக்ரைனுக்கு நிகழ்ந்தது போல தங்களுக்கும் நிகழலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
புதிய நாடுகள் சேர்வதை இப்போது இருக்கும் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது இந்த ஒப்புதல் வழங்கும் பட்டியலில் துருக்கியும், ஹங்கேரியும் மட்டுமே பாக்கி. உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது என்ற காரணத்தைச் சொல்லி ஆரம்பிக்கப்பட்ட போர் மேலும் இரண்டு நாடுகளை நேட்டோவில் இணைவதை நோக்கித் தள்ளியிருக்கிறது.
ஒரு பேச்சுக்கு உக்ரைன் நேட்டோவில் சேரவே சேராது என்று வைத்துக்கொள்வோம். அப்படி நிகழ்ந்தால் கூட ரஷ்யாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்றும் சொல்லிவிடமுடியாது. நேட்டோ நாடுகளான ருமேனியாவிலும், போலந்திலும் ஏற்கனவே, தேவைப்பட்டால், ரஷ்யாவை நோக்கி ஏவுகணைகளைச் செலுத்தும் வசதி உள்ளது. ஸ்பெயினுக்கு கப்பலில் இருந்தே இவ்வாறு ஏவுகணைகளைச் செலுத்தும் வசதி உள்ளது.
எனவே, உக்ரைனில் இருந்து ரஷ்யாவை பத்து நிமிடத்தில் ஒரு ஏவுகணை தாக்க முடியும் என்றால் பக்கத்து நாட்டில் இருந்து தாக்க பதினைந்து நிமிடம் ஆகலாம். அவ்வளவுதான் வித்தியாசம்.
எனவே உக்ரைனால் ரஷ்யாவுக்கு ஆபத்து என்ற நிலைப்பாடு நாளுக்கு நாள் வலுவிழந்துகொண்டே வருகிறது. மற்றொருபுறம், இவ்வாறு நீளும் ஒரு போரின் இழப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இரண்டு தரப்பிலும் தோராயமாக இரண்டு லட்சம் வீரர்கள் மரணித்தோ காயமடைந்தோ இருப்பதாக ராணுவ வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த சண்டையில் உயிர் இழந்த பொதுமக்கள் எண்ணிக்கை தனி. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளார்கள்.
இந்தப் போரினால் ஏற்படும் அதிர்வுகள் உலகெங்குமே பலத்த பொருளாதார மற்றும் வர்த்தக பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. ரஷ்யா உலகத்திலேயே மிகப்பெரிய எரிவாயு உற்பத்தியாளர். ஜெர்மனி தனது எரிவாயு தேவையில் 25% ரஷ்யாவைத்தான் நம்பியுள்ளது. உக்ரைன் உட்பட வேறு சில ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எரிவாயுவை நம்பியுள்ளன. ஐரோப்பிய கடுங்குளிரில் வீடுகளில் வெப்பமூட்ட எரிவாயு சேவை இன்றியமையாதது.கோதுமை உற்பத்தி, விவசாய உரம் போன்ற விஷயங்களுக்கு உக்ரைன் புகழ்பெற்றது. பல ஆப்பிரிக்க நாடுகள் இந்த கோதுமையைச் சார்ந்தே உள்ளன.
இந்தப் போர் இவைகளை எல்லாம் முடக்கியுள்ளது. மேலும் இந்தப் போரை முன்வைத்து அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா மீது உருவாக்கிய பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவிலும் பலவித நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. ஏற்கனவே கோவிட் முடக்கத்தால் தடுமாறி வரும் உலகப் பொருளாதாரம் இன்னுமே தள்ளாட ஆரம்பித்திருக்கிறது.
அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாதவாறு விலைவாசி உயர்வு (Inflation) ஏற்பட்டுள்ளது. எரி எண்ணெய் (fossil fuel) உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC தனது உற்பத்தியை செயற்கையாகக் குறைப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வழிசெய்கிறது. ஃபேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு, வரும் ஆண்டுக்கான ஊக வருமானத்தின் அளவைக் குறைத்து மதிப்பிடுதல் என்று புயலில் தடுமாறும் கப்பலை ஸ்திரமாக்குவதில் கவனம் செலுத்துகின்றன. புதிய தொழில்களில் முதலீடு செய்பவர்களும் இந்த நிச்சயமற்ற தன்மையால் பல முதலீட்டு முடிவுகளைத் தள்ளிப்போடுகிறார்கள். உலகளாவிய பொருளாதார முடக்கம் (recession ) உருவாகும் வாய்ப்பு இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
இவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கான பதில் அவ்வளவு எளிதானது அல்ல.இவ்வளவு இழப்புகளுக்குப் பின்னர், தானாக ஆரம்பித்த ஒரு போரில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வது, ரஷ்யாவில் புடினின் நாயக பிம்பத்தைக் கலைப்பதாக இருக்கும். புடின் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க அது ஒரு தடையாகவும் அமையலாம். எனவே, இந்த சூழலில் இருந்து கெளரவமான முறையில் வெளியேறும்படியான வழிகள் (Honorable Exit ) அவ்வளவு சுலபமானவை அல்ல.
உக்ரைன் நிலைமையும் இங்கு சிக்கலானது. உக்ரைன் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் உள்ளது. சளைக்காமல் தீவிரமாக இதில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு முயல்வது உக்ரைனின் உறுதி நீர்த்துப்போவதான ஒரு பிம்பத்தை அளிக்கும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு இந்தப் போர் ஒரு இருத்தலியல் அபாயம். இதில் தோற்றால் மொத்த நாட்டையும் ரஷ்யாவிடம் இழக்க நேரிடும். இது அவர்களுக்கு வாழ்வா சாவா பிரச்னை.
இப்படி இரண்டு தரப்புமே ஒரு சமரசப்புள்ளியை நோக்கி நகரமுடியாத சூழலில் வெளியில் இருக்கும் பிற நாடுகளோ அமைப்புகளோதான் அமைதிக்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.
இப்படியான சிக்கல்களில் உலகெங்கிலும் தலையிட்டு தனக்கு சாதகமான நிலைப்பாடுகளை நோக்கி அதை தள்ளிக்கொண்டு வரும் உத்திக்கு அமெரிக்கா பெயர் பெற்றது. இதில் அமரிக்காவுக்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாகவே ஒருதரப்பின் சார்பில் களத்தில் இறங்கியுள்ளது.
அமெரிக்காவுக்கு இது ரஷ்யா மட்டுமே குறித்த சிக்கல் அல்ல. இன்று ரஷ்யா சர்வதேச விதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு அண்டை நாட்டை தன் இஷ்டப்படி ஆக்கிரமிப்பதை கண்டும்காணாமல் விட்டுவிட்டால் நாளை சீனாவும் இதை அடி ஒற்றி தைவானையோ அல்லது தென்சீனக்கடலிலோ அத்துமீறலாம். இன்று ரஷ்யாவை கண்டிக்காமல்விட்டால் அது நாளை சீனாவுக்கு அளிக்கும் ஆமோதிப்பாகவும் அமைந்துவிடும். எனவே, அமெரிக்கா இதை உலக நடப்புகளின் மீது தனது வல்லரசு என்னும் தகுதியை அடிக்கோடிடும் நிகழ்வாகவே எடுத்துக்கொள்கிறது.
ஐரோப்பாவின் நிலையோ இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை. இரண்டாம் உலகப்போருக்குப் பின், குறிப்பாக சோவியத் ஒன்றியம் சிதறியபின். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா வுடன் நெருக்கமாக வியாபாரத்தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு விட்டன.இன்னொருபுறம் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதை அனுமதித்தால் நாளை வேறொரு நாட்டை ஆக்கிரமிக்கமாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. ஜியார்ஜியாவின் மீது ஏற்கனவே ரஷ்யாவின் கண் உள்ளது.
என்னதான் எல்லோரும் நேட்டோவில் அங்கத்தினராக இருந்தாலும் அமெரிக்காவின் விருப்பத்துக்கு மாறாக பெரிய நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது, ஒற்றுமையின் பொருட்டு நேட்டோ என்ற ஒற்றை அணியாகவே செயல்படமுடியும். இதையெல்லாம் விட்டு வெளியே பார்த்தால் ரஷ்யாவுக்கு கொஞ்சமாவது அழுத்தம் கொடுக்க முடிகிற நாடுகள் பட்டியலில் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளே உள்ளன.
இதில் இந்தியா ராணுவ தளவாடங்களுக்காக ரஷ்யாவைப் பெரிதும் சார்ந்திருக்கும் நாடு. நேரடியாக ரஷ்யாவை எதிர்த்துக்கொள்ள முடியாத சூழல். சீனா வரலாற்று ரீதியாகவே ரஷ்யாவின் நட்பு நாடு. மேலும் உக்ரைன் போரினால் அமெரிக்காவின் கவனம் முழுதும் தன் மீது விழாதவாறு பார்த்துக்கொள்ளும் என்றும் சீனா கணிக்கிறது.
இவை அனைத்தையும் விட அனைவரின் தலைகளின் மீதும் ஊசலாடிக்கொண்டிருக்கும் கத்தி ஒன்று உள்ளது.அது அணு ஆயுதப் பிரயோகம் என்னும் ஆபத்து. அதீத நெருக்கடி ஏற்பட்டால் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கலாம் என்ற அச்சம் ராணுவ வட்டங்களில் மிகவும் சீரியஸாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. Tactical Nuclear Weapon எனப்படும் சிறிய அணு ஆயுத பயன்பாடு உக்ரைனின் எதிர்த்துப் போரிடும் திறனை மிக எளிதாக முடக்கிவிடும். அப்படி ஒன்று நிகழ்ந்தால் நேட்டோ நாடுகள் அதற்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதும் ஒரு கேள்விக்குறியே. அணு ஆயுதங்களை முதலில் யார் தொட்டாலும் அழிவு அனைவருக்குமே பொதுவானதுதான்.
இன்னும் சில வாரங்களில் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் குளிர்காலம் தொடங்கிவிடும். ரஷ்யா கடுங்குளிரில் போர் நடவடிக்கைளைத் தொடருவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏற்கனவே பெரும் இழப்புகளைச் சந்தித்து சோர்ந்திருக்கும் இரண்டு தரப்புக்குமே இந்த ஓரிரு மாதங்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது நீண்ட கால அமைதிக்கு பெரும் பங்களிப்பை ஆற்றுவதாக இருக்கும்.
கெர்சோன் தோல்வியை அடுத்து ரஷ்யா, டெனிப்ரோ (Dnipro) நதியின் கிழக்குக் கரைக்கு தள்ளப்பட்டு விட்டது. அதன் மேற்குக் கரை உக்ரைன் கட்டுப்பாட்டில். இந்த இயற்கையான பிரிவை ஒரு தற்காலிகக் கட்டுப்பாட்டு எல்லையாக முன்வைத்து ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர உலக நாடுகள் தீவிரமாக முயலவேண்டும்.
உலகமயமான சமகால வாழ்வில் போர் என்பது ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா வரை ஒவ்வொரு சாதாரண குடிமகனின் தலையிலும் விடியும் ஒரு பிரச்னையாகிவிட்டது. பலப் பரீட்சைக்கான காலம் முடிந்துவிட்டது. பேச்சு வார்த்தை மட்டுமே இன்னும் நம் கையில் இருக்கும் நேர்மறை ஆயுதம்.அதை நோக்கி இரு தரப்பையும் கொண்டுவர எல்லா உலக நாடுகளும் அழுத்தம் அளிக்க வேண்டும். அதன் முதல் கட்டமாக உடனடி போர் நிறுத்தத்தை எல்லா நாடுகளுமே கோரவேண்டும், இந்தியா உட்பட.
கார்த்திக் வேலு
|